செய்திகள்

பெண்களிடம் மன்னிப்பு கோர முடியாது : பிரதமரின் கோரிக்கையை மறுக்கும் மஹிந்த

பிரதமர்  ரணில் கூறுவதை போல் தன்னால் பெண்களிடம் மன்னிப்பு கோர  முடியாது என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வடக்கில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பாக இனவாத போக்கில் கருத்து வெளியிட்டமைக்காக மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென நேற்று அலரிமாளிகையில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராமயவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவிடம் ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நான் எந்த பெண்ணுக்கும் அநீதி இழைக்கவில்லை. எதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். குறித்த மாணவியின் கொலை சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் மாணவியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கருத்தை தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்ட சிலர் என்னைப்பற்றி தவறாக கதைக்கின்றனர். எவ்வாறாயினும் நான் எந்த பெண்ணுக்கும் அநீதி இழைக்கவுமில்லை மன்னிப்பு கோரப்போவதுமில்லை.