செய்திகள்

ஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு

கவிதை இலக்கிய நூல்களுக்கான ஆய்வரங்கமும் ஈழத்து பெண் கவிஞர்கள் அறுவரின் கவிதை நூல்கள் பற்றிய திறனாய்வுக் கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் நடைபெற்றது.

ஈஸ்ற்காமில் இயங்கிவரும் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த
நிகழ்வில் லண்டன் வாழ் பல முக்கிய இலக்கிய ஆர்வலர்களும் கலை இலக்கியங்களின் மீதான தீவிர செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=XLj6_HlNT_U&feature=youtu.be” width=”500″ height=”300″]

தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தின்  சார்பில் திரு.பௌசர் அவர்களின் அறிமுக உரையோடு ஆரம்பமான இந்த நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி சந்திரா ரவீந்திரன் மற்றும்எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு.கோகுலரூபன் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

ஈழத்து பெண் கவிஞர்களான ஊர்வசி ஒளவை அனார் ஆழியாள் ஷர்மிளா யதோதரா ஆகியோரின் கவிதை நூல்களின் மீதான விமர்சனப் பார்வையாகவும் அவை சமுகப் பரப்பில் தோற்றுவிக்கக் கூடிய தாக்குதிறன் பற்றியும் பிரதான பேச்சாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து  இன்றைய சமகால கவிதையியல் மற்றும் திறனாய்வுக் கலை பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பங்குபற்றிய இலக்கியதாரரிடையே இடம்பெற்றது. புலம்பெயர் தமிழ் படைப்பலக்கியவாதிகள் பலரிடம் இன்று மலிந்து போய்க்கிடக்கும் முன்றாந்தர விமர்சனப் பார்வை பற்றிய வேதனை மிக்க பதிவுகளை பலர் முன்வைத்திருந்தனர். திறனாய்வுகள் என்பதும் அதன் பின்னதான எதிர்வினையாற்றல் என்பதும் சுயபழிவாங்கலுக்கான ஒரு கருவியாய் மாறிவிட்ட அபத்தம் பற்றி பலரும் சிலாகித்திருந்தனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாது கருத்தை முன்வைப்பவனது படுக்கையறை வரை வந்து தனிப்பட்ட வாழ்வை மிக அநாகரிகமாக எழுதும் எழுத்துப் போக்கையே இன்றைய கணிசமான புலம்பெயர் எழுத்துக்கள் முன்னெடுக்க முனைகின்றன என்ற தமது விசனத்தைக் கூட இந்த அமர்வில் கலந்து கொண்டோர் பதிவுசெய்திருந்தமையைக் காணமுடிந்தது. ஈழத்தில் 80களில் இருந்து இன்றுவரை கவிதைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் எழுச்சிகள் புரட்சிகள் சரிவுகள் வீழ்ச்சிகள் பற்றிய மிக ஆழமான பல கருத்துக்களோடு புலம் பெயர் தேசங்களில் கவிதைத் துறை சார்ந்த பல ஆக்கபூர்வமான கருத்துக்களும் இங்கு பகிரப்பட்டிருந்தன.

வருடா வருடம் அனைத்துலகப் பெண்களால் மார்ச் 8ம் திகதி கொண்டாடப்படும் உலக பெண்கள் தினத்தினை  அண்டிய இக் காலப்பகுதியில் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த கருத்தமர்வில் ஈழத்து பெண் கவிஞர்களான
ஊர்வசி எழுதிய – “இன்னும் வராத சேதி”
ஒளவை எழுதிய – “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை”
அனார் எழுதிய – “பெருங்கடல் போடுகிறேன்”
ஆழியாள் எழுதிய – “கருநாவு”
ஷர்மிளா எழுதிய – “ஒவ்வா”
யசோதரா எழுதிய – “நீத்தார் பாடல்”
போன்ற நூல்கள் பற்றி மிக ஆழமாக சிலாகிக்கப்பட்டிருந்தன.