செய்திகள்

பொங்கல் வெளியீடுகள் போட்டியில் ‘ஐ’, ‘ஆம்பள’ கூடவே ‘டார்லிங்’!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’, விஷால் நடிக்கும் ‘ஆம்பள’, கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘காக்கி சட்டை’ ஆகிய 5 திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டன.

‘ஐ’ படத்தை போலவே அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், அந்த படத்தை வெளியிடவும் ஏராளமான திரையரங்குகள் தயாராக இருந்தன.

மேலும் இவ்விரு படங்களும் பொங்கலுக்கு வெளியாகுமேயானால் மற்றப் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்று ‘காக்கி சட்டை’ மற்றும் ‘கொம்பன்’ ஆகிய படங்கள் பொங்கல் போட்டியில் இருந்து பின் வாங்கின.

இதனிடையே பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் திடீரென 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ‘ஐ’, ‘ஆம்பள’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என்ற நிலை உருவானது.

அதன்படி, வரும் 14ம் தேதி ஷங்கரின் ‘ஐ’ படமும்ம், 15ம் தேதி விஷாலின் ‘ஆம்பள’ படமும் வெளியாக இருந்தன. இந்நிலையில் தற்போது பொங்கல் போட்டியில் புதிதாக டார்லிங் படமும் இணைந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் 15ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சாம் ஆன்டன். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தை தமிழகமெங்கும் 150 திரையரங்குகளில் வெளியிடவிருக்கிறது ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம்