செய்திகள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அறநெறி வகுப்புக்களுக்கு அனுப்பி ஊக்குவிக்க வேண்டும்

அறமும் நெறியும் கலந்ததாக இந்து சமயிகளின் வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குருகுலக் கல்வியை எமது சமயம் போதித்து வருகிறது. தற்போது ஆலயங்களில் அறநெறி கல்வி என அது போதிக்கப்பட்டு வருகிறது.

சிறு வயதிலிருந்தே அறநெறி கல்வியை கற்று வரும் குழந்தைகள் தமது சமயத்தின் தாற்பரியங்களை உணர்ந்து செயற்பட பெற்றோர்களின் பங்களிப்பு இன்றியமையாதது, ஆகவே அவர்கள் தமது பிள்ளைகளை குறித்த வகுப்புகளுக்கு அனுப்பி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் மட்டுமல்லாது இந்து அமைப்புக்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதானது வரவேற்கத்தக்கது என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் இந்து கலாசார அமைச்சர் ராம் அவர்கள் தெரிவித்தார்.

அண்மையில் அட்டன் இந்து ஸ்வயம் சேவா சங்கம், விஸ்வ இந்து பரிஷித் உறுப்பினர்கள் அமைச்சரை அட்டன் தகவல் மைய அலுவலகத்தில் சந்தித்தபோது அவர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் அறநெறி கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் தடையின்றி முன்னெடுப்பதற்கு அன்றைய தினங்களில் இடம்பெறும் தனியார் வகுப்புகள் குறித்து குறிப்பிட்ட பாட ஆசிரியர்களிடம் கலந்துரையாடி தீர்வு பெற்றுத் தருமாறு மேற்படி சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் கூறுகையில்,

அறநெறி வகுப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தேசிய கொள்கையாகும். குறித்த சில மாகாணங்களில் இந்த அறநெறி வகுப்புகளுக்காக வேண்டி அன்றைய தினம் தனியார் வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனினும் நாம் அது குறித்து இப்பிரதேச தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களிடம் முதலில் கலந்துரையாடுவோம்.

எதையுமே பேசித் தீர்த்துக் கொள்வதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. அதன் படி ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த நேரத்தின் பின்பு ஏனைய வகுப்புகளை தொடரலாம் என நாம் நினைக்கிறோம்.

இது குறித்து மிக விரைவில் நான் தீர்வொன்றை உங்களுக்குப் பெற்றுத் தருகிறேன் எனக் கூறினார்.