செய்திகள்

புறக்கணிப்புகள் குறைக்கப்பட்டுள்ளனவே தவிர மாற்றப்படவில்லை-பிரசன்ன இந்திரகுமார் தெரிவிப்பு

கடந்த காலத்தில் நாங்கள் பலதை இழந்தாலும் எதிர்வரும் காலங்களில் எமது மக்களின் உரிமைகளுடன் சேர்த்து பொருளாதார வாழ்வாதார ரீதியான விடயங்களுக்கும் நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று  வியாழக்கிழமை மட்டக்களப்பு, எருவில் கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதனைத் தெரிவித்தார்,

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…

எமது மக்கள் மாற்றத்திற்காக தங்களின் வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பால் வைத்திருந்த நம்பிக்கiயின் மூலம் செலுத்தியமையால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினூடாகவே இவ்வாறான பல செயற்பாடுகள் எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது நாடு பூராகவும் இடம்பெறுகின்றன. இதற்கு எமது மக்களுக்கே முதற்கண் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

நாம் கடந்த காலங்களில் பல இன்னல்கள் புறக்கணிப்புகளை சந்தித்து வந்தோம். ஆனால் எக்காலத்திலும் எமது கல்வியை நாம் விட்டுக் கொடுத்ததில்லை. எமது மாணவர்கள் கல்வி நிலையில் மேலும் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் குறிக்கோள் எமது சமுகம் கல்வித் தரத்தில் உயர்த்தப்படவேண்டும். முன்பு கல்வி நிலையில் உயர்ந்திருந்த நாம் கடந்த கால அசாதாரண சூழ்நிலையால் தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறான நிலைக்கு சென்றுவிட்டோம். ஆனால் இனிவரும் காலங்களில் எமது மக்களின் உரிமைகளுடன் சேர்த்து பொருளாதார வாழ்வாதார ரீதியான விடயங்களுக்கும் நாம் போராட வேண்டிய நிலையில் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

கடந்த காலத்தைப் போன்றே பல புறக்கணிப்புகள் இருந்தாலும் அவை குறைக்கப்பட்டுள்ளனவே தவிர மாற்றப்படவில்லை. ஆனால் மாற்றம் என்று ஒன்று சிறிது சிறிதாக மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எம் அனைவர் மத்தியிலும் இருந்து வருகின்றது.

எமது சமுகம் எதிர்வரும் காலங்களில் கல்வியூடாகவே எமது உரிமைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஒரு சமுகம் கல்வி இல்லாத நிலைக்கு செல்லும் போதே அதன் உரிமைகள் தொடர்பிலான அறிவுத் தண்மை இழக்கப்பட்டு எமது வரலாறுகளும் மாற்றப்படுகின்றன.