செய்திகள்

பெண்களுக்குச் சக்தியளிப்போம் மனிதத்துவத்திற்குச் சக்தியளித்து வளப்படுத்துவோம்

பெண்ணை விட மேலான சக்தி இவ்வுலகில் இல்லை

“பெண்ணை விடப் பெரிய சக்தி இவ்வுலகில் இல்லை எனப் பெண்ணுக்குச் சக்தியளிக்கும் திருக்குறள் அவளே   மனிதத்துவத்திற்குச் சக்தியளித்து வளப்படுத்துபவள் என்கிறது”

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
இல்வாழ்வில் பழிக்கு அஞ்சிப் பொருள் சேர்த்து,

அதனை யாவர்க்குப் பகிரவேண்டுமோ அவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்தால் அவரது வாழ்வு உலகத்தில் என்றுமே தொடருமே அல்லாது காலத்தோடு அழிந்து போகாது.  இந்தத் தன்மையினை உடையவரைத்தான்,  வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்  தெய்வத்துள் வைக்கப்படும்  என்று உலகம் தெய்வமெனப் போற்றும்.  மனிதன் தெய்வமாகப் போற்றப்படும் இந்நிலைக்கு உயர்வதற்கு வாழ்க்கைத் துணையாக விளங்கும் குடும்பத்தலைவிதான் ஆதாரசத்தி என்பதை உலகிற்கு எடுத்தியம்புவதற்கே

மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என இல்வாழ்க்கை அதிகாரத்திற்கு அடுத்த அதிகாரமாக இல்லறவியலின் தலைவாயிலாகப் பெண்ணின் பெருமை சொல்லும் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை அமைத்தார் வள்ளுவர்.
இந்த வாழ்க்கைத் துணைநலன் அதிகாரத்தில் 4வது குறளாக வள்ளுவத்தின் 54வது குறளாகத் திருக்குறள் செய்த உலகப் பிரகடனம் தான் பெண்ணை விட இந்த உலகத்தில் வேறு எந்த சத்தியும் உண்டோ?  என்ற கேள்விச் சவால்.

பெண்ணின் பெருத்தக்க யாவுள கற்பென்னும்  திண்மை உண்டாகப் பெறின்
“ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேமப்ட்ட பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள. அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்” என்று 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பரிமேழலகர் இதற்கு அருமையான உரை செய்துள்ளார்.
வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறவியலில் எழுப்பிய பெண்ணின் பெருத்தக்க யாவுள என்ற கேள்விக்கு விடையினைக் காமத்துப்பாலில் களவியலில் 1137வது குறளான  நாணுத்துறவு உரைத்தலின் 7வது குறளில்
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்  பெண்ணின் பெருந்தக்க தில் என்று விடையளிக்கின்றார்.

“கடல் போலக் கரையற்ற காமநோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ( காதல் தோற்றுவிட்டால், ஆண் பனை ஓலைகளால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊர்வலம் சென்று தன்னைத் தானே எரியூட்டிச் சாகும் கோழைத்தனத்தைச் செய்யாது) உறுதியுடன் இருக்கும் பெண் பிறப்புப் போல மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.” என்று இதற்குப் பரிமேழலகர் கருத்துரைக்கின்றார்.

அதாவது பெண்ணின் உறுதியான மனநிலையே முல்லைமண் வாழ்வில் இருத்தல் என்னும் கணவனை அல்லது தன் காதல் தலைவனைத் தேடி உறுதியுடன் வாழ்தல் என்னும் அன்பினைந்திணையாகத் தொல்காப்பியத்தில் எடுத்துரைக்கப்பட்டது. எனவே கற்பு உள்ளம் சார்ந்த உறுதியே தவிர உடல்சார்ந்த சோதனையல்ல.  இந்த உள்ள உறுதி உள்ள வாழ்க்கைத் துணைதான் தன் தலைவனைக் கணவனை மையமாக வைத்தே தன் வாழ்வைப் படரவிடுவாள். இதனால் கொழுநன் என்று கணவன் சிறப்புப் பெயரையும் தமிழிலக்கியத்தில் பெறுகின்றான். தன்னில் தன் காதல் தலைவி முற்றிலும் தங்கியுள்ளாள் என்ற நிலையில் தனக்காக வாழாது அவளுக்காக வாழும் தன்னுயிர் தானறப் பெறும் உயர்நிலை அடைகிறான். இது தெய்வநிலை இதனால் பிற தெய்வம் தொழா தன் கணவனைத் தொழும் பெண்ணுக்கும் தெய்வத்தன்மை ஏற்பட்டு அவளும் தெய்வம் போல் இயற்கையின் மேற்கூடக் கட்டளையிட்டு அதனை இயக்கும் பெரும் உயர்நிலை எய்துகின்றாள்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்  பெய்யெனப் பெய்யும் மழை என்று இதனைச் சொல்லோவியமாக மனதில் பதிக்கிறது 55வது திருக்குறள். இங்கு மழை குறியீட்டளவில் திருவருளைக் குறிக்கிறது. எனவே கணவனைத் தெய்வமாகப் போற்றி வாழும் பெண்ணால் திருவருள் பெருக்குக் குடும்பத்திற்கு ஏற்படும் என்பதே வள்ளுவம் கூறும் உண்மையாகிறது.

இத்தகைய தெய்வத்தன்மை உடைய குடும்பத்தலைவி  தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற  சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்னும் நிலையில் வாழ்வாள் என்கிறது. அதாவது “கற்பினின்றும் வழுவாமல் தன்னைக்  காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து, மேற்சொல்லிய நற்குண செய்கைகளிலும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்” என்று இதற்கு பொருள் உரைத்துள்ளார் பரிமேழலகர்.

இந்த தானும் வாழ்ந்து குடும்பத்தையும் வாழவைத்து ஊரையும் உலகையும் காக்கும் பெண்ணின் உள்ள உறுதியே அவளுக்கான வாழ்வுப் பாதுகாப்பு என்பதையும் வள்ளுவம்   சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்  நிறைகாக்கும் காப்பே தலை  எனவும் அடித்துச் சொல்ல மறக்கவில்லை. உள்ள உறுதியுடன் வாழும் பெண்ணின் அந்த கற்புநிலையை இவ்வுலகத்தவர்கள் மட்டுமல்ல புத்தேளிர் வாழும் உலகின் கண் வாழ்பவர்களும் போற்றுவர் என்பதை பெற்றாற் பெறினும் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு எனவும் திருக்குறள் எடுத்துரைக்கிறது.

இந்தக் குறளுக்கு இலக்கியமாகவே சங்கமருவிய காலத்து வாழ்ந்த இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்துக் கண்ணகியைப் படைத்தளித்து உலகின் முதல் குடிமக்கள் காப்பியம் ஒரு பெண்ணால் முடியாட்சியையும் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையை உலகுக்கு அன்றே ஏற்படச் செய்தார்.  இந்தக் குறளுக்கு உதாரணமாகத் தான் காரைக்காலம்மையார் என்னும் தமிழ்ப்பெண் ஈமப்புறங்காட்டைக் காட்டித் தமிழர்களிடை சமணம் பரப்பிய நிலையாமை என்னும் மாயை மறைய வைத்து மூன்றே மூன்று சிறிய படைப்புக்களான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி என்பவற்றால் தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மீக விடுதலைக்கான வித்தையிட்டு தமிழினம் இன்று வரை உலகில் நிலைத்து நிற்பதற்கான புரட்சியை கி பி 250 அளவில் நடாத்தினார். இதே குறள் தந்த உதாரணங்களாகத் தான் திலகவதியாரால் நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்னும் தமிழரின் சுதந்திரப் பிரகடனத்தை விடுத்த உலகின் முதலாவது சத்தியாக்கிரகப் போராட்டத்தை அறிமுகப்படுத்திய பல்லவப்பேரரசிற்கு மத்தியில் சமணத்தை வேரறுத்த திருநாவுக்கரசு சுவாமிகள் உருவாக்கப்பட்டார். இதே குறளின் உதாரணமாகத் தான் மங்கையர்க்கரசியார ;திருஞானசம்பந்த சுவாமிகளால் சமணத்திலிருந்து பாண்டியப்பேரரசை மீளவைத்தார்.

இதே திருக்குறளுக்கு உதாரணமாகத் தான் ஆண்டாளின் பெண்மைவாதக் கவிப்பெருக்கு அன்றைய காலகட்டத்தில் பெண்ணுரிமையின் வெடிப்பொலியாகக் கிளம்ப வைத்தது. அதுமட்டுமல்ல பின்னர் வீரம் தருவது தாய் முலைப்பாலடா என்று பாரதி பாடிட அடி எடுத்துக் கொடுத்த
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்  நன்கலம் நன்மக்கட்பேறு என்ற குறள் கொண்டு வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை வள்ளுவர் நிறைவு செய்துள்ளமையைக் காண்கின்றோம். வீட்டுக்குச் சிறப்புப் பெண்ணின் அருங்குணங்கள். நாட்டுக்குச் சிறப்பு அவளது வளர்ப்பில் அணிகலங்கள் போல் ஒளிரும் பிள்ளைகள் என்பதனை இக்குறள் அழகாக எடுத்துரைக்கிறது.

தொடர்ந்து புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் பிள்ளைச் செல்வத்தின் சிறப்பினைச் சித்தரித்த வள்ளுவர்,
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்  சான்றோன் எனக் கேட்ட தாய்  என்று ஒரு தாய் தன் பிள்ளை செல்வத்தைத் தேடினாலோ அதிகாரங்களை நாடினாலோ பட்டங்களை அள்ளி எடுத்தாலோ அதனைப் பெரிதாக நினைக்கமாட்டாள். அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து என்னும் சால்பை உடையவன் தன் பிள்ளை என்று கேட்கையிலேயே அப்பிள்ளையைப் பெற்ற நேரத்தை விடப் பெரிதாக மகிழ்வாள் என்னும் வள்ளுவர் குறள் பெண்ணின் தாய்மை என்ற பண்பு தன்னலமற்றது மன்னுயிர் காப்பது என்ற மகத்தான உண்மையை உலகுக்குத் தெளிவாக்குகிறது.

அது மட்டுமல்ல பெருமை பெறுவது என்றாலே ஒருவர் உறுதியான உள்ளம் கொண்ட பெண் போல வாழ வேண்டும் என்று பெண்மையின் பெருமையை வார்த்தையாக்கியது வள்ளுவம்  ஒருமை மகளிர் போலப் பெருமையும்  தன்னைத் தான் கொண்டொழுகின் உண்டு என்பது 974வது குறளான அக்குறள். இவ்வாறு பெண்ணின் பெருமையினை அவளின் இயற்கைக் கடமையாகிய மனிதஇனத்தைக் கருத்தாங்கி உருவாக்கிடும் பொறுப்பின் பின்னணியில் மிக அழகாகக எடுத்துரைக்கும் வள்ளுவர் காமத்துப் பாலை ஆண் பெண் சமத்துவ மொழியாகவே பாடி ஒருவகையில் பெண்ணே காதல் வாழ்விலும் கற்பு வாழ்விலும் ஆணுக்கு ஆதாரம் எனவும் உயர்த்தி உரைக்கின்றார்.