செய்திகள்

பைஸல் முஸ்தபாவை சமாளிக்க ஜனாதிபதி புதிய திட்டம்: சுற்றாடல் அமைச்சை வழங்க இணக்கம்

தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியில் அதிருப்தியடைந்து அதனை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்ற பைஸல் முஸ்தபாவை சமாளிக்கும் வகையில் அவருக்கு புதிய அமைச்சு ஒன்றை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்வார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டனர்.

கடந்த ஜனவரி 13ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் சிவில் விமான சேவைகள் இராஜங்க அமைச்சர் நியமிக்கப்பட்டார். எனினும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்குட்பட்ட அனைத்து திணைக்களங்களும் அமைச்சரவை அந்தஸ்துள்ள கப்பல் துறை, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் நிறுவத்தின் தலைவர் பதவிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சிபாரிசு செய்யப்பட்ட அஜித் டயஸ் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியுற்ற பைஸர் முஸ்தபா, தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமச் செய்துவிட்டு சிங்கப்பூர் சென்றார்.

எனினும் குறித்த இராஜினாமாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்ததுடன் உடனடியா நாடு திரும்புமபறும் பைஸர் முஸ்தபாவிற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நாடு திரும்பிய அவர், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றாடல் துறையின் இராஜாங்க அமைச்சராக பைஸர் முஸ்தபாவினை நியமிக்கப்ப இணக்கம் காணப்பட்டுள்ளது. முன்னரும் இவர் சுற்றாடல் துறை பிரதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.