Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கனடாவில் சிறப்பாக நடந்த “மாற்றத்தின் குரல்” நிகழ்வு

கனடாவில் சிறப்பாக நடந்த “மாற்றத்தின் குரல்” நிகழ்வு

‘மாற்றத்துக்கான குரல்’ என்ற செயற்திட்டம் குறித்த நிகழ்வு இரவு விருந்தாக இரா விருந்து மண்டபத்தில் மார்ச் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 350 பேர் கலந்துகொண்டனர்.

குயின்ரஸ் துரைசிங்கம் இந்த நிகழ்வினை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திரு. திருமதி. ஸ்ரீஸ்கந்தராஜா தம்பதினரும் திரு. திருமதி. குணநாதன் தம்பதியினரும் திருமதி. ஜோசப் பராராசசிங்கம் அவர்களும் மங்கள விளக்கேற்றினர்.

மாற்றத்துக்கான குரல் என்பது என்ன? என்று பொன்னையா விவேகானந்தன் விளக்கமளித்தார்.

“சமகால அரசியல் சூழலில் எமது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது வலிமையோடு நாம் பயணிக்க வேண்டும். அடுத்து வரக்கூடிய தேர்தலினூடாகத் தெரிவுசெய்யப்டும் தமிழர்தலைமை ஈழத்தமிழரின் தேசியநலன் சார்ந்தே செயற்பட வேண்டும். தற்போது தமிழரது தலைமையாகத் திகழ்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறு தொடர்ந்து பயணிக்க வல்லவர்களா? என்ற வினா பலருக்கும் எழுந்துள்ளது.

இந்த வினாவோடு வெறுமையடைந்த நம்மில் சிலர் ஒன்றுகூடினோம். நிறையவே பேசினோம். அதன் விளைவே ‘மாற்றத்துக்கான குரல்’. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரது அரசியல் பேரியக்கத்தின் தொடர்ச்சியாகும். அதனை அழிக்க முயல்வதோ மாற்றுத் தலைமைகளைத் தோற்றுவிப்பதனூடாக அதனை வலுவிழக்கச் செய்வதோ எமது நோக்கமல்ல. மாறாக, எமது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு விலகாத, பெரிதும் தமிழரது தேசிய நலனை நோக்காகக் கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியிலிருந்து ஓரிருவரை எதிர்வரும் தேர்தலினூடாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்வதனால் கூட்டமைப்பின தன்னிச்சையான போக்குகளைக் கட்டுப்படுத்தி, தமிழரது அடிப்படை உரிமைப் போராட்டம் வலுவாக்கலாம் எனக் கருதினோம்.

பிரித்தானியா இலண்டனில் இதே போன்று செயற்திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இச்செயற்பாடுகள் எம் செயலூக்கத்தை வலுவடையச் செய்கின்றன.

இந்த செயற்பாட்டை நோக்கிய இணைவானது அமைப்பல்ல என்பதோடு இது அக்கட்சியின் கிளையல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அக்கட்சியின் கொள்கைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல நாங்கள். எமக்கும் அவர்களுக்கும் இடையே இடைவெளிகள் உள்ளன. முரண்கள் உள்ளன. ஆனால் பொது நோக்கில் உன்னதமானதோர் இலக்கில் நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம். இவ்விலக்கை நோக்கிய இச்செயற்றிட்டம் நிறைவடைந்ததும் ‘மாற்றத்துக்கான குரல்’ கலைக்கப்பட்டுவிடும் என்பதால் இது ஓர் அமைப்பல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம் ” என்று அவர் தெரிவித்தார்.

இணையவழியாக கலந்துகொண்டு தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றினார். அவர் தனதுரையில், ” 2001இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்தின்போது, பங்காளிக் கட்சிகளான அனைவரும் தமிழரது தன்னாட்சியுரிமையை ஏற்றுக்கொண்டே இணைந்தனர். 2009 வரை இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னான அரசியல் சூழ்நிலைகள் இந்தியாவை விட்டு விரிந்து சர்வதேசத்திற்குப் போய்விட்டன. இந்நிலையில் நாம் இந்தியாவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுவது எம் நலன்களைப் பலப்படுத்தப்போவதில்லை அது இந்தியாவின நலன்களை மட்டுமே பாதுகாக்க உதவும் என்பதே எம் கருத்தாக இருந்தது. திரு. சம்பந்தன் அவர்கள் இந்தியா விரும்பாத ஒன்றைத் தாம் செய்யப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார். தொடர்ந்து 2010 வரை நான் என் கருத்துகளை வலுப்படுத்த முயன்றேன். முடியாத நிலையில் நான் விலக, வேறு சிலர் விலக்கப்ட்டனர்.

தொடர்ச்சியான நிலப் பறிப்பினூடாகக் கட்டவிழ்த்துவிடப்டும் இனவழிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதே ஓரேயொரு தீர்வாக இருக்க முடியும். இந்நிலை சார்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் வழிப்படுத்தவே முயல்கின்றோம்” என்று தெரிவித்தார்.

திரு.பிரணவசிறி(பீற்றர்) தனதுரையில், ” புலம்பெயர்ந்த சமூகமாக எமது பலத்திலிருந்தே இன்று நாம் ஐ.நா அரங்கில் பலப்படுத்தியிருக்கும் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைவரை நாம் காணலாம். புவிசார் அரசியலில் சர்வதேச நாடுகள் தத்தமது நலன்களை முன்னிறுத்துவது இயல்பு. இருந்தபோதும் எமது பலத்தில் எமது நலன்களை முன்னிறுத்தி எமக்கான தெளிவான திட்டத்துடன் நாம் எமது மக்களுக்கான தீர்வை அடைய முடியும்.

சர்வதேசத்தில் பலம்பெறும் எமது நிலைப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் போக்கில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தலைமைகளின் செயற்பாடுகள் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே இதை வலுப்படுத்த புலம்பெயர் சமூகமாக மாற்றத்துக்கான தேவை உணரப்பட்டதன் விளைவே இன்றைய நிகழ்வும் எமது தொடர்ச்சியான இது சார்ந்த முன்னெடுப்புகளும் ஆகும்” எனத் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய மக்கன் முன்னணியின் தேசிய அமைப்பாளரான திரு. மணிவண்ணன் தனதுரையில், வட, கிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் சந்திப்புகள் பயனுள்ளதாகவும் கட்சியின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள வழி செய்வதாகவும் குறிப்பிட்டார். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மீதான விமர்சனங்கள் மாற்றம் பற்றிச் சிந்திக்கத் தூண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாற்றத்துக்கான குரல் போன்ற ஒரு செயற்பாட்டினை இலண்டனில் உருவாக்கிச் செயற்படுவோரில் ஒருவரான திரு. சசிதர் மகேஸ்வரன் தனதுரையில், கனடாவில் இயங்கிவரும் மாற்றத்துக்கான குரல் செயற்பாடுகள் தமக்குப் பெரும் உத்வேகத்தை வழங்குவதாகவும், இந்த முயற்சிகள் ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறினார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரான திரு. செல்வராஜா கஜேந்திரன் தனதுரையில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வாக அமையாதவரை களமும் புலமும் ஓயப்போவதில்லை என்று கூறினார்.

ஆடலகம் நடனப்பள்ளி ஆசிரியர் அனோஜினி குமாரதாசனும் அவரது மாணவிகளும் ஆடல் நிகழ்வுகளை வழங்கியிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *