Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாரம்பரிய கலைகளும் புலம்பெயர வேண்டும்!

பாரம்பரிய கலைகளும் புலம்பெயர வேண்டும்!

– கே.வாசு-

ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்துவ அடையாளங்கள் இருக்கின்றன. அந்த இனம் அழிந்து போகாமல் இருப்பதற்கும் அதன் நீட்சிக்கும் அந்த அடையாளங்கள் உதவுகின்றன. அந்தவகையில் இலங்கைத் தீவில் பல்நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழினத்திற்கும் தன் கலாசார பண்பாட்டு வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தும் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றில் கலைகள் பிரதான பங்கு வகிக்கின்றன. கூத்துக்கள், வீர விளையாட்டுக்கள், நாட்டிய நாடகள், இசைக்கலை என அவை விரிந்து செல்கின்றன. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் அடையாளங்களும், பண்பாட்டு அடையாளங்களும் பல இன்றும் அழிக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் கலைகளே எஞ்சி உள்ளன. ஆனாலும் இன்று எமது பாரம்பரியத்துடன் தொடர்புடைய பல கலைகள் அழிவடைந்து அல்லது அருகிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவும் இருக்கின்றது.

தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் காணப்படும் ஆலயங்களிலும், அவர்களது பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளிலும் இடம்பெற்று வந்த கலைகள் பல இன்று இடம்தெரியாது மறைந்து போக மேடைக் கலையாக இருந்து வந்த பரதநாட்டியம் போன்ற ஆடற்கலைகள் வீதிவரை வந்து முதன்மை பெற தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் என தனித்துவமான சில கலைகள் இருந்து வந்தன. ஆனால் இன்று அந்த பிரதேசங்களில் உள்ள ஒரு சிலரால் மட்டுமே அந்த கலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு பின்னர் அந்த பிரதேசத்தின் அடையாளமும் அழிந்து விடக் கூடிய ஆபத்தே உள்ளது.

poj (1)புராதன தமிழர் பண்பாட்டுடன் தொடர்புடைய நாட்டுக் கூத்து, குடமூதற்கும்மி, கோலாட்டம், சிலம்பாட்டம், ஊஞ்சல் கலை, மகுடியாட்டம், வேதாள ஆட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், பொய்கால் ஆட்டம், பறை இசை என பல கலைகள் அருகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. ஒரு சில கலைஞர்கள் இதனை அழியவிடாது பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்ற போதும் அவர்களுக்கான ஆதரவுத் தளம் என்பது மிகக்குறைவே. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் இவ்வாறான பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை இல்லாமல் போய்விட்டது. யுத்தம் காரணமாக தமது உடமைகள், சொத்துக்களை இழந்து தற்போது மீள்குடியேறியுள்ள கலைஞர்கள் பலரும் வருமானம் அற்ற நிலையில் இந்த கலைகளை மீளக் கட்டியெழுப்ப முடியாத நிலையிலேயே வாழ்கின்றனர். அவர்கள் தமது கலைகளை கட்டியெழுப்புவதற்கான பொருளாதார ஏற்பாடுகளை மாகாண சபையும் சரி, மத்திய அரசாங்கமும் சரி செய்து கொடுக்கவில்லை.

பிரதேச கலாசார விழாக்கள், மாவட்ட கலாசார விழாக்கள் என பெருமளவு நிதியை வாரி இறைந்து வருடாந்தம் நடைபெறுக்கின்ற போதும் பிரதேச கலைஞர்களை முழுமையாக உள்வாங்கும் தன்மையும், அருகிச் செல்லும் கலைகளை ஊக்குவிக்கும் தன்மையும் காணப்படவில்லை. வழங்கப்படுகின்ற விருதுகளில் கூட பாராம்பரிய கலைகளை பேணி அடுத்த சந்ததிக்கு கடத்தும் முயற்சியில் இருப்பவர்களை கண்டுகொள்ள மறந்து விடுகிறார்கள். நாகரிக வளர்ச்சிக்கேற்ற மேலைத்தேச மற்றும் மேட்டுக்குடி கலைகளுடனும், விருந்தினர் உரைகளுடனும் அந்த நிகழ்வுகள் முடிந்து விடுகின்றன.

tappaatamயுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடுகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் கூட எமது மண்ணின் அடையாளக் கலைகளை பாதுகாக்க தவறி வருவதை அவதானிக்க முடிகிறது. புலம்பெயர் சமூகத்தில் கலை மீதான நாட்டம் என்பது வெறுமனே நுண்கலைகள் சார் பயிலுதல்களோடும், அவற்றிற்கான விலையுயர்ந்த அரங்கேற்றங்களோடும் மட்டுமே முடிந்து விடுகிறது. எமது பாரம்பரிய கலை மீதான ஆர்வம் குறைவடைந்து மேலைத்தேச நாகரிக கலைகளுடன் இசைந்து போகும் தன்மை அதிகரித்துள்ளது.

புரியாத அபிநயங்களையும் நாட்டிய முறைகளையும் அவைக்காற்றுகை செய்யும் கலைகளுள் பரதக் கலை புலம்பெயர் சூழலில் மிகப் பிரபல்யமானதாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையே வடக்கிலும் அதிகரித்து வருகிறது. அது ஒருவகையில் மிக மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் புறத்தே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நடனக் கலை எமது ஈழத்து தமிழருக்கேயுரியதான சொந்த அவைக்காற்றுகைக் கலைவடிவம் ஒன்றை புறந்தள்ளும் அளவுக்கு அல்லது மறக்கச் செய்யப்படும் அளவுக்கு இல்லையேல் அப்படி ஒன்று இருப்பதாக அறியமுடியாத நிலைக்கு கொண்டு வந்திருப்பதே இங்கு வேதனையான விடயமாகும்.

கலை3ஆகவே, புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்கள் அங்கு இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் எமது இனத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் கலைகளை மேடையேற்ற முன்வரவேண்டும். ஈழத்தில் அந்த கலைகளை பேணி வருகின்ற அல்லது அழியவிடாது பாதுகாத்து வருகின்ற கலைஞர்களுக்கு உதவ முன்வரவேண்டும். இன்று தமிழ், சமயம் என்பவற்றை பாதுகாக்கும் அமைப்புக்கள் பல புலம்பெயர் தேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஈழத்தில் இருந்தும் அறிஞர்களையும் அத்துறை சார்ந்தவர்களையும் அழைத்து அவற்றை பாதுக்காத்து வருகின்றன. அதேபோன்று எமது பண்பாட்டு அடையாளங்களுடன் தொடர்புடைய கலைகளையும் புலம்பெயர் தேசத்திலும், ஈழத்திலும் வளர்பதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகளின் பங்கு அவசியமாகின்றது. அதனை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு இந்த கலை கொண்டு செல்லப்படுவதற்கு உதவ வேண்டும். குறிப்பாக லண்டனின் கிஸ்டன் மாநிலத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அண்மையில் இரட்டை நகர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கை மூலம் இரு பிரதேசத்திற்கும் இடையில் உள்ள தமிழ் மக்கள் தமது கலைகளை கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் கூட எற்பட்டிருக்கின்றது. ஆகவே கலைகள் எமது இருப்புடன் சம்மந்தப்பட்ட விடயம். அதன் அழிவு என்பது இனத்தின் அடையாளத்தையே மறைத்துவிடும். இதை உணர்ந்து பாரம்பரிய கலைகளை வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.

26078

N5


One thought on “பாரம்பரிய கலைகளும் புலம்பெயர வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *