செய்திகள்

புலிகள் இயக்கத்தில் இருந்து நான் வெளியேறாது இருந்திருந்தால் சமாதானம் ஏற்பட்டிருக்காது: கருணா

நான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறாவிட்டால் இன்றைய சமாதானம் கிடைத்திருக்காது என்று முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியின் சத்தியாகார நேர்காணல் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்த அவர்
விடுதலைபுலிகள் இயக்கம் சுகபோக இயக்கமாகவே இருந்தது ன்றும் அங்கு தான் கஷ்டப்படவில்லை என்றும் கூறினார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசுகையில்,

“நான் இன வாதத்தை எதிர்க்கிறேன். பிரபாகரன் இரண்டாம் மட்ட தலைவர்களுக்கு இடம்கொடுக்கவில்லை , ஆனால், மஹிந்த அவ்வாறு இல்லை. கட்சியில் பல பிரச்சினைகள் இருந்தபடியால் மஹிந்த அடுத்த தலைமுறைக்கு தலைமை வழங்குவதை காலதாமதப் படுத்தினார்.

இன்று எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவே. நாம் மாறவில்லை மக்கள் தலைவர்கள் தான் மாறியுள்ளார்கள். மக்களின் தீர்ப்பின்படி மைத்திரியை தற்போதைய தலைவராக ஏற்கிறேன். .

அரசியலில் எதிரிகள் என்று யாரும் இல்லை. கட்சிகள் தமது கொள்கையை மாற்ற வேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் எனக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நான் தமிழ் மக்களின் நண்பன்.

பிரபாகரன் இறக்கும்இறுதிவரை வரை எனக்கு எதிராக அவர் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. காலப்போக்கில் யுத்தம் தவறான வழி என உணர்ந்தேன். அதன்படிதான் நான் யுத்தத்தை நான் முடிவுக்கு கொண்டுவர நினைத்தேன்.

நான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறாவிட்டால் இன்றைய சமாதானம் கிடைத்திருக்காது” என அவர் தெரிவித்தார்.