செய்திகள்

மட்டக்களப்பு நலிந்தோர் அபிவிருத்தி சமூகம் (BUDS) நடாத்திய பொங்கல் விழா

மட்டக்களப்பு நலிந்தோர் அபிவிருத்தி சமூகம் (BUDS) ஐக்கியராச்சியம் நடாத்திய பொங்கல் விழா வெம்பிளி பிறிஸ்ரன் மனர் பாடசாலை கலையரங்கில் நடைபெற்றது

[youtube url=”https://www.youtube.com/watch?v=bQV0e73bhp4&feature=youtu.be” width=”500″ height=”300″]

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவின் மகிமையை உலகெங்கம் பறைசாற்றும் முகமாக BUDS அமைப்பினர் இந்த விழாவினை ஒழுங்கு செய்திருந்தார்கள். புது நெருப்பு மூட்டி புதுப்பானை வைத்து பொங்கிய சுவை மிகு பொங்கலுடன் கலை நிகழ்ச்சிகளும் பொங்கல் விழாவை சிறப்பித்தன.
BUDS அமைப்பின் சார்பாக  பிரதி தலைவர் திரு.உமா சந்திரன் அவர்கள் பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

கலாபாரத் நடன பள்ளியின் ஆசிரியர் சிறீமதி ரஜனி சுரேஸ் குமார் அவர்களின் மாணவிகளினிதும் ஏனைய கலைஞர்களினதும் ஆடல் பாடல் கவினுறு கலைகள் என்று  பொங்கல் விழா களைகொண்டது.

புலம்பெயர் தேசத்தில் வாழும் இளைய தலைமுறையினருக்கு இவ்விழா தமிழர் அடையாளத்தின் விழாவாகவும், அவர்களுடைய கலைவெளிப்பாட்டின் தளமாகவும் அமைந்திருந்தமையைக் காண முடிந்தது.

அத்தோடு புலவர் சிவநாதன் தலைமையில் அமைந்த கவியுளம் பொங்குக என்ற  கவியரங்கினால் பொங்கல் விழா சிறப்புப் பெற்றது.  இந்த கவியரங்கில் கவிஞர்கள் பாலரவி, சாம்பிரதீபன் மற்றும் சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவிற்கு  பிரென்ற் கவுன்சில் மேயர் கனா நகீரதனுடன் ஹறோ கவுன்சில் பிரதி மேயர் சுரேஸ் கிருஸ்ணாவும் அவரது துணைவியாரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழர் அடையாளத்தை முதன்மைப்படுத்தும் பொங்கல் விழாவில் தமிழில் உரையாற்றிய இவர்கள் மொழியை  மகிமைப்படுத்தினார்கள்.

வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் அனைவரினதும் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையோடு BUDS அமைப்பினர் நடாத்திய பொங்கல் விழா உற்சாகமாக காணும் பொங்கலாக கலைநிகழச்சிகளுடன் நிறைவு பெற்றது.