செய்திகள்

பெண்ணின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அறுத்துச்சென்ற இருவர் கைது

கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் வைத்து வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்ற இரு சந்தேக நபர்களை கினிகத்தேனை கலுகல சந்தியில் வைத்து 07.06.2015 அன்று பிற்பகல் கினிகத்தேனை பொலிஸார் கைது செய்ததாக கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பிரமலால் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி கினிகத்தேனை பிரதான வீதியில் பகதுலுவ பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி குறித்த பெண் அவரது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கும் போது நாவலப்பிட்டி பகுதியிலிலிருந்து மோட்டார் வண்டியில் வந்த இருவர் இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்து கொண்டு சென்றதாக அப்பகுதியில் இருந்த பிரதேச மக்கள் உடனடியாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு புகார் செய்துள்ளனர்.

அதன் பின் பொலிஸார் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கினிகத்தேனை கலுகல பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் அவர்கள் பயணித்த மோட்டார் வண்டியையும் கைது செய்து விசாரணை செய்யும் போது அறுத்துச்சென்ற தங்க சங்கிலியை இவர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தங்க சங்கிலியின் பெறுமதி 65,000 ரூபா என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் அநுராதாபுரம் கெக்கிராவ, எப்பாவெல பகுதியை சேர்ந்தவர்களாவர்.

21 மற்றும் 25 வயது மதிக்கதக்க இவர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்த சந்தேக நபர்களை 08.06.2015 அன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.