செய்திகள்

பூகோள அரசியல்- புலிகளுக்கு வேறு வியாக்கியாணம் தலிபான்களுக்குச் சர்வதேச நீதி

—ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடலை இலங்கை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாம் என்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம்—  

-அ.நிக்ஸன்-

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படும் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanikzai) கட்டார் தலைநகர் டோகாவில் இருந்து தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியா, பாகிஸ்தான் தொடர்பாக விபரிக்கிறார்.

பாகிஸ்தானுடன் கூடுதல் உறவைப் பேணித் தலிபான்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், எந்தவொரு நாட்டோடும்  தலிபான்கள் நெருக்கமான உறவைப் பேணமாட்டார்களென சேஷர் முகமது அப்பாஸ் உறுதியளித்திருக்கிறார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட நேட்டோ நாடுகளுடனும் தலிபான்கள் உறவைப் பேணுவார்களென்றும் அவர் கூறுகின்றார். அதேநேரம் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் மோதலுக்காக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக்கூடாதென்றும் சேஷர் முகமது அப்பாஸ் வித்தியாசமான கருத்தொன்றைக் கூறுகிறார்.

சீனாவோடு உறவைப் பேணிக்கொண்டு இந்தியாவுக்குத் தலிபான்கள் தொந்தரவு கொடுக்கலாமெனவும் அல்லது அமெரிக்காவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடிய முறையில் தலிபான்கள் பன்படுத்தப்படலாமெனவும் இந்திய மற்றும் மேற்கத்தைய ஊடகங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், எந்தவொரு நாடுகளோடும் உறவைப் பேணமாட்டோமென சேஷர் முகமது அப்பாஸ்  கூறியிருக்கின்றமை தலிபான்கள் தொடர்பான கேவிகளை முன்வைக்கின்றன.

புதிய அரசாங்கம் அறிவிக்கப்படும் போது, அமெரிக்கா உட்பட பிராந்தியத்துடன் தொடர்புடைய அனைத்து நாடுகளும் தங்களை ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் ஷேர் முகமது அப்பாஸ் நம்புகிறார். இந்திய அரசின் உதவித் திட்டங்கள். முதலீடுகளை தலிபான்கள் வரவேற்பார்கள் எனவும் படை விலகலினால், பாதியில் விட்டுச் சென்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செய்து முடிக்குமாறும் சேஷர் முகமது அப்பாஸ் டில்லிக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.

இந்த நேர்காணலின் பின்னரே தலீபான் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாயை கட்டார் நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மிட்ட டோகாவில் சந்தித்துப் பேசியிருக்கிறார்போலும். சந்திப்புக் குறித்து டோகாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் எந்த வகையிலும் நடைபெறக் கூடாதென இந்திய தூதுவர் சேஷர் முகமது அப்பாஸிடம் கேட்டிருக்கிறார் .

ஆனால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்-இ-முகமது (JeM) தலைவர் மசூத் அசார் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைவர்களைச் சந்தித்து ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்களை ஊக்குவிப்பதில் அவர்களது ஆதரவை கோரியுள்ளதாக சீநியூஸ் இந்தியா என்ற செய்தித் தளம் கூறுகின்றது. தலிபான்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தை இந்திய அமைச்சர்கள் பலரும் வெளியிட்டுள்ள நிலையில் இந்தச் சந்தேகங்கத்தை வியாழக்கிழமை குறித்த செய்தித்தளம் வெளியிட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பக்ராம் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் சில பிரதேசங்களைச் சீனா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக வலிமைபெற முயற்சிப்பதாகவும் முன்னாள் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி எச்சரிக்கையும் விடுத்துள்ளமையும் அந்தச் சந்தேகங்களுக் காரணமாக இருக்கலாம்.

