செய்திகள்

புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களின் தொலைக்காட்சிகள்: தோற்றமும் சவாலும்

பரம்சோதி தங்கேஸ் ( கலாநிதி ஆய்வு மாணவன், மானுடவியல், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்)

19-04-2015 அன்று IBC தமிழ் தொலைக்காட்சியின் வரவினை கணிசமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இதனை தொடக்க நாள் நிகழ்வில் கலந்துகொண்டபோது உணரக்கூடியதாக இருந்தது. 47 லில்லி றோட் லண்டன் SW6 1UD என்னும் முகவரியில் அமைந்துள்ள லண்டன் சூட் ஐலெக் மாநாட்டு மண்டபத்தில் (London Suite ILEC Conference Centre) இந்த தொடக்க நிகழ்வு இடம்பெற்றது.

IBC 1கிட்டத்தட்ட 1500 நபர்களை உள்ளடக்கக் கூடிய அந்த மண்டபத்தில் பார்வையாளர்கள் முற்றாகச் சூழ்ந்துகொண்டனர். சிலர் இருப்பதற்கு இருக்கைகள் தேடித்திரிந்தமையையும் அவதானிக்க முடிந்தது. இந்த அவானிப்பின் அடிப்படையில் பார்க்கும் போது மக்களிடையே IBC தமிழ் தொலைக்காட்சி தொடர்பாக குறிப்பிடத்தக்களவு எதிர்பார்ப்பு இருந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. லண்டன் தவிர்ந்த வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் மக்கள் வந்துள்ளனர் என்பதை மேடையில் பங்குபற்றியோர் மற்றும் அறிவிப்பாளர்களது பேச்சிலிருந்தும் புரிந்துகொள்ள முடிந்தது.

நிகழ்வு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பிந்தி தொடங்கினாலும், நிகழ்வினை ஓரளவுக்கு நேர்த்தியாக ஒழுங்குபடுத்தியிருந்தனர் என்பதை அந்நிகழ்வு நடந்தேறிய முறையிலிருந்து அறிய முடிந்தது. குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கூட்டு முயற்சி இதன் பின்னணியில் இருந்துள்ளது என்பது தெரிகின்றது. உங்கள் எதிர்காலம் சிறக்க மக்களோடு இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்.

நிற்க, எனது இந்தக் கட்டுரையின் நோக்கம் IBC தமிழைப் பற்றி விளக்குவதோ அல்லது வியாக்கியானம் கொடுப்பதோ அல்ல. ஏனெனில் அது பற்றிய ஆரம்ப நிகழ்வினை மக்களில் ஒருவனாக நானும் கண்டுகளித்தது மட்டும் தான். IBC தமிழ் தொலைக்காட்சி கடந்து செல்லவேண்டிய பல கடினமான சவால்கள் உள்ளன என்ற காரணத்தினால், தொடக்க நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது என்பதோடு மட்டும் முடித்துக்கொள்ள விரும்புகின்றேன். உண்மையில் இச்சிறிய கட்டுரையின் பிரதான நோக்கம் மக்களிடையே, தொலைக்காட்சி ஊடகப் பணியில் ஈடுபடுபவர்களிடையே, மற்றும் அவற்றினைக் கொண்டு நடத்துபவர்களிடையே ஒர் ஆரோக்கியமான சம்பாசனையை, விவாதத்தினை முன்னேற்றத்தினை நோக்கி ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

இந்நிகழ்வில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, எனக்கு பக்கத்திலிருந்தவரோடு சில விடயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அதனை உங்களோடும் பகிந்துகொள்ள விரும்புகின்றேன்.

இலங்கைத் தழிழர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும், அவர்களுக்கென்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தொலைக்காட்சி ஊடகம் இதுவரை ஏன் வரவில்லை? அவ்வாறாயின் தற்பொழுதுள்ள தொலைக்காட்சிகள் மக்களிடையே எத்தகைய கணிப்பினைப் பெற்றுள்ளன? ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கும் பொழுது இருக்கும் உத்வேகமும் நம்பிக்கையும் ஏன் காலநீட்சியில் தொடர்ச்சியாக இருப்பதில்லை? யார் இதற்கு பொறுப்பு? இதுபோன்ற பல்வேறு வினாக்களுக்கு விடைகாண்பது மிகவும் முக்கியமானதாது. அந்த விடைக்கான தேடல் மிகவும் கடினமாகவும் பல்வேறு விவாதங்களுக்கு எம்மை அழைத்துச் செல்வதாகவும் உள்ளது. இவற்றினை மக்களோடு இணைந்து கலந்துரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான ஒரு களமாக இச்சிறிய இக்கட்டுரையை நான் பார்க்கின்றேன்.

tamil-tv

நாம் என்னதான் தனித்துவமானவர்கள் என்று கூறினாலும், பெரும்பாலான புலம் பெயர்வாழ் மக்களிடையே இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகள் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயமாக தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளை அவர்கள் விருப்பத்தோடு பார்க்கின்றார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். முதலில் ஏன் புலம்பெயர்வாழும் இலங்கைத் தமிழர்களினால் நடாத்தப்படும் தமிழ்த் தொலைக்காட்சிகள் தமது சொந்ந மக்களிடையே, இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகள் சில ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை? என்பது பலராலும் பேசப்படும் முக்கியமானதொரு கேள்வியாகும். IBC தமிழ் தொலைக்காட்சி நிகழ்விலும் இந்த விடயம் தொடர்பாக, வெளிப்படையாக வினவாது விட்டாலும், சில பிரமுகர்கள் இந்த பக்கத்தினைச் தொட்டுச் சொன்றனர். இந்த ஒப்பீடு முக்கியமானதாக இருந்தாலும், அதனை ஒரு நீண்ட விசாரணைக்கு உட்படுத்துவது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. ஒருவிடயத்தினை மட்டும் இவ்விடத்தில் கூறமுடியும். நிகழ்ச்சிகள் எதுவாயினும் அவை அதற்கான பாணியில் தரமாக இருப்பின் மக்களை இலகுவில் கவர்ந்து கொள்ளும். இதனூடாக தென்னிந்தியத் தமிழர்கள் எமது நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதற்கான களத்தினை உருவாக்குவோம் என்ற ஆர்வம் ஒருபுறம் இருக்க, எம் ஈழத்தமிழர்களின் ஈடுபாட்டினை அதிகரிக்க முடியும் என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்று. இதற்கு அர்ப்பணிப்போடு, ஒருவரை ஒருவர் இதய சுத்தியோடு தட்டிக்கொடுத்து முன்னேறிச் செல்லும் உயர்ந்த பண்புமிக்க கூட்டு முயற்சி தேவை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு இந்த விடயத்தை முடித்துக்கொள்கின்றேன்.

TV Crewதொலைக்காட்சி நடத்துவதென்பது ஓரிரு நபர்களை மட்டும்வைத்து மேற்கொள்ளப்படும் பெட்டிக்கடை வியாபாரம் அல்ல. அது ஒரு கூட்டு முயற்சியின் உற்பத்தி. மக்களின் சிந்தனைப் போக்கில் செல்வாக்கினை ஏற்படுத்தும் கருவி. பலரின் வாழ்க்கையில் ஆரோக்கியமான திருப்பத்தினை ஏற்படுத்தவல்ல சக்தி. பொதுவாக தமிழர்சார் ஊடகங்களின் செயற்பாட்டில் உள்வாரியான முரண்பாடு இந்த உயரிய நோக்கத்தினைச் சின்னாபின்னமாக்கிவிடும். இதுவரை நான் பார்த்த தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல உள்முகமான குழுசார்ந்து செயற்படும் போக்கினை இலகுவாகவே அவதானிக்க முடிகின்றது. கருத்து, ஆக்கம், வெளிப்பாடு சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் தேவை. துரதிஷ்ட வசமாக இவர்களது உட்பூசல்கள் அவ்வாறு இருப்பதில்லை. தனிப்பட்ட நபர்கள் சார்ந்தும், அவர்களது செயற்பாடுகள் சார்ந்தும், அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திநிற்கும் செல்வாக்கினை பொறுக்கமுடியாத உணர்வோடு விமர்சிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இத்தயைதொரு தமிழ்த் தொலைக்காட்சி ஊடகம்சார் பொதுப்பண்பு முதலில் அகற்றப்பட வேண்டும். அதற்குத் தேவையான பக்குவத்தினையும் ஆளுமைப்பண்புகளையும் தொலைக்காட்சி ஊடகம் சார்ந்து செயற்படுபவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். உண்மையில் அதற்கு ஒன்றும் பெரிதாக செய்யவேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதும் தட்டிக்கொடுப்பதும் இருந்தாலே பாரிய முற்போக்கான மாற்றத்தினைக் கொண்டுவர முடியும். முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும் கூறும் பண்பினை முற்றாக அகற்றிவிட்டு குறிக்கோள்நோக்கி முன்னகர்வதனால் மாத்திரமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

என் அறிவுக்கு எட்டியவரை தொலைக்காட்சிகளின் பொறுப்பில் இருந்த பலருக்கு அது ஒரு பகுதிநேர சிந்தனையாகவே இருந்தது, இருந்து வருகின்றது. தனிப்பட்ட தமது தேவைகளுக்காக, விருப்பங்களுக்காக, அந்தஸ்த்துக்காக தொலைக்காட்சியை நடத்துவதற்கும், அதில் பங்குகொள்வதற்கும் முயற்சிக்கின்றார்கள். முக்கியமான பொறுப்பிலிருக்கும் பலரும் தமது நலனையே முன்னிலைப்படுத்துகின்றனர். இக்காரணங்களினால், ஒரு தொலைக் காட்சியின் அடிப்படை நோக்கம் சிதறிக்கப்படுவதோடு, ஒரு குழுசார் ஊடகமாக மாற்றம் பெறுகின்றது. அத்தயைதொரு சிந்தனைப் போக்கில் மாற்றம் தேவை. முன்னிலையிலிருந்தது என்று கூறப்பட்ட லண்டன் தமிழ் ஊடகங்களில் பலர் குடும்பமாகவே வேலைசெய்தனர். திரைக்கு முன்னும் திரைக்குப் பின்னும் என்ற அடிப்படையில் இவ்விடயத்தினைக் கூறுகின்றேன். திறமையிருப்பின் அவ்வாறு இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் ஆரோக்கியமானதொரு வளர்ச்சிக்கு இத்தகையதொரு சூழமைவு உதவாது என்பதே எனது கருத்து.

Growth

புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ் தொலைக்காட்சிகள் நல்லவருமானத்தினை ஈட்டி தன்னிறைவோடு முன்னேறிச் செல்வதென்பது கல்லில் நார் உரிக்கும் வேலை என்று பலரும் கூறக் கேட்டிருக்கின்றேன். ஒரு நல்லதொரு பின்னுந்தல் (backup) இல்லாது விட்டால் தமிழ் தொலைக்காட்சியினை புலம்பெயர்வாழ் மக்களிடையே நடத்த முடியாது என்ற சிந்தனை பலரிடமும் காணப்படுகின்றது. இத்தயைதொரு சிந்தனை தொடர்ச்சியாகக் காணப்படுமாயின், என்னைப் பொறுத்தவரை எத்தகைய தொலைக்காட்சிகள் வந்தாலும் அவை பத்தோடு பதினொன்று தான்.

எம்மைப் பொறுத்தவரை நாம் ஒரு அரச அமைப்பு இல்லாத சமூகம். BBC போன்ற முன்னணி ஊடகங்கள் அரச வரி வசூலிலிருந்து பண உதவியினைத் தொடர்ச்சியாக பெற்றுகொள்கின்றன. எனவே அந்த ஊடகங்களினால் தரமாக நிகழ்ச்சினை தொடர்ச்சியாக உற்பத்தி செய்யமுடிகின்றது. ஆனால் எம்மைப் பெறுத்தவரை, நாம் பணம்படைத்த தனிநபர்களையும், சிறு வியாபாரிகளையும் நம்பியே (வருமானத்தைப் பொறுத்தவரை) தொலைக்காட்சியை நடத்தவேண்டியுள்ளது. குறிப்பாக சிறு வியாபாரிகளிடமிருந்து விளம்பரப் பணத்தினை பெற்றுகொள்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. பலசமயங்களில் இவர்களது விளம்பரங்கள் தொலைக்காட்சின் தரத்தினையே கெடுத்துவிடுகின்றன. இத்தயைதொரு சூழ்நிலையில் தரமான தொலைக்காட்சியை நடத்துவதென்பது சுலபமான காரியமல்ல. இவ்விடயங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தி தன்னிறைவோடு ஒரு தொலைக்காட்சி நடத்தப்படுமாயின் மாத்திரமோ, அது நீண்டு நெடிது வளரும். இதற்கு தெளிந்த சிந்தனையும் கடின உழைப்பும் தேவைப்படுகன்றன.

