செய்திகள்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வெளியேற்றியது வெஸ்ட் இண்டீஸ்

20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாய்லே மேத்யூஸ் 41 ரன்களும், கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 40 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து களம் இறங்கிய வங்காளதேச வீராங்கனைகள் 18.3 ஓவர்களில் 99 ரன்களில் சுருண்டனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சிலும் முத்திரை பதித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 2-வது வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது. அதே சமயம் 3-வது தோல்வியை சந்தித்த வங்காளதேச அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
நாக்பூரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன.