செய்திகள்

பேச்சுரிமையை மறுக்கும் இந்தியா – இயக்குநர் “லெஸ்லி உட்வின்” ஆதங்கம்

‘நிர்பயாவின் ஆவணப்படம்’ தடை செய்யப்பட்டிருப்பதானது இந்தியாவின் பேச்சுரிமைக்கு எதிரான செயலைக் காட்டுவதாக அந்த ஆவணப்படத்தின் இயக்குநர் “லெஸ்லி உட்வின்” தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தவர் மருத்துவ மாணவி நிர்பயா. நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உத்வின், ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

இதில், நிர்பயாவின் பெற்றோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வக்கீல்கள் என பலரின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. அதேபோல, நிர்பயா விடயத்தில் பலாத்கார குற்றவாளியான முகேஷ் சிங்கிடமும் லெஸ்லி பேட்டி எடுத்துள்ளார்.  முன்கூட்டியே பிபிசி இங்கிலாந்தில் ஒளிபரப்பிய இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டதைத் அடுத்து இது தொடர்பாக மத்திய அரசு பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

India Daughter

இந்நிலையில், தன் ஆவணப்படத்தை தகுந்த பரிசீலனையில்லாமல் தடை செய்துள்ள விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என லெஸ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக லண்டனில் அவர் பேசியபொழுது,

“நான் ஏற்கெனவே பலமுறை கூறியதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இந்த ஆவணப்படத்தின் கரு, இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்சினை குறித்தது அல்ல. இப்பிரச்சினை உலகமெங்கும் இருக்கிறது. இந்த ஆவணப்படம், மிகப்பெரிய மாற்றத்துக்கான ஓர் உபகரணமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது சமகாலத்தில் நடந்த ஒரு குற்றத்துக்கு எதிரான மிகப் பெரிய போராட்டம். இப்பெருங்குற்றத்துக்கு எதிரான இந்திய மக்களின் எதிர்வினையைப் பார்த்து நான் நெகிழ்ந்து போயிருந்தேன். ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையானது, இந்தியா பேச்சுரிமைக்கு எதிராக செயல்படுவதையே காட்டுகிறது” என்றார்.

பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படத்தை 3,00,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன் இந்த ஆவணப்படத்துக்கு எதிராக பிபிசி நிறுவனத்தின் மீது 32 புகார்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.