Search
Friday 23 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஓவல் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் ‘BTCL 100 Club’ ஆரம்பித்துவைப்பு

ஓவல் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் ‘BTCL 100 Club’  ஆரம்பித்துவைப்பு

கிரிக்கட் விளையாட்டை பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளின் சமூகங்கள் மத்தியில் மேம்படுத்தும் ‘BTCL 100 Club’ என்ற செயற்திட்டத்தை பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் அண்மையில் கிரிக்கட் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த லண்டன் ஓவல் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.

சரே கிரிக்கட் சபையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் இங்கிலாந்தின் பிரபல கிரிக்கட் விளையாட்டு வீரர்களான கிறிஸ் ட்ரெம்லெட்மற்றும் ஜேசன் ரோய், சரே கிரிக்கட் சபை தலைவர் சிமன் டைசன், இங்கிலாந்து கிரிக்கட் சபையின் ஜேன் ஹனா, கென்ட் கிரிக்கட் சபையின் கிரிக்கட் அபிவிருத்தி அதிகாரியான அடம் ஹொடர், எசக்ஸ் கிரிக்கட் சபையின் கிரிக்கட் நடவடிக்கைகள் தலைவரான டான் பீஸ்ட் உட்பட கிரிக்கட் விளையாட்டின் பல முக்கிய பிரமுகர்களும் எராளமான கிரிக்கட் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

புல்லாங்குழல் இசை விற்பன்னரான ஞானி பிச்சையப்பாவின் இசையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் உரையாற்றியதுடன் ‘BTCL 100 Club’ திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயற்ப்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு மீள ஒழுங்கமைக்கப்பட்ட பின்னர் தமது அமைப்பு பிரித்தானியாவின் மிகப்பெரிய கிரிக்கட் சம்மேளனங்களில் ஒன்றாக துரிதமாக வளர்ச்சி அடைந்ததாக தனது உரையில் தெரிவித்த பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் ஜெயராஜ் குலசேகரம், தம்முடன் இணைந்து ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கிரிக்கட் விளையாடுவதாகவும் தெரிவித்தார். தமது அமைப்பு “பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம்” என்று அறியப்பட்டபோதிலும், இயலுமானளவுக்கு நாட்டின் எல்லா பிரதான சமூகங்களையும் உள்ளடக்கி தமது சேவையையும் அங்கீகாரத்தையும் விரிவுபடுத்திக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். இளம் விளையாட்டு வீரர்களை வளர்த்தெடுப்பதே தமது நோக்கம் என்றும் தனதுரையில் தெரிவித்த ஜெயராஜ், தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தின் தேசிய அணியில் விளையாட வேண்டும் எம்பதே தமது விருப்பம் என்றும் கூறினார்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து 200 பவுண்டுகள் செலுத்துவதன் மூலம் ஒருவர் ‘BTCL 100 Club’ இல் இணைந்து கொள்ளலாம். இந்த உறுப்புரிமை 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும். ஒருவர் அங்கத்தவராவதன் மூலம் ஒருவர் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். இது பற்றிய விபரங்களை http://www.btcluk.com என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *