பொதுத் தேர்தலின் பின்பே இனப் பிரச்சினைக்குத் தீர்வு: ஜனாதிபதி மைத்திரி
இனப்பிரச்சினைக்குத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்போதைய நிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கமே 13 ஆவது திருத்தம் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் பத்திரிகைகளின் ஆசிரியர்கள், நிர்வாகிகளை நேற்றைய தினம் சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி தேர்தலில் நான் பல கட்சிகளை கூட்டிணைத்து போட்டியிட்டேன். 49 கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவுடன் இந்த வெற்றியினை நான் பெற்றுக்கொள்ள முடிந்தது. தேர்தலின் போது 100 நாள் திட்டத்திற்குள் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் 100 நாட்களுக்கு அப்பால் செயற்படுத்தவேண்டிய விதடயங்கள் குறித்தும் நாம் தெ ளிவாக எடுத்துக்கூறியிருந்தோம். அதற்கிணங்கவே தற்போதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எமது அரசியல் யாப்பிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை மக்கள் வெறுக்கின்றனர். இந்த நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. இதனால் தான் அதில் மாற்றத்தை கொண்டுவரவும் 18 ஆவது திருத்தத்தை இல்லாது செய்து 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
19 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடங்களாக குறைப்பதற்கான யோசனையினை நானே முன்வைத்தேன். இதேபோல் பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தை 5 வருடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு நான் விரும்பவில்லை என்ற தோரணையில் செய்திகள் வெ ளியாகியுள்ளன. இது முற்றுமுழுதான பொய்யாகும்.
நான் பொறுப்பேற்ற விடயத்தினை செயற்படுத்தியே தீருவேன். அரசியல் அமைப்பின் திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடி மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கு மத்தியஸ்தராக நான் செயற்படுகின்றேன்.
ஜனாதிபதியானதன் பின்னர் நான் இந்தியா, மற்றும் பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தேன். அத்துடன் இலங்கை வந்திருந்த . ஐ.நா.வின் உதவிச்செயலாளர் மற்றும் வெ ளிநாடுகளின் அமைச்சர்களையும் நான் சந்தித்துப் பேசியிருந்தேன்.
இந்திய விஜயத்தின் போது அந்நாட்டுப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தேன் அதேபோல் பிரித்தானியாவின் விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன், எலிஸபெத் மகாராணி ஆகியோரையும் சந்தித்திருந்தேன். இந்த சந்திப்புக்களிலிருந்து சர்வதேச அளவில் எமது நாடு எவ்வளவு அழுத்தங்களை சந்தித்து வருகின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
இவர்களுடனான சந்திப்புக்களின் போது புதிய அரசாங்கத்தின் மீது அவர்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. நான் பிரித்தானியாவிற்கு சென்றபோது அங்கு ஈழம் கோருகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் 300 பேரளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் என்னை சந்தித்த எலிஸபெத் மகாராணியார் இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதை ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டவர்கள் அறியாதுள்ளனர் என்று தெரிவித்தார்.
லண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பல அமைப்புக்கள் உள்ளன. நான் இம்முறை விஜயத்தின் போது சில அமைப்பினருடன் பேச்சுக்களை நடத்தினேன். ஈழம் கோரும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களுடன் நான் பேசவில்லை. அவர்களுடன் பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் சந்தித்த புலம் பெயர் தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் சிங்களத்தில் என்னுடன் உரையாடினர். எம்மை புலம் பெயர் தமிழர்கள் என்று முத்திரை குத்தவேண்டாம். நாம் உங்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயராக இருக்கின்றோம். முன்னர் இருந்த இலங்கையின் தலைவர்கள் எம்முடன் பேசவில்லை. பிரச்சினைகளை பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். நாட்டுக்கு வரவும் தயாராக உள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் பிரதமருடனும் அமைச்சரவையுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றேன். தற்போது யுத்தம் இல்லை. குண்டு வெடிப்புக்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆனால் இந்த யுத்தம் ஏற்படுவதற்கு காரணமான விடயங்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. யுத்தம் மீண்டும் உருவாகும் என்று நான் கோரவில்லை. ஆனால் இனவாதம், மதவாதங்கள், வளருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் நாட்டின் எதிர்காலம் கருதி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியமாகும்.
அரசியல் அமைப்பு மாற்றத்தினை ஏப்ரல் மாதம் சபையில் சமர்ப்பிப்போம். அரசியல் அமைப்பின் மாற்றம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் அறியவேண்டியுள்ளது. இதற்கு ஆகக்குறைந்தது இரு வாரங்களாவது வழங்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
தேர்தல் முறை மாற்றத்தில் சிறுகட்சிகள், சிறுபான்மையினக்கட்சிகள், பாதிக்கப்படாதவகையில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து பேசுகின்றோம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் தேர்தலின்போது சுதந்திரக்கட்சியின் சார்பாகவே தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன். நான் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருக்கின்றபோதும், ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி, பொன்சேகாவின் கட்சி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே நான் போட்டியிட்டேன். ஜே.வி.பி. வெளியிலிருந்து மறைமுக ஆதரவு வழங்கியிருந்தது. தேர்தலின்போது கூட நான் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன் என்றும், சுதந்திரக்கட்சியின் செயலாளராகவே போட்டியிடுகின்றேன் என்றும் தெரிவித்திருந்தேன். தேர்தலின் பின்னர் பிரச்சினையின்றி சுதந்திரக்கட்சியின் தலைமை பதவி எனக்கு கிடைத்தது. என்னிடம் அரசியல் