செய்திகள்

புலிகளின் முன்னாள் தளபதி ராம் கடத்தல்: முறைப்பாட்டுக்கு பொலிஸ் பதில் இல்லை

விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்டத் தளபதியான ராம், அம்பாறை, தம்பிலுவில் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து நேற்று இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் மௌனமாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2009 மே மாதம், போர் முடிவுக்கு வந்த பின்னர், திருகோணமலைப் பகுதியில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் தளபதி ராம், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, திருமணம் செய்து கொண்டு, அவர் தம்பிலுவில் பகுதியில், வசித்து வந்தார்.

நேற்றுக்காலை மனைவி வெளியில் சென்றிருந்த போது, வான் ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள், ராமை கடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அவரது மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடத்திச் சென்றவர்களில் ஒருவர் காவல்துறை சீருடையை ஒத்த உடையில் இருந்ததாவும், மற்றவர், சாதாரண உடையில் இருந்ததாகவும், முறைப்பாட்டில் மனைவி குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருந்த ராம், கேணல் நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
R-06