செய்திகள்

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அநாதரவாக தெல்லிப்பழையில்! வைத்திய அத்தியட்சகர் திவாகர் ஆதங்கம்.

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு எமது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டமை போன்ற நிலைமையிலேயே இங்கு உள்ளது. அதற்குரிய போதிய வசதிகள் சுகாதாரத் திணைக்களத்தினாலோ அரசாங்கத்தினாலோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது மிகவும் வேதனையளிக்கின்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை  மாலை 2.30 மணிக்கு வைத்தியசாலையின் புற்றுநோய் கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி மு.உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபையின் தலைமைப்பதவியை ஏற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி யோ.திவாகர் வைத்தியசாலையின் அபிவிருத்தி, நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் தலைமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது தலைமை உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

எமது வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை என்ற சாதாரண தரப்படுத்தலில் தான் தற்போதும் உள்ளது. இங்கு புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி ஜெயக்குமார் அவர்கள் எடுத்த கடும் முயற்சியால் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் எமது வைத்தியசாலையை வளம்படுத்தவேண்டும் என்ற நல்ல நோக்கோடு இங்கு புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஆரம்பிப்பதற்கு பலசவால்களை எதிர்நீச்சலிட்டு முறியடித்து ஆரம்பித்தார். இவரது முயற்சியின் பயனாகத்தான் இங்கு புற்றுநோய் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது.

நாதன் சிவகணநாதன் குழுவினர் களேஸ் ஓப் கரேஜ் என்ற அரசசார்பற்ற நிறுவனத்துக்கூடாக நடைபவணியை மேற்கொண்டு அதில் கிடைக்கப்பட்ட பணத்தினூடாக சகல வசதிகளையும் உடைய ஒரு புற்றுநோய் வைத்தியசாலையை உருவாக்கித் தந்தார்கள். இதற்குரிய காணியை ஈ.எஸ்.பி. நிறுவன இயக்குநர் நாகரட்ணம், சாந்தா அபிமன்னசிங்கம் போன்றோர் நன்கொடையாக வழங்கினார்கள். மத்திய அரசின் மிகப்பெரிய நிர்வாகத்தின் கீழ் இருந்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இங்கு மாற்றப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு முழுமையாக இங்கு இயங்க ஆரம்பித்தாலும் எமது வைத்தியசாலைக்கு சுகாதாரத் திணைக்களத்தாலோ அரசாங்கத்தாலோ வழங்கப்படுகின்ற வளங்கள் போதாமலேயே உள்ளன. பழைய ஆளணியின்; அடிப்படையிலேயே தற்போதும் ஆளணி உள்ளது. வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ தொழிநுட்பவியலாளர்கள் போன்றோர் தற்போதும் பற்றாக்குறையாகவே உள்ளன. ஆண் சிற்றூழியர்கள் 17 பேர் மாத்திரமே உள்ளனர்.  ஆண்கள் விடுதிகளுக்கு ஆண்கள்தான் பணியாற்றவேண்டும். இதுதொடர்பாக நாம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் அவர்களுக்கும் தெரிவித்திருந்தோம்.

மகரகம வைத்தியசாலைக்கு இணையான சேவையை சேவை வழங்கு நிலையமாக எமது வைத்தியசாலை உருப்பெற்று வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏன் அதற்கும் அப்பால் புத்தளம், சிலாபம் போன்ற மாவட்டத்திலுள்ள புற்றுநோயாளர்கள் இங்குவந்து சிகிச்சைபெறவேண்டிய ஏதுநிலை உருவாகியுள்ளது. ஆகையால், எமது வைத்தியசாலையை மாகாணப்பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்தவேண்டும் அல்லது மாவட்ட பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்தவேண்டும் என்று பலமுறை அழுத்தங்களை வழங்கிய வண்ணமே உள்ளோம். அவ்வாறு தரமுயர்த்தப்பட்டால்தான் நாம் நோயாளர்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றமுடியும்.  – என்றும் கூறினார்.