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி, புதன்கிழமை பாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இத் தகவலைக் கூறியிருக்கிறார். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்வதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் தற்போது தலிபான்கள் பெற்றுள்ள தார்மீக வெற்றியால் சர்வதேசரீதியில் ஜிகாதிகளின் பெரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரம் நடைபெறக்கூடிய வாய்புண்டு. இதைச் சமாளிக்க தயாராக இருப்பதுடன் பாதுகாப்பாக இருப்பதையும் அமெரிக்கா உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

குறிப்பாக அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ரஷியா போன்ற நாடுகள் தொடர்ந்து அமெரிக்க இணைப்புகளை ஹேக் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். ஆகவே சீனாவை நன்கு அவதானிக்க வேண்டும் ஏனெனில் பக்ராம் விமானப்படைத் தளத்தை தன் வசப்படுத்துவதில் சீனா கடும் பிரதயத்தனம் செய்வதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே இந்தியா உள்ளிட்ட தனது கூட்டாளி நாடுகளை அமெரிக்கா பலப்படுத்த வேண்டுமெனவும் நிக்கி ஹேலி வலியுறுத்தியிருக்கிறார்.

மறுபுறத்தில் படை வலிகளுக்குப் பின்னரான அமெரிக்காவின் மூலோபாயச் செயற்பாட்டில் சீனா கவனம் செலுத்த வேண்டுமென குளோபல் ரைமஸ் செய்தித் தளம் சென்ற புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மூலோபாய மற்றும் புவிசார் அரசியல் விளையாட்டை நடத்த அமெரிக்காவுக்குச் சீனா இடமளிக்கக் கூடாதெனவும் அந்த செய்தித்தளம் கூறுகின்றது.

சீனாவுக்கு எதிராகத் தலிபான்களை பயன்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா அதில் தோல்வியடையும் என்ற தொனியில் அந்த செய்தித் தளம் நம்பிக்கையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில் தலிபான்களுடன் உறவை மேற்படுத்த வேண்டிய அவசியமிருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலாளர் டொமினிக் ராப் கூறியுள்ளார். கட்டார் வெளியுறவு அமைச்சர் கே முகமது பின் அப்துல் ரகுமான் அல் தனியை டோகாவில் சென்ற வியாழக்கிழமை சந்தித்த பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தலிபான்கள் அமைக்கவுள்ள புதிய அரசாங்கத்தை பிரித்தானியா ஏற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக விபரிக்கிறார்.

ஆகவே ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படை விலகிய பின்னரான சூழலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சந்தேகங்கள் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் வலுத்திருக்கின்றன. இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் கவனத்தைத் திசை திருப்பவே ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலக்கப்பட்டன என்பது கண்கூடு. இதனையே அமெரிக்க. பிரித்தானிய அரசுகள் தலிபான்களுடன் ஏற்படுத்தி வரும் தொடர்புகளும் காண்பிக்கின்றன.

இந்த நகர்வுகள் சீனாவுக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஆனாலும் அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளை முந்திக் கொண்டு தலிபான்களைத் தமது கட்டுப்பாட்டில் அல்லது குறைந்த பட்சம் தம்மோடு இசைந்து வரக்கூடிய நகர்வுகளை சீனா மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதால், இந்தியாவுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனாலேயே சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாயை கட்டாரில் உள்ள இந்தியத் தூதுவர் சந்தித்துப் பேசியிருக்கிறர் என்பதும் வெளிப்படை. எந்தவொரு நாடுகளின் பக்கமும் தலிபான்கள் நிற்கமாட்டார்களென சேஷர் முகமது அப்பாஸை  இந்தியா சொல்லவைத்தா என்ற கேள்விகளும் உண்டு.

தூரநோக்குப் புவிசார் அரசியல் பார்வையோடு அமெரிக்கா செயற்பட்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பகைமை என்பது மிகவும் கிட்டிய தூரத்தில் இருக்கும் விவகாரமாகும். அதிகரித்து வரும் பாகிஸ்தான் சீன உறவும் புதுடில்லிக்கு ஒவ்வாமைதான்.

இதனால் ஆப்கானிஸ்தான் படை விலகலுக்குப் பின்னரான சூழலில் சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் புவிசார் அரசியல் நகர்வுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சீனா மேற்கொள்ளும் நகர்வுகளைப் போன்று முன் ஏற்பாடுகளைத் தானும் செய்ய வேண்டுமென இந்தியா கருதியிருக்கலாம்.

