செய்திகள்

புதுக்குடியிருப்பு மாணவியின் மேற்படிப்புக்கு உதவும் சுவிஸ் கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகம் (படங்கள்)

சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிர்வாகத்தினர் மேற்படி ஆலயம் சார்பில் நம் மண்ணில் பல்வேறு வகையிலும் பாதிப்புற்று அவல வாழ்வு வாழ்ந்துவரும் தமிழ் உறவுகளிற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக உதவும் அறப்பணியில் ஈடுபட்டுள்ளது.இத்தகைய நற்பணியை இங்கு வடக்குப் பிரதேச சபை உபதவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் ஊடாக வழங்க முன்வந்துள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி புதுக்குடியிருப்பைச் சேர்ந்தபோரினால் தந்தையை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பல்கலைக்கழக மேற்படிப்புக்கு உதவும் வகையில் மாதாந்தம் ஒரு தொகையை வழங்க முன்வந்துள்ளது. இத்தொகையின் முதற்பகுதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (14.04.2015) சித்திரை புத்தாண்டு நாளில் மேற்படி மாணவிக்கு அவரது வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டது.

குறித்த நிதியுதவியை வலி.வடக்குப் பிரதேச சபையின் உபதவிசாளரும், வலி.வடக்கு மீள் குடியேற்றச் சங்கத் தலைவருமான ச.சஜீவன் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இதேபோன்று ஏனைய புலம்பெயர் ஆலய நிர்வாகத்தினரும், ஏனைய அமைப்புக்களும் உதவ முன்வருமானால் பலரின் வாழ்விற்கு ஒளி கிடைக்கும் என்பது நிச்சயம் என சஜீவன் தெரிவித்தார்.

இதேவேளை சுவிஸ் நாட்டிலுள்ள ஆலயமொன்று எமது மண்ணில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்திருப்பது முன்னுதாhரணமான செயற்பாடெனப் பாராட்டியுள்ள சமூக ஆர்வலர்கள் எமது மண்ணிலுள்ள ஆலயங்களும் இவ்வாறான செயற்பாடுகளைச் சமூக மட்டத்தில் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையெனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

யாழ்.நகர் நிருபர்-