செய்திகள்

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி அமெரிக்கா சாம்பியன்

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடைபெற்று வந்தது. இதற்கான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் அமெரிக்கா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கியது முதலே அமெரிக்க வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்களுக்கு ஜப்பான் வீராங்கனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அமெரிக்க வீராங்கனை லாய்ட் ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார்.
அதன்பின் 14-வது நிமிடத்தில் ஹோலிடே ஒரு கோல் அடிக்க 16-வது நிமிடத்தில் லாய்ட் மேலும் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதில் கோலாக 27-வது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை ஓஹிமி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அமெரிக்கா 4-1 என முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது பாதி நேரத்தில் 52-வது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை ஜான்ஸ்டன் ஜப்பானுக்கு சேம்சைடு கோல் போட்டார். 54-வது நிமிடத்தில் அமெரிக்கா வீராங்கனை ஹீத் ஒரு கோலும் அடித்தனர். அதன்பின் இரு அணி வீராங்கனைகளும் கோல் ஏதும் அடிக்காததால் அமெரிக்கா 5-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.