செய்திகள்

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை மீளாய்வு செய்யப்படும் : மங்கள சமரவீர

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் 2014 ஆம் ஆண்டு ஐ. நா பாதுகாப்பு சபையின் 1373 தீர்மானத்தினை பயன்படுத்தி புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் தனி நபர்களும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு தடை செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யவிருப்பதாக வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அறிவித்திருக்கிறார்.

இன்று பாராளுமன்றத்தில் புதிய அரசின் வெளிநாட்டுக்கொள்கை தொரர்பில் உரையாற்றியபோதே இவாறு தெரிவித்த அவர், தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள சில அமைப்புக்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவை என்றும் அவற்றை விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்துவதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்த அவர், தடைசெய்யப்பட்ட சில தனி நபர்கள் எப்பொழுதோ இறந்து விட்டிருந்ததாகவும் கூறினார்.

முன்னைய அரசினால் கடந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி 16 அமைப்புக்களும் 424 தனி நபர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு தடைசெய்யப்பட்டிருந்தனர்.

மைத்திரிபால அரசாங்கம் தற்போது நல்லிணக்க செயன்முறையை தீவிரமாக பற்றுறுதியுடன் முன்னெடுத்திருக்கும் இந்த நிலையில் இந்த மீளாய்வு மிகவும் அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

“ இவாறு செய்வதன் மூலம், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை சேர்ந்த இலங்கை புலம்பெயர் சமூகம் நல்லினக்க செயன்முறைக்கு மட்டுமன்றி இலங்கை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும் என்றும் சமரவீர கூறினார்.