Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புலம்பெயர் தமிழ் மக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் சுபீட்சத்துக்கான திறவுகோலாக அமைய முடியும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

புலம்பெயர் தமிழ் மக்களின்  ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் சுபீட்சத்துக்கான திறவுகோலாக அமைய முடியும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

நிதி, அறிவு, திறமை ஆகியவை உள்ளடங்கலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் வினைத்திறன் மிக்கதான ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஹரோவில் நேற்று பிரமாண்டமான முறையில் ஆரம்பமான ” லண்டன் தமிழர் சந்தை 2016″ நிகழ்வில் வீடியோ மூலம் வழங்கிய செய்தியில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

உலக நாடுகள் எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் வர்த்தக முயற்சிகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு செயற்படுகின்றபோதுதான் அவை தாயகத்திலே தமிழ் மக்களுக்கு அவர்களின் சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு மட்டுமன்றி அரசியல் அபிலாஷகளை வெற்றிகொள்வதற்குமான ஒரு பெரும் பலமாக அமைய முடியும் என்றும் அவர் தனதுரையில் அழுத்தியுரைத்திருக்கிறார்.

முதலமைச்சரின் முழு உரையும் வருமாறு:

பிரித்தானியாவில் வாழுகின்ற தமிழ் மக்களின் வர்த்தக முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் ஏப்பிரல் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்தவிருக்கும் 2ஆவது ‘தமிழர் சந்தை’ நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற எனது ஆசிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரித்தானியாவிலே தமிழ் மக்களின் பல்வேறு விதமானா சகல வர்த்தக, வாணிப முயற்சிகளையும் உள்வாங்கி ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளம் முன்னெடுத்துவரும் பணிகளில் இந்த ‘தமிழர் சந்தை’ நிகழ்வு முக்கியமானது. வேலைப்பழு காரணமாக இந்த நிகழ்விலே நேரடியாக கலந்துகொண்டு உங்கள் எல்லோரையும் சந்திக்க முடியாமல் இருப்பதை இட்டு மனம் வருந்துகிறேன்.

உலக நாடுகள் எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் வர்த்தக முயற்சிகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு செயற்படுகின்றபோதுதான் அவை தாயகத்திலே தமிழ் மக்களுக்கு அவர்களின் சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு மட்டுமன்றி அரசியல் அபிலாஷகளை வெற்றிகொள்வதற்குமான ஒரு பெரும் பலமாக அமைய முடியும். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் வர்த்தக வாணிப செயற்பாடுகள் இவ்வாறு கட்டமைப்பு வடிவம் பெற்று யுத்தத்திலே சின்னாபின்னப்பட்டுப்போயுள்ள தாயக உறவுகளுக்கான ‘உதவும் கரங்களாக’ பரிணமித்திருக்குமானால் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல நாம் என்றோ மீண்டு எழுந்து பறந்திருப்போம். எனினும் உதவி பெறுவதிலும் நாம் தடைகளை எதிர்நோக்கி இருந்தோம். அக் காலம் போய் உதவிகளை உதவிகளை தடை இன்றி பெறக் கூடிய காலம் விரைவில் வர இருக்கின்றது என்று நம்புகிறோம்.

முன்னாள் போராளிகளுக்கான மறு வாழ்வாக இருந்தாலென்ன, போரிலே தமது கணவன்மாரை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான விதவைகளுக்கான நல்வாழ்வாக இருந்தாலென்ன அல்லது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சுபீட்சமாக இருந்தாலென்ன, இவை அனைத்துக்குமான ஒரே தீர்வு , ஆட்சியில் எம் நிர்வாகத்தில் எமக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே.

நிதி, அறிவு, திறமை ஆகியவை உள்ளடங்கலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் வினைத்திறன் மிக்கதான ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே எமது மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக நிச்சயமாக அமைய முடியும். 2014 ஆம் திகதி பிப்ரவரி 13 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தேசிய கருத்தரங்கில் புலம்பெயர்ந்த எமது தமிழ் மக்கள் எவ்வாறான உதவிகளை தமது தாயகத்துக்கு நல்கலாம் என்பதுபற்றி ஏற்கனவே விரிவாக கூறியிருந்தேன். அவர்களின் உதவி எமக்கு அவசியம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தேன். அண்மையில் நாங்கள் தமிழ் மக்கள் பலர் குடியிருக்கும் கிங்க்ஸ்ரன் சேர்பிட்டன் நகராட்சிக்குட்பட்ட பிரதேச உள்ளூராட்சி அலகுடன் எமது யாழ்ப்பாண பிரதேசத்தை இணைத்து இரட்டை நிகழ்வு செயற்பாடொன்றினை உருவாக்க நடவடிக்கை எடுத்திருந்தோம் ( Twining Programme ). பல மாதங்களாக தடைகளை சந்தித்துத் தற்போது தான் அச் செயற்பாடு முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் முன்னேற்ற அறிகுறிகள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விரைவில் முதலமைச்சர் நிதியமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

யுத்தத்தினாலே சின்னாபின்னமாகிப் போயுள்ள மக்களின் நல்வாழ்வு மற்றும் எமது பிரதேசங்களின் அபிவிருத்திக்காக புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து பணி ஆற்ற வட மாகாண சபை தயாராக இருக்கிறது. இந்த விடயத்தில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் எம்முடன் கைகோர்த்து செயற்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.

பிரித்தானிய தமிழர் சம்மேளனத்தை முன்மாதிரியாக கொண்டு ஏனைய நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தக முயற்சியாளர்களும் அமைப்பு ரீதியாக செயற்பட்டு தமது வர்த்தக செயற்பாடுகளை மேலும் மேன்மை அடைய செய்வதுடன் தாயக மக்களின் துயர் துடைப்பு பணிகளிலும் பங்கெடுக்கவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள வர்த்தக முயற்சியாளர்கள் இத்தகைய நிறுவன ரீதியான முயற்சிகளுடன் தாமும் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பது எனது நம்பிக்கை. அப்பொழுதுதான் எமது சுபீட்சதுக்கான ஒரு ‘பொருளாதார இயக்கத்தை’ நாம் கட்டியெழுப்ப முடியும். தமிழ் பேசும் மக்கள் உலகில் எங்கிருந்தாலும் ஒற்றுமைப்பட வேண்டும். சமூக, பொருளாதார, கலாசார ரீதியாகவும், மொழி வாரியாகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்ற ‘லண்டன் தமிழர் சந்தை’ அதை விட சிறப்பாக இம்முறை நடைபெற்று வெற்றிபெற ஆசி கூறுவதுடன் அதில் பங்கெடுக்கும் சகல தமிழ் வர்த்தக முயற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *