செய்திகள்

பேயாடிகூழாங்குளம் பயணிகள் தரிப்பிடம் விசமிகளால் உடைத்து சேதம்

வவுனியா, போயாடிகூழாங்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பதற்கு தயாராகவிருந்த பேரூந்து தரிப்பிடத்தின் முகப்புப் பகுதி இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் பயணிகளின் நலன்கருதி தனியார் ஒருவரினால் இறந்தவர்களின் நினைவாக கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டு வந்த பேரூந்து தரிப்பிடம் திங்கள் கிழமை திறக்கப்படவிருந்த நிலையில் விசமிகளால் அதன் முன்பகுதி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி  அப் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றினால் அமைக்கபட்ட இப் பேரூந்து தரிப்பிடம் உடைக்கபட்டமையானது கவலையளிப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் உள்ள மக்களின் பொதுத் தேவைக்கான காணியினை வவுனியா பிரதேச செயலாளர் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தனியார் அமைப்பு ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதன் விசாரணைகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.