ஆகவே கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைபோன்றுதான் இந்தியாவின் தற்போதைய நிலையெனலாம். அமெரிக்காவோடு அளவுக்கு அதிகமான உறவை வளர்த்துக் கொண்டதனால் உருவான வலியாகவும் இதனை அவதானிக்கலாம்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனித்து நின்று எதிர்க்கத் திராணியற்ற நிலையில், ஆமெரிக்காவை புதுடில்லி அனைத்துக் கொண்டது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவும் 20015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவுடன் மூன்று ஒப்பந்தங்களைச் செய்துமுள்ளது.

இதனால் அமெரிக்காவிடம் இருந்து விலக முடியாத சூழலில், ஆப்கானிஸ்தான் படை விலகலுக்குப் பின்னர், சீனாவுக்கு எதிரான சில தனிப்பட்ட முடிவுகளை இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பின்னால் நின்று ஆப்கானிஸதானில் தலிபான்களை சீனா. ரஷியா ஆகிய நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் விவகாரரத்தில் ஈடுபட்டாலும், தலிபான்களினால் இந்தியாவுக்கு ஆபத்து உண்டு என்ற முன்னெச்சரிக்கை புதுடில்லிக்கு உண்டு. ஆனால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆபத்தை எந்தளவு தூரத்துக்கு அமெரிக்கா தடுக்கும் அல்லது தடுக்க உதவிபுரியும் என்ற கேள்விகளும் உண்டு.

சிறிய நாடான இலங்கையிலும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, சீனாவுடன் சமாந்தரமாக உறவைப் பேண வேண்டுமென எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு அமெரிக்கா இடம்கொடுதுமிருக்கிறது. இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீன ஆதிகத்தைத் தடுத்து மேற்கு நாடுகளின் கடல் பாதையாக மாத்திரமே இருக்க வேண்டுமென்ற அமெரிக்கச் சிந்தனைக்கு இலங்கை ஒத்துழைக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமலில்லை.

ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையெலடுத்துச் சிங்கள ஆட்சியாளர்களோடு எப்படிப் பேரம் பேசலாம் என்ற அனுபவம் இந்தியாவுக்கு இருப்பதைவிடத் தற்போது அமெரிக்காவுக்கே அதிகமுண்டு. முன்னாள் வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஆண்டு கொழும்புக்கு வந்தபோதே அந்த அனுபவத்தின் உச்சத்தை .அமரிக்கா தொட்டுவிட்டது.

இதனை டில்லியும் அறிந்திருக்கும். ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை சென்ற வியாழக்கிழமை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாமென்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம். இந்த மாதம் ஜெனீவா அமர்வு உண்டென்பதும் கொழும்புக்கு நல்ல ஞாபகம்.

இலங்கை குறித்த ஜெனீவா விவகாரத்தில் அமெரிக்காவுடன்  சேர்ந்து இயங்கும் பிரித்தானியா புலிகள் மீதான தடையை வியாழக்கிழமை மேலும் நீடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத் தலிபான்களை சர்வதேசப் பயங்கரவாதிகளாக அறிவித்த இந்த வல்லாதிக்க நாடுகள். தமது புவிசார் பூகோள அரசியல் நோக்கில், தற்போது தலிபான்களைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.

ஆனால் தேசிய இனம் ஒன்றின் அரசியல் விடுதலைக்கான அதுவும் போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலும், புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீடிக்கப்படவுள்ளது.

ஆகவே தலிபான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்த்தேசியக் கட்சிகள் நியாயம் கோர வேண்டும். இறைமை. சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அரசியல் விடுதலை பயங்கரவாதம் அல்ல. இதனை முன்நின்று செயற்படுத்த வேண்டிய இந்தியா, அமெரிக்கப் புவிசார் அரசியல் நகர்வுகளுக்குள் தமக்கும் நன்மையிருப்பதாகக் கருதிச் சிக்கியுள்ளது என்பதே வேடிக்கை.