புதிய கட்சி அமைக்கும் நோக்கம் இல்லை: ஈ.பி.டி.பி.யிலிருந்து விலகிய சந்திரகுமார் பேட்டி
அரசியல் மாற்றத்தை உருவாக்கும் தரப்புகளோடு தான் எனது உறவு தொடரும். ஈ.பி.டி.பி.யில் இருந்து விலகியுள்ள போதிலும் புதிய கட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கு-ழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கிறின் கிராஸ் விடுதியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகியுள்ளேன். என்னுடைய விலகல் என்பது தமிழ் மக்களின் அபிலாஷை காரணமாகவே இடம்பெற்றது. இவ் விலகல் காரணமாக ஊடகங்கள், சமூக வலைத் தளங்களில் இருந்து பல்வேறு தகவல்கள், செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இன்றைய தமிழர் அரசியலில் மாற்றமான போக்கு வரும் வந்து போகும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இன்றைய அரசியல் சூழல் தமிழர்களின் உரிமைகளையும் அவர்களின் அபிலாஷைகளையும் தீர்க்கக்கூடிய காலமாக மாறியிருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன். அந்த கட்டத்தில் மக்களுக்கு உண்மையான தேவையான தீர்வாக அமைய வேண்டுமானால் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல் தரப்புக்கள் சமூக மட்ட அமைப்புக்கள் எல்லாம் ஒரே குரலில் அபிலாஷைகளை உண்மையாக வென்றெடுக்கக்கூடிய காலகட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்பதை நம்பிச்செயற்பட வேண்டும்.
அந்த வகையில் தமிழ் மக்களது உண்மையான விடுதலையை வென்றெடுப்பதில் நான் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றேன். குறிப்பாக நான் 1980 களில் என்னை ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டேன். போராட்டத்தில் இணையும் போது வெறும் இன விடுதலையை மட்டும் வைத்து ஆயுதப் போராளியாக ஆக்கிக் கொள்ளவில்லை. விடுதலை அல்லது சுதந்திர உரிமை என்பது எல்லா மக்களுக்கும் உண்மையாக கிடைக்கவேண்டும் என்பதற்காக தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டோம்.
ஆனால் இன்று அந்த நிலைமைகளை பார்க்கும்போது நாங்கள் இன விடுதலை, இனங்களுக்கான விடுதலை என்ற அடிப்படையில் தான் சிந்திக்கின்ற போக்கு இன்று தமிழர் அரசியலில் இருக்கிறது. ஆனால் அது அப்படியல்ல. எங்களுக்குள் நிறைய பிரச்சினைகள் இருக்கிறன்றன. குறிப்பாக சமூக ரீதியான பிரச்சினை ஏராளம் இருக்கிறது. அந்த விடுதலை உரிமையை வென்றெடுப்பது என்பது அவர்களுக்குமான விடுதலையையும் வென்றெடுப்பது அதுமட்டுமன்றி பிரதேச ரீதியான வேறுபாடு காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் நான் வெளிப்படையாகப் பேசியுள்ளேன். அவர்கள் கடந்த 30 வருடமாக வடமாகாண தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.
ஆனால் எங்களுடைய அரசியல் அவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக்கி உள்ளது. அவர்களுக்கான உண்மையான அர்த்தபூர்வமான பொருளாதார, கல்வி அடிப்படையிலான மேம்பாட்டை உருவாக்க வேண்டும். மற்றும் பால் நிலை சமத்துவம் இல்லை. இத்தகைய சூழலில் உண்மையான உரிமைகளை வென்றெடுப்பது என்பது எல்லோருக்குமான ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வாக அமைய வேண்டும். இதன் அடிப்படையில் அண்மையில் அரசியலமைப்புத் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிலும் எனது கருத்தை வெளியிட்டேன். குறிப்பாக அரசியல் அமைப்பில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகளையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பாக உருவாகவேண்டும் என கூறியுள்ளேன். ஆகவே இந்தக் கருத்து பரவலாக பல பகுதிகளிலும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே இது ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் இதனை உருவாக்க வேண்டும். பரந்துபட்ட தமிழ்த் தரப்பிற்குள் ஜனநாயக கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும். அதற்கு என்னுடைய முயற்சியையும் செலுத்தலாம் என்ற அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியல் இருந்து விலகி பொது அரங்கிற்கு வந்துள்ளேன். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டங்களில் நான் எனது அரசியல் செயற்பாட்டை அல்லது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்தி மக்களின் மேம்பாட்டிற்கு உட்கட்டமைப்பு, பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி, தொழில் வாய்ப்புக்கள் என பலதரப்பட்ட வகையில் எனது உழைப்பை செலுத்தியிருக்கிறேன். இப்போதும் அப்பகுதிகளில் முற்றுமுழுதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களது வாழ்க்கை மேம்பாடு என்பது வளர்ச்சியடைந்து விட்டது என்று கருதவில்லை. அவர்களது மேம்பாடு முக்கியமானது. அந்த செயற்பாட்டை அம் மக்களுக்கு செய்வேன். தேர்தலுக்கு பின்னரும் அந்த மக்களுக்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
அந்த மக்களின் அபிலாஷைகள் அரசியல் தெரிவுகள், அரசியல் நிலைப்பாடுகள் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு வேறுபட் டிருந்தது. இதனை இந்த தேர்தல் முடிவில் கண்டுகொண்டேன்.
இதன் அடிப்படையில் தான் அவர்கள் அபிலாஷைகள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெளியே வந்துள்ளேன் என்றார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்வி களுக்கு பதிலளிக்கையில், 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இத்தகைய வெளியேற்றம் இருந்தது. அதுபோல் இதுவும் இருக்குமா எனக் கேட்டபோது, அந்தகால சூழல் எனது சொந்தப் பாதுகாப்புக்காக வெளியேறினேன். தற்போதைய விலகல் முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்தது.
நான் இந்த மக்களுடன் நின்று கொண்டு மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து வெளியே வந்துள்ளேன். எதிர்காலத்தில் அரசியல் சூழல் எவ்வாறு மாறும். எல்லா தரப்பும் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒன்றிணையும் அரசியல் சூழல் இருக்கிறது. ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றன. தமிழர் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த வர்கள் இணைந்திருக்கிறார்கள்.
நான் நம்புகின்ற அரசியல் சூழல் இருக்குமாயின் நாங்கள் அனைவரும் ஓரணியில் வரலாம். எந்த அரசியல் தரப்புடனும் உடன்பாடு செய்தோ பேரம் பேசியோ வெளியில் வரவில்லை. நான் சுயாதீனமாக வெளியில் வந்துள்ளேன். எதிர் காலத்தில் நான் நம்புகின்ற என்னை நேசிக்கும் மக்கள் விரும்புகின்ற ஒரு அரசியல் தரப்பு வரும்போது என்னை நான் இணைத்துக் கொள்வது சாத்தியமாகலாம் என்றார்.
R-06