செய்திகள்

பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்தி ஆந்திராவில் தொழில் செய்யுங்கள் : நாயுடுவின் அழைப்பு

ஆந்திர எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்தான் பெங்களூர் விமான நிலையம் உள்ளது. எனவே ஆந்திராவில் தொழில் முதலீடுகளைச் செய்வோருக்கு பெங்களூரு விமான நிலையம் பேருதவியாக இருக்கும் என்று பெங்களூரு ஏரோ இந்தியா கண்காட்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். பெங்களூரில் நடந்து வரும் ஏரோ இந்தியா கண்காட்சியையைப் பார்க்க நாயுடு வந்திருந்தார். அங்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் பேசுகையில், ஆந்திராவில் 40,000 ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. நிலத்துக்கு அங்கு பஞ்சமே இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ளன. எனவே நினைத்து நிமிடத்தில் அங்கு தொழில் பிரிவுகளை அமைக்க முடியும்.

2022ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் வரிசையில் முதல் 3 இடத்தில் ஆந்திரா இருக்கும். ஆந்திர எல்லையிலிருந்து பெங்களூர் விமான நிலையம் 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே ஆந்திராவுக்கு வந்து தொழில் நிறுவனங்களை ஆரம்பியுங்கள். பெங்களூரு விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆந்திராவில் தற்போது 5 விமான நிலையங்கள் உள்ளன. கூடுதலாக 6 விமான நிலையங்களை அமைக்க திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் நாயுடு.