தலைப்பு செய்திகள்

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

சிறிலங்கா அரசாங்கத்தினால் சூரிச் நகரத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு சுவிஸ் மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்களிடம் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது:

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு சுவிஸ் மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் தமிழர் தாயகத்தில் இனவழிப்பினை அரங்கேற்றியதுடன் தாய் நிலத்தின் மீதான உரிமையினைப் பறித்து எமது தனித்துவ அடையாளங்களையும் சிதைத்து வரும் சிறிலங்கா அரசு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களை குறிவைத்தே இன்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

தாயகத்தில் எமது கலை, கலாச்சாரம், பண்பாட்டை திட்டமிட்டு அழித்து போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து வரும் சிறிலங்கா அரசு கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழா என்ற பெயரில் புலம்பெயர் தளத்திலும் கால்பதிக்க முயற்சிக்கிறது.

தாயகத்தின் ஆதாரமாகவும் தாயக விடுதலைப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பாகவும் திகழ்ந்துவரும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களையும் உறவாடிக் கெடுக்கும் நரித்தந்திரத்துடனே இந்நிகழ்வு ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகளுக்குள் உள்வாங்குவதன் மூலம் எமது போராட்ட உணர்வை மழுங்கடிப்பதுடன் தமிழர்-சிங்களர் நல்லுறவு காணப்படுவதான தோற்றப்பாட்டினையும் உருவாக்க சிங்கள அரசு முயற்சிக்கின்றது.

தடைசெய்யப்பட்ட இரசாயன, நச்சு குண்டுகளை எமது உறவுகள் மேல் வீசி உயிர்பலியெடுத்த அதே சிங்கள அரசு உறவாடிக் கெடுக்கும் நரித்தந்திரத்துடன் கால்பதிக்க முயற்சிக்கிறது. சிங்களத்தின் சதியை முளையிலேயே கிள்ளி எறிவோம்.

அன்பான சுவிஸ், ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்களே இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள சிங்கள சதியை உணர்ந்து அனைவரும் வரும் 9,10,11 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவினை புறக்கணிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *