செய்திகள்

பெண்களுக்கெதிராக வன்முறைகள் கூட்டுப் பொறுப்பு அவசியம்: உதயணி நவரட்ணம்

பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் நாமனைவரும் கூட்டுப்பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்.மாவட்டப் பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி.உதயணி நவரட்ணம் வலிறுத்திக் கூறியுள்ளார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு நீதி கோரி யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகம் அண்மையில் கல்லூரி மண்டபத்தில் நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்குள்ள அனைவரும் ஒருங்கிணைந்து கொடுத்த அழுத்தங்கள் காரணமாகக் குற்றவாளிகள் மிகக் குறுகிய காலத்தில் தண்டிக்கப்பட்டார்கள்.பல சட்ட மாற்றங்கள்,கட்டமைப்புக்கள் போன்றவற்றினூடாகப் பெண்களுக்கான பாதுகாப்பு அங்கு ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம் சமூகத்தில் 52 வீதமானவர்கள் பெண்களாகவுள்ளனர்.இந்த நிலையில் இவ்வாறான பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் இடம்பெறுவது ஆரோக்கியமானதொரு சமுதாயத்தின் குறிகாட்டியல்ல.பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான அடிப்படைக் காரணங்களாகப் போதைவஸ்து,மதுபாவனைகள் என்பன முக்கிய காரணங்களாகவுள்ளன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்ட குற்றச் செயல்களும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட போதும் அதற்கான ஆதாரங்கள் வலுவாகவில்லாத நிலைமை காரணமாக குற்றவாளிகள் தண்டணைக்குள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.இதன் காரணமாகவும் எமது சமூதாயத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

சமூதாய வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆகாயத்திலிருந்து ஒரு போதும் குதிப்பதில்லை.அவர்கள் எமது சமூதாயத்திலிருந்து தான் உருவாகிறார்கள். சமூகத்தில் வன்முறையாளர்கள் உருவாகாது தடுப்பதற்கான அடித்தளம் வீட்டிலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும்.

சிறுவயதிலிருந்து தமது பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள்? யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்?எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள்?என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் அதிக சிரத்தையுடன் செயற்பட வேண்டும்.
பல்வேறுபட்ட தவறான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்,சமூதாயத்தில் வன்முறைச் சம்பவங்கள் பெருகுவதற்கும் தொலைபேசி மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்களான இன்ரநெற்,ஈமெயில்,பேஸ்புக் போன்றவற்றின் தவறான பாவனைகள் மூலகாரணமாகவுள்ளன.தனிப்பட்ட வகையில் தொலைபேசிப் பாவனையில் ஈடுபடுவதை மாணவப் பருவத்தினர் முற்றாகத் தவிர்க்க வேண்டுமெனவும் கூறினார். யாழ்.நகர் நிருபர்-

 IMG_4140