செய்திகள்

புதிய நியமனங்கள்: இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களின் மூலம் சரத் பொன்சேகாவின் கட்டுப்பாட்டுக்குள் இராணுவம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன்ன, பிரிகேடியர் அனுரா பெரேரா ஆகியோர் இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயதரட்ணாநயக்க இந்த வாரத்துடன் ஓய்வுபெறவிருக்கின்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அமயக்கோனின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்த நியமனங்கள் அவசரமாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை எனவும் தெரியவந்திருக்கின்றது. புதிய நியமனங்களின் மூலம் இராணுவத்தில் சரத் பொன்சேகாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகின்றது.