இலங்கைத் தமிழர்களிடையே தரமான தொலைகாட்சி உருவெடுக்காது இருப்பதற்கு மக்களின் பங்கேற்றல் போதியளவு இல்லாது இருப்பதும் ஒரு பிரதான காரணம் என்பதைப் பலரும் உணர்ந்திருக்கின்றனர். யுத்த காலங்களில் தொலைக்காட்சிக்கு இருந்த மவுசு இப்பொழுது குறைந்து விட்டது என்று எனது நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகின்றது. யுத்த காலங்களில் குறிப்பாக செய்திகளை கேட்பதற்கு அப்போது இருந்த அக்கறை தற்பொழுது இருப்பதில்லை என்று அவர் கருதுகின்றார். இந்தக் கருத்தில் கணிசமான அளவு உண்மை இருப்பது போல் தெரிகின்றது. ஏனெனில் இலங்கைச் செய்திகளுக்காக இலங்கைத் தமிழ்த் தொலைக் காட்சிகளை பார்பதும் பின்னர் பொழுது போக்குக்காக தென்னிந்தியத் தமிழ்த் தொலைக் காட்சிகளுக்கு மாற்றுவதையும் நானும் கூட பலரிடத்தே பார்த்திருக்கின்றேன். தனியே செய்திகளுக்காக மட்டும் தொலைக்காட்சி நடத்தப்படுமாயின், அது ஒரு பூரணத்துவத்தினைத் தராது. எதிர்பார்த்த விளைவுகளைத் தராது. குறிப்பாக இரண்டாம் தலைமுறையினை சென்றடைவதற்கான யுக்தியாக இது அமையாது. பலதரப்பட்ட இரசனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உயர்ந்த இலட்சியங்கள் சந்திக்கும் பல்வேறு புள்ளிகளிலிருந்து செயற்பட வேண்டியுள்ளது.

நேர்த்தியான, தெளிந்த முகாமைத்துவம் அவசியம். ஒருவர் சொல் கேட்டு ஒருவரை எதிர்த்தல். ஒருவருக்குப் பக்கச் சார்பாக நடத்தல். அடி நிலைத் தொழிலாளார்கிடையே போதியளவு ஊடாட்டம் கொள்ளாது இருத்தல், குறிப்பிட்ட இலக்குகளை கால எல்லையோடு நிறைவேற்றாது விடுதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் பல தமிழ் ஊடகங்களை நடத்தும் முகாமையாளர்களிடையே காணமுடிகின்றது. இவ்விடயங்கள் களையப்பட்டு தெளிவான சிந்தனையோடு, அனைவரையும் ஒரு கோட்டில் இலக்கு நோக்கி நகர்த்திச்செல்லும் ‘அன்பான சர்வதிகாரி’ தேவைப்படுகின்றார். அதற்கான இடைவெளி தொடர்ச்சியாக இருந்து கொண்டே செல்கின்றது.

IBCஓட்டுமொத்தமாக நோக்கின், ஒரு சில தொலைக்காட்சிகள் பல ஆண்டுகளாக இயங்கிவரினும், தரமான இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிக்கான பாரியதொரு இடைவெளி, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே தொடர்ச்சியாக இருந்துகொண்டே வருகின்றது. இத்தகையதொரு பின்னணியில் IBC தமிழின் வரவு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்வதற்கும், IBC தமிழ் தனது இலக்கு நோக்கி நேர்த்தியாகவும் திடமாகவும் தெளிந்த சிந்தையோடு நகர்வதற்கும், பல்வேறு சவால்கள் நெடுகிலும் விரிந்து கிடக்கின்றன. இவற்றினை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறுவதற்கான அடித்தளத்தினை தற்பொழுது போட்டிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. எவ்வாறாயினும், வெற்றி இலக்கினை எட்டிப்பிடிப்பதற்கு தொடர்ச்சியாக பயணிக்கவேண்டிய நெடிய கடினமான பாதை நீண்டு கிடக்கின்றது. இவற்றையெல்லாம் தாண்டி தமது இலக்கினை அடைவதற்கு வேண்டிய அனைத்துச் சக்திகளையும் எல்லாம் வல்ல அந்த இயற்கை இவர்களுக்கு வழங்க வேண்டுமென தழிழர்களில் ஒருவனாக நானும் வேண்டிநிற்கின்றேன்.