செய்திகள்

புலம்பெயர் தமிழர் திருநாள் 2015

தமிழர் திருநாள் தைப் பொங்கலை தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாளாகக் கொண்டு மாபெரும் பொங்கல் விழா ஒன்று பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ்  நகரில் வருடாவருடம் இவ் விழாவினை ஏற்பாடு செய்து நடத்தி வரும் “சிலம்பு” சங்கத்தினர்  இம்முறையும் இவ் விழாவினை மிகப் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எதிர்வரும் 24,25ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இவ்விழாவானது  பாரீசின் வடக்கிலமைந்துள்ள  புறநகரான சென் டெனி நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என விழா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பொங்கலிடல்இ அகரம் எழுதல், கோலமிடல், தமிழர் உணவுக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளுடன் இலண்டன் வாழ் ஓவியர் செளந்தர் பங்கேற்கும் ஓவியக் கண்காட்சியும், சிறார்களுக்கான ஓவியப் பயிலரங்கமும், இலண்டனில் இயங்கிவரும் தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் இயக்குனர்களான சாம் பிரதீபன் மற்றும் றஜித்தா சாம் பிரதீபன் ஆகியோர் வழங்கும் நாட்டக்கூத்து  நிகழ்கலைப் பயிலரங்கமும் – விபரண ஆற்றுகையரங்கமும் சிறப்பாக நடைபெறவுள்ளன.

sam-89இசைக் கலைஞன் சந்தோஷ் குழுவினரும்,  புகழ்பெற்ற நடனக் கலைஞன் பிறேம் கோபாலுடன் அவதாரம் குழுவும் நிகழத்தவுள்ள விசேட நடன நிகழ்வுகள் இடம்பெறவுள்ள இந்த விழாவில்  சிறப்பு அதிதிகளாக முன்னைநாள் யாழ் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களும் அவரது துணைவி இசைப் பேராசிரியை திருமதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

24ம் திகதி கருத்தரங்க நிகழ்வாகவும் 25ம் திகதி கலையரங்க நிகழ்வாகவும் ஏற்பாட்டாளர்கள் இவ்விழாவினை ஒழுங்கமைத்திருக்கிறார்கள்.  கருத்தரங்க நிகழ்வில் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள்  ‘தொன்மைத் தமிழர் சமூகத்தில் அறமும் அழகியலும்’  எனும் தலைப்பிலும் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழரின் இசை மரபு’ எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றவுள்ளனர். இவர்களோடு புலம்பெயர் தமிழர் தொடர்பான தன்னார்வ ஆய்வாளர் திரு சாம் விஜய் அவர்கள் “பிரான்சிய கலனித் நாடுகளில் தமிழர்கள் – 300 ஆண்டுகள்  வரலாறு” எனும் தலைப்பில் விபரண உரை நிகழ்த்தவுள்ளார்.

புலம்பெயர்ந்து நீட்சியுறம் வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி சாதி- மதம்- தேசம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து பிரான்சில் நடாத்தப்படும் பண்பாட்டு விழாவாகிய  ‘தைப்பொங்கல்’ இம்முறை ஒன்பதாவது தடவையாக பிரான்ஸ் சிலம்பு சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.