செய்திகள்

பெங்களூர் அணியை வென்றது மும்பை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையிடம் வீழ்ந்தது.

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதின. பெங்களூரு அணியில் 6 மாற்றமாக தந்தையாகி விட்ட மகிழ்ச்சியில் தாயகம் திரும்பியுள்ள கிறிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வைஸ், கேதர் ஜாதவ், பர்வேஸ் ரசூல், யுஸ்வேந்திர சாஹல், அரவிந்த் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், கனே ரிச்சர்ட்சன், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, இக்பால் அப்துல்லா, வருண் ஆரோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மார்ட்டின் கப்திலுக்கு பதிலாக பொல்லார்ட் இடம் பெற்றார்.

‘டாஸ்’ வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் பெங்களூருவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்தது. லோகேஷ் ராகுல் 23 ரன்களிலும் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 33 ரன்களிலும் (30 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள். முதல் 10 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி, அடுத்த 10 ஓவர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. டிவில்லியர்ஸ் 29 ரன்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷேன் வாட்சன் 5 ரன்னிலும், அறிமுக வீரர் டிராவிஸ் ஹெட் 37 ரன்களிலும் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ்கான் 28 ரன்களிலும் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. ‘எக்ஸ்டிரா’ வகையில் 10 வைடு உள்பட 13 ரன்கள் பெங்களூரு அணிக்கு கிடைத்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், குணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேல் 5 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 31 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் மிரட்டிய கேப்டன் ரோகித் சர்மா 62 ரன்களும் (44 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஸ் பட்லர் 28 ரன்களும் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். இறுதி கட்டத்தில் பொல்லார்ட் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து தித்திப்பாக முடித்து வைத்தார்.

மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் 40 ரன்களுடன் (19 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

5-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். 3-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணிக்கு 2-வது அடியாகும். இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களில் 13-ல் இரண்டாவது பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.