செய்திகள்

பொதுத் தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும்: சிவசக்தி ஆனந்தன்

நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னரே அரசாங்கம் உறுதியான சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா கூமாங்குளத்தில் கிராம வளர்ச்சிக்கு பங்காற்றிய முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்.

கடந்த பத்து வருட காலம் பல nருக்கடிகள் பல துன்பங்கள் துயரங்களில் இருந்து தற்சமயம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் ஊடாக ஒரு மாத காலத்தில் புதிய அரசாங்கம் எங்களுக்கு பெரும் சுமையாக இருந்த அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசிகளை குறைத்திருக்கின்றது. இது உண்மையில் மகிழ்ச்சியான சந்தோசமான விடயம்.

ஒரு கூலி வேலை செய்பவர் தனது பணத்தை வைத்து சீவிக்க முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் சித்திரை மாதம் இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் இந்த விலை நிலைத்திருக்குமா அல்லது விலை அதிகரிக்குமா என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. எனினும் அந்த விலை வாசி பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் நிலைத்திருக்கும் என்பதற்கு இந்த அரசாங்கம் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். அவ்வாறான நிலைப்பாட்டை புதிய அரசாங்கம் எடுக்கும் என நம்புகின்றோம்.

இந் நிலையில் அரசாங்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல விடயங்கள் தொடர்பாக பேசியிருக்கின்றோம். முதற்கட்டமாக எமது மக்களுக்கு இருக்க கூடிய அன்றாட பிரச்சனைகளை பற்றி பேசியிருக்கின்றோம். அவற்றில் தமிழ் மக்களின் காணிகளை மீள் கையளிப்பது. மீள் குடியேற்றம், நீண்ட காலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, அதற்கும் அப்பால் பலர் இன்னும் இரகசியமான சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இது தொடுர்பில் பேசியிருக்கின்றோம்.

இன்று பல முதியவர்களுக்கு உள்ள பிரச்சனை போரால் தமது பிள்ளைகளை பறிகொடுத்தது மாத்திமின்றி இறுதி யுத்தத்தில் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து காணாமல் போயுள்ளமை போன்ற விடயங்கள் உள்ளன. ஆகவே இதனை ஒரு கோரிக்கையாக நாம் அரசியடம் விடுத்துள்ளோம்.

அடுத்த கட்டமாக எமக்கு நிரந்தர அரசியல் தீர்வு தேவை என்பதனை வலியுறுத்தியுள்ளோம். அந்த வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடே இந்த அரசாங்கம் உறுதியான சரியான நிலைப்பாட்டை எடுக்கும். எனவே அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என தெரிவித்தார்.

Sivashakthi ananthan (2) Sivashakthi ananthan (3)