தலைப்பு செய்திகள்

‘தொடர்ந்தும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பாடுபடுவேன்’: தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் ஜெரமி கோர்பின் வேண்டுகோள்

‘தொடர்ந்தும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பாடுபடுவேன்’: தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் ஜெரமி கோர்பின் வேண்டுகோள்

கடந்த காலங்களில் செயற்பட்டமை போன்று தொடர்ந்தும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பாடுபடப்போவதாக உறுதியளித்திருக்கும் பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவரும் தொழிற்கட்சி தலைவருமான ஜெரமி கோர்பின் , நடைபெற்றுவரும் தொழிற்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஜெரமி கோர்பின், இலங்கையில் இறுதியுத்தத்தின் போது இழைக்கப்பட்ட சகலவிதமான குற்றங்கள் தொடர்பிலும் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்று மீளவும் வலியுறுத்தி இருப்பதுடன் பிரித்தானியாவுக்கு தமிழ் மக்கள் பல்வேறு துறைகளில் பெரும் பங்களிப்புக்களை செய்துள்ளதாக பாராட்டியிருக்கிறார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரமும் பிரித்தானியாவை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் அவர் வழங்கியுள்ள பத்து உறுதிமொழிகளும் கீழே தரப்படுகிறது.

அன்புடன் சகோதர சகோதரிகளுக்கு,

ஐரோப்பாவில் இப்பொழுது தொழிற் கட்சியானது 5 இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் மிகப்பெரும் அரசியல் கட்சியாக திகழ்கிறது. எல்லா சமூகங்கள் மத்தியிலும் துடிப்புடன் செயலாற்றும் ஒரு மக்கள் கட்சியாக மீண்டும் ஒருமுறை ஆகுவதற்கான மீளெழுச்சிபெறும் ஒரு உத்வேகமான நடவடிக்கை ஒன்றை எமது கட்சி ஆரம்பித்துள்ளது.

தொழிற் கட்சி எதிர்காலத்தை பார்க்கிறது. அதனால்தான் , எவருமே எதுவுமே புறந்தள்ளப்பட்டுவிடாதவகையில் பிரித்தானியாவை எவ்வாறு எமது அடுத்த தொழிற்கட்சி அரசாங்கம் மாற்றுவது என்பது தொடர்பிலும் கட்டியெழுப்புவது என்பது தொடர்பிலுமான ஒரு திட்டத்தை நான் அறிவித்துள்ளேன்.

நடைபெறவிருக்கும் தொழிற்கட்சி தலைமைத்துவ தேர்தலில் எமது உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அவர்களின் ஆலோசனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகள் மற்றும் கவலைகளை அறிந்துகொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியா, குறிப்பாக லண்டனுக்கு பிரித்தானிய தமிழ் மக்கள் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். மருத்துவம் முதல் நிதி போன்ற துறைகளில் உங்களது பங்களிப்பு பெறுமதிமிக்கது.

கடந்த காலத்தில் எமது காலனியாதிக்கத்துடன் தொடர்புபட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் அங்கிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்ததுமுதல் அவர்கள் அனுபவித்துள்ள துன்பங்கள் மற்றும் துயரங்களை நான் நன்கு அறிவேன். ஆயிரக்கணக்கான நீங்கள் பிரித்தானியாவை சொந்த நாடக ஆக்கி அதனை செழிப்பூட்டியுள்ளீர்கள்- ஆனால் இலங்கையில் உங்களின் தொடரும் இழப்பு மற்றும் துன்பம் குறித்த உணர்வுகளை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த காலங்களில் நான் திட்டவட்டமாக வலியுறுத்தியதுபோல, இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தொழிற்கட்சியின் தலைவர் என்ற வகையில் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.

40, 000 பொதுமக்கள் பலியாகி, 100,000 பேர் காணாமல் போய் சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர காரணமான இறுதியுத்தத்தின் போது இழைக்கப்பட்ட சகலவிதமான குற்றங்கள் தொடர்பிலும் ஒரு சர்வதேச விசாரணை தேவை.

இலங்கையில் இருந்தான புகலிட கோரிக்கையாளர்களை நான் தொடர்ந்து ஆதரிப்பேன். பிரித்தானியாவில் இருந்து பலவந்தமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தொடர்பிலான கைதுகள் மற்றும் சித்திரவதை குறித்த சம்பவங்கள் ஏராளம். இது எமது தேசிய மனச்சாட்சியில் ஒரு கறையை ஏற்படுத்தியுள்ளது.

எமது பல்லினத்தன்மையை ஒரு பலமாக ஆக்கும் ஒரு தனித்துவமான ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்பமுடியும். இதனை நனவாக்குவதற்கு எவருமே எதுவுமே புறக்கணிக்கப்படாத ஒரு பிரித்தானியாவை நாம் மீளக்கட்டி எழுப்பவும் மாற்றவும் வேண்டியது அவசியம். தொழிற்கட்சி எவ்வாறு தனது அரசாங்கத்தில் இந்த கனவை நனவாக்கும் என்பது குறித்த எனது 10 உறுதிமொழிகளை இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன்.

22 ஆகஸ்ட் முதல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு தபாலில் மின்னஞ்சலிலும் அனுப்பப்பட்டுவருகின்றன.

பழமைவாத அரசாங்கத்துக்கு கடும் எதிர்ப்பை கொடுக்கும் வகையிலும் எவரும் எதுவுமே புறக்கணிக்கப்படாமையை உறுதிசெய்யும் ஒரு மாற்று அரசாங்கத்தை ஏற்படுத்தும்பொருட்டும் நான் தொடர்ந்து பணியாற்றும்பொருட்டு எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

பிரித்தானியாவை மீள கட்டியெழுப்புவதற்கும் மாற்றுவதற்குமான பத்து உறுதிமொழிகள்

1. முழுமையான வேலைவாய்ப்பும் சகலருக்குமான ஒரு பொருளாதாரமும்

எமது பிராந்தியங்கள் மற்றும் தேசங்கள் பூராக 10 இலட்சம் தரமான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதுடன் அனைவருக்குமான உகந்த வேலைகளை உறுதிசெய்வோம். பொதுமக்களால் உரிமையாக்கப்பட்ட ஒரு தேசிய வங்கி மற்றும் பிராந்திய வங்கிகளின் ஆதரவுடன் 500 பில்லியன் பவுண்டுகளை உட்கட்டுமானம், தயாரிப்பு மற்றும் புதிய தொழில்துறைகளில் முதலீடு செய்து எவருமோ எதுவுமோ பின்தங்கவிடப்படாத ஒரு உயர் திறன் கொண்ட , உயர் தொழில்நுட்பம் உடைய மற்றும் குறைந்த பச்சைவீட்டு வாயு பொருளாதாரத்தை உருவாக்குவோம். எமது நாட்டுக்கு தேவையான அதிவேக இன்டர்நெட் , சக்தி , போக்குவரத்து மற்றும் வீடுகள் ஆகியவற்றில் நாம் முதலீடுசெய்வதுடன் ஒரு புதிய தலைமுறைக்குரிய கூட்டுறவு நிறுவனங்களை ஆதரிப்போம்.

2. ஒரு பாதுகாப்பான வீடமைப்பு உத்தரவாதம்

எமது பொது முதலீட்டு உபாயம் மூலம் 5 வருடங்களில் குறைந்தது 5 இலட்சம் உள்ளூராட்சி வீடுகள் ( Council Homes) உள்ளடங்கலாக 10 இலட்சம் புதிய வீடுகளை நாம் அமைப்போம். வாடகை கட்டுப்பாடு, பாதுகாப்பான வாடகை குடியிருப்பு, ஒரு தனியார் வாடகை குடியிருப்பாளர் சாசனம் மற்றும் கட்டுப்படியான வீட்டு உரிமைக்கான வழிகளை அதிகரித்தல் மூலம் நாம் தனியார் வாடகைக்காரர்களின் பாதுகாப்பற்ற தன்மையை முடிவுக்குகொண்டுவருவோம்.

3. தொழிலில் பாதுகாப்பு

வேலையில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே வலுவான தொழில் உரிமைகளை வழங்குவதுடன், சுரண்டலுக்குரிய ‘பூஜ்ய மணித்தியாலங்கள் ஒப்பந்தங்களை’ இரத்துச்செய்வோம். அத்துடன், 250 அல்லது அதற்கு மேலான தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு கட்டாயமான கூட்டு பேரம்பேசல் உட்பட பல புதிய கூட்டு பேரம்பேசல் உரிமைகளை ஏற்படுத்துவோம். தொழில் இடங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் புதிய தொழில் மற்றும் தொழிற்ல் சங்க உரிமைகளை வழங்குவதோடு எல்லோருக்குமான சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகளை பெற்றுக்கொடுப்போம். உழைக்கும் மக்கள் தமது தொழில் இடத்தில் உண்மையான குரலை கொண்டிருக்கும்வகையில் அவர்களின் பிரதிநிதிதித்துவம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒழுங்கமைப்பதற்கான வலு ஆகியவற்றை பலப்படுத்துவோம். ஐரோப்பாவுடனான புதிய உறவுக்கான பிரித்தனியா வின் வெளியேறும் நிகழ்ச்சிநிரலின் மத்தியில் சமூக மற்றும் தொழில் உரிமைகளை பாதுகாப்பதுடன் குடியேற்ற தொழிலாளர்களின் துஸ்பிரயோகத்தினூடாக வேதன குறைப்புக்கு எதிராக நாம் நடவடிக்கைஎடுப்போம்.

4. எமது தேசிய சுகாதார சேவை மற்றும் சமூக நலன்களை பாதுகாத்தல்
சுகாதார சேவைகள் தனியார்மயமாக்கப்படுவதை நாம் முடிவுக்குகொண்டுவருவதுடன் ஒரு ஸ்திரமான மக்களின் அமைப்பாக சுகாதார சேவையை மாற்றுவோம். வயதுபோன மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான சேவையாக தேசிய சுகாதார சேவை மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை நாம் ஒன்றிணைப்போம்.

5. அனைவருக்குமான ஒரு தேசிய கல்வி சேவை
அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கை காலம் முழுவதற்கும் திறந்துவிடப்பட்டுள்ள ஒரு புதிய ஒரு கல்வி சேவையை நாம் உருவாக்குவோம். எல்லா சிறார்களும் வாழ்க்கையை நல்லமுறையில் தொடங்கும் பொருட்டு ஒரு நாடளாவிய பொது சிறுவர் பராமரிப்பு திட்டம் ஒன்றை கொண்டுவருவோம். இது பராமரிப்பு பொறுப்புக்களின் பெரும் பகுதியை பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதுடன் தொழில் சந்தையில் பெண்கள் பங்குபற்றுவதில் உள்ள தடைகளை அகற்றவும் உதவும். எல்லா மக்களுக்கும் முன்னேற்றமான இலவச கல்வித்திட்டத்தை மீள கொண்டுவருவோம், தரமான தொழிற்பயிற்சி மற்றும் திறமை சார் பயிற்சிகளையும் உறுதிசெய்வோம்.

6. எமது சூழலை பாதுகாக்கும் செயற்திட்டம்
எமது சுற்றாடல் கொள்கைகளின் முக்கியமான அம்சமாக சமூக நீதியை கருத்தில் கொண்டு எமது பூமியின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் எமது காலநிலை மாற்ற சட்டத்தின் மூலம் சரியான நடவடிக்கைகளை எடுத்து பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் எமக்குரிய நியாயமான வகிபாகத்தை மேற்கொள்வோம். பொதுமக்கள் மற்றும் சமூக உரித்துடைய புதுப்பிக்கக்கூடிய சக்தி துறைகளில் தேசிய முதலீட்டு வங்கியை முதலீடுசெய்யவைத்து காபன் குறைந்த பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன் பச்சை தொழிற்துறைகள் மற்றும் எதிர்கால தொழில்கள் ஆகியவற்றினை விரிவுபடுத்துவோம். சுத்தமான சக்தியை வழங்குவதுடன் சக்திக்கான விலைப்பட்டியலின் அதிகரிப்பை குறைப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட சுற்றாடல் பாதுகாப்புக்களை நாம் பாதுகாத்து விரிவுபடுத்துவோம்.

7. பொருளாதாரம் மற்றும் சேவைகளில் மீண்டும் மக்களை ஈடுபடுத்துவோம்

பொது சேவைகளை மீளக்கட்டுவதுடன் ஜனநாயக பங்குபற்றலை விரிவுபடுத்துவோம், மக்களை மீளவும் எமது பொருளாதாரதில் ஈடுபடுத்துவோம், மக்கள் தமது உள்ளூர் சமூகங்களில் ஒரு உண்மையான அதிகாரத்தை கொண்டிருக்க இடமளிப்போம், உள்ளூர் மற்றும் பிராந்திய அளவில் ஜனநாயகத்தை அதிகரிப்போம். எமது பிராந்தியங்கள் மற்றும் தேசங்கள் முழுவதிலும் நேர்மையாகவே கலப்புக்குரிய பொருளாதாரத்தில் சகலருக்குமான செழிப்பை வழங்கும்பொருட்டு பொது மூலதனத்துடன் எமது பொருளாதாரத்தை நாம் மீள கட்டியெழுப்புவோம். எமது பொது மற்றும் உள்ளூர் சபைகளின் சேவைகளை உள்ளுக்குள் இருந்தே செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், பொழுதுபோக்கு, கலைகள் , விளையாட்டு ஆகியவற்றை நாடுபூராக விரிவுபடுத்துவோம். எமது பொது உரித்துடைய பேருந்து சேவையை மேலும் விரிவுபடுத்துவோம். ரயில் சேவைகளை பொது உரித்துக்கு கொண்டுவருவதுடன் சக்தி (வலு) தொடர்பில் ஜனநாயக சமூக கட்டுப்பாட்டை ஏற்படுத்துவோம்.

8. வருமான மற்றும் செல்வ சமத்துவமின்மையை இல்லாமல் செய்வோம்
பணமுள்ளவர்களும் உயர் வருமானம் உள்ளவர்களும் நேர்மையான முறையில் வரிக்கு உள்ளாக்கும்பொருட்டு ஒரு முற்போக்கான வரி முறையை கொண்டுவருவோம், நிறுவனத்தின் உயர் நிலை அதிகாரிகள் மேலதிக இலாபங்களை பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்பதுடன் உயர்ந்த மற்றும் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு இடையிலான வெளியை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் ( தற்போது FTSE 100 நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பிரித்தானியாவின் சாதாரண தொழிலாளியை விட 183 மடங்குகள் கூடுதலாக ஊதியம் பெறுகிறார். ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவின் ஊதியமே கூடுதல் சமத்துவமின்மையை கொண்டுள்ளது). ஒரு சமத்துவமான சமூகத்தை உருவாக்க நாம் உழைப்பதுடன் ஏழைகளின் வருமானத்தை அதிகரித்து ‘பால்’ சமத்துவமின்மையையும் இல்லாமல் செய்வோம்.

9. ஒரு சமத்துவ சமுகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை

எல்லா மக்களினதும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும் பாகுபாடு மற்றும் தீமையான செயற்பாடுகளில் இருந்து அவை பாதுகாக்கப்படுவதையும் நாம் உறுதிப்படுத்துவோம். நம்பிக்கை (faith ) அடிப்படையில் பாகுபாடு, இனவாதம் மற்றும் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் அங்கவீனமானவர்களுக்கான உண்மையான சமத்துவத்தை உறுதிசெய்வோம். மனித உரிமைகள் சட்டத்தை நாம் பாதுகாப்பதுடன் பிரித்தானியாவில் வாழுகின்ற, வேலை செய்கின்ற சகல ஐரோப்பிய பிரஜைகளுக்கும் முழுமையாக உரிமைகளை
உத்தரவாதப்படுத்துவோம். அத்துடன் ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட அனுமதிக்கமாட்டோம்.

10. வெளியுறவுக்கொள்கையின் இதயமாக சமாதானமம் நீதியும்

அகதிகள் நெருக்கடிக்கான ஒரு காத்திரமான நடவடிக்கை, தலையீடுசெய்யும் யுத்தங்களுக்கான ஆதரவை முடிவுக்கு கொண்டுவருதல், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக பணியாற்றுதல் ஆகியவை தொடர்பில் பற்றுறுதியுடன் செயற்பபடுவதுடன் முரண்பாடுகளுக்கான தீர்வு மற்றும் மனித உரிமைகளை எமது வெளியுறவுக் கொள்கையின் இதயமாக வைத்திருப்போம். பிரித்தானிய வெளியுறவுக் கொள்கையானது உண்மையான சுதந்திரத்துடனோ அன்றி சர்வதேச கூட்டுறவுடனோ இருப்பதற்கு தவறிவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பை குறைத்திருப்பதுடன், எமது ராஜதந்திர மற்றும் தார்மீக அதிகாரத்தையும் குறைத்திருக்கிறது. வர்த்தக கொள்கையில் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை நாம் ஏற்படுத்துவதுடன் அணு ஆயுத களைவு தொடர்பிலான எமது சர்வதேச உடன்படிக்கைக கட்டுப்பாடுகளை நாம் மதிப்பதுடன் ஏனையவர்களையும் அவ்வாறு நடக்க ஊக்கமளிப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *