செய்திகள்

புலம்பெயர் மக்களின் மூலம் மட்டக்களப்பில் தொழில்பேட்டைகளை அமைக்க நடவடிக்கை -யோகேஸ்வரன் எம்.பி.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற அடிப்படையில் வடகிழக்கு பகுதியில் வழங்கப்படும் தீர்வு தமிழ்பேசும் மக்களை அடிப்படையாகக்கொண்ட அரசியல் தீர்வாக இருக்கவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுகழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை மாலை புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய முன்றிலில் நடைபெற்றது.

டொல்பின் விளையாட்டுகழகத்தின் தலைவர் த.மதிவதனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைகலாசார பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வுகளில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த புதுக்குடியிருப்பு கிராமம் பல பழமையான தொன்மைகளைக்கொண்ட கிராமம்.இந்த கிராமத்தின் பிற்புறமாக ஊடுருவல் நடைபெற்றுவருகின்றது.ஒரு காலத்தில் இந்த நாட்டில் பலவிதமான வகையில் எங்களது அதிகாரங்களை செலுத்திவந்தோம்.தற்போதைய காலத்தில் எங்களது அதிகாரங்களை வேறு சிலர் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதமாக தமிழர்கள் உள்ளபோதிலும் எங்களுக்கான பூரண அதிகாரங்கள் இல்லாத காரணத்தினால் எங்களது மக்களுக்கான அபிவிருத்திப்பணிகளை சிறப்பாக செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.

கடந்த அரசாங்கத்தினை விட இந்த அரசாங்கத்தில் சில வேளைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளமுடிகின்றது.இருந்தபோதிலும் நாங்கள் எதிர்க்கட்சியிலேயே இருந்துவருகின்றறோம்.ஆனால் மாகாணசபையில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக நாங்கள் உள்ளோம்.கிழக்கு மாகாணசபை ஊடாக மக்களின் சில தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.இரண்டு அமைச்சுகள் உள்ளது.அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது மக்களின் கடமையாகும்.

நாங்கள் நீண்டகால யுத்தத்தினால் பல இழப்புகளை சந்தித்துள்ளோம்.எங்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்ற வகையில் இன்று அரசாங்கத்தினை கோரி நிற்கும் அதேவேளையில் எங்கள் மக்கள் வாழ்வாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் அவர்களின் வாழ்வாதாரத்தினையும் பொருளாதாரத்தினையும் கட்டியெழுப்பும் சூழ்நிலையில் உள்ளோம்.

அந்தவகையிலேயே கிழக்கு மாகாணத்தில் எங்களது அதிகாரங்களை பதிக்கவேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணசபையில் பங்காளர்களாக இணைந்துள்ளோம்.கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படும் நிதி போதாமை காரணமாக பல செயற்பாடுகளை செய்யமுடியாமல் இருக்கலாம்.செய்யக்கூடியவற்றை எமது மக்களுக்கு செய்யவேண்டும்.

தற்போது இந்த நாட்டிற்கு புலம்பெயர்ந்துவாழும் மக்கள் வரமுடியும்.அவர்கள் முதலீடுசெய்யமுடியும் என அரசாங்கம் கூறிநிற்கின்றது.அதனால் புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகள் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவர்கள் சார்ந்த முதலீட்டாளர்களைக்கொண்டுவந்து மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தில் உள்ளோம்.அந்தவகையிலும் ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.

எங்கள் பகுதி மக்கள் வறுமை காரணமாக வேறு இனத்தவர்களின் வர்த்தக நிலையங்களுக்கு தொழிலுக்காக செல்லும்போது அந்த இனத்தை சேர்ந்த சிலரால் மதமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.திருமணம் என்ற கோதாவில் மதமாற்றம் நடைபெறுகின்றது.இனமாற்றம் நடைபெறுகின்றது.வறுமை நிலையில் செல்லும் யுவதிகள் சிலர் சிலரால் முறையற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.இது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

நாங்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்கவேண்டுமானால் எமது பகுதிகளில் வறுமையில் வாழும் உறவுகளுக்கு தொழில்கூடங்களை ஏற்படுத்தி தொழில்வாய்ப்புகளை வழங்கவேண்டும்.இல்லாவிட்டால் எந்த செயற்பாட்டையும் செய்யாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை மக்கள் கருதும் நிலையேற்படும்.

நல்லாட்சி என்று அரசாங்கங்கள் கூறிக்கொண்டுள்ளது.நல்லாட்சி என்றால் அனைத்து கட்சிகளையும் இணைத்து அவர்களின் தனித்துவத்தினையும் மதித்து அதற்கேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.வித்தியாசமான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. நல்லாட்சி என்ற கோதாவில் இந்த நாட்டின் தேசிய கட்சிகள் தங்களது கட்சிகளை எங்களது பகுதிகளில் வளர்ப்பதிலேயே தீவிரமாக செயற்படுகின்றனர்.

இங்கு அரசியலில் நிறுத்தி தமது ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து இங்கு வரமுடியாதவர்களைக்கூட அழைத்துவருகின்றார்கள்.இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருந்துகொள்ளவேண்டும்.

கடந்த கால யுத்தம் காரணமாக பல துன்பங்களை அனுபவித்தபோதிலும் இங்கிக்கும் ஒரு இனம் சௌகரியமாகவே இருந்துவந்தது.தற்போதைய யுத்த சூழ்நிலை நீங்கி சமாதான சூழ்நிலையில் அவர்கள் எங்கள் பகுதிகளுக்குள் ஊடுறுவி தமது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.எங்களது மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் விமர்சிக்கின்றனர்.அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு அருகதையில்லை.

காத்தான்குடியில் உள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்கள் நான் அமீர்அலி தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பில் அறிக்கையொன்றினை தயார் செய்து அதனை நவமணி பத்திரிகைக்கு கொண்டுசென்று அதில் பிரசுரிக்கவைத்து பின்னர் நவமணி பத்திரிகை இரண்டாயிரம் பிரதிகளை கொள்வனவுசெய்து ஓட்டமாவடியில் இலவசமாக விநியோகித்துள்ளார்.அங்கு முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் தூண்டிவிடவேண்டும் என்பதற்காகவே இதனைச்செய்துள்ளார். தனது இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதனைச்செய்துள்ளார்.

முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்ட அமீர்அலி அவர்கள்,தமிழ் மக்களின் வாக்குகளினாலும் சகோதரர் கணேசமூர்த்தி பெற்றுக்கொடுத்த வாக்குகளினாலும்தான் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.அவர் மிகவும் கொடிய செயலைச்செய்துவந்தவர்.மகிந்தராஜபக்ஸவிடம் இஸ்லாமிய மக்களின் ஆதரவினை வழங்கி ஜனாதிபதியாக்குவேன் என ஆசைவார்த்தைகளை கூறி அஸ்வரின் தேசியபட்டியல் எம்.பி.நியமனத்தினை பெற்றுவிட்டு அதன்மூலம் கிடைத்த சலுகைகளையும் பெற்றுக்கொண்டு மறுநாளே மைத்திரியிடம் மாறியவர்.

ஒரு இஸ்லாமாக இருக்கலாம்,இந்துவாக இருக்கலாம்,பௌத்தனாக இருக்கலாம் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.ஆனால் அமீர்அலி நம்பிக்கை துரோகம் செய்தவர்.அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.

இன்று அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள் என்று கூறிவருகின்றார்.முதலில் அவர் தனது இருப்பினை ஓட்டமாவடியில் பாதுகாக்கவேண்டும்.ஓட்டமாவடி மக்கள் அவர் மீது மிகுந்த விரக்தியுடன் உள்ளனர்.அதனால்தான் அவருக்கு குறைவான வாக்குகளை வழங்கினர்.தமிழர்களின் வாக்குகளைப்பெற்றுத்தான் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக வரமுடிந்தது.தனது இருப்பினை பாதுகாக்கமுடியாதவர் ஏனையவர்களை பார்த்து மக்கள் நிராகரிப்பார்கள் என்று கூறுகின்றார்.மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.

இனத்துவேசத்தினை அடிப்படையாக கொண்டவர்கள் நாங்கள் அல்ல.இந்த நாட்டில் தீர்வுத்திட்டம் ஒன்றுவரும்போது அது அனைத்து இனங்களுக்கும் சமமாக வழங்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற அடிப்படையில் வடகிழக்கு பகுதியில் வழங்கப்படும் தீர்வு தமிழ்பேசும் மக்களை அடிப்படையாகக்கொண்ட அரசியல் தீர்வாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

ஆனால் அமீர்அலி போன்றவர்கள் வடக்கு கிழக்கினை பிரிக்கவேண்டும்,அதிலே சுகபோகம் அனுபவிக்கவேண்டும்,இரண்டு இனங்களும் ஒன்றுபடக்கூடாது என்றவகையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரிகள் அல்ல.அவர்களும் எங்கள் சகோதர இனமாகும்.அவர்களையும் நாங்கள் வளம்படுத்தவேண்டும்.

IMG_0260 IMG_0075 IMG_0078 IMG_0081 IMG_0102 IMG_0137 IMG_0188 IMG_0227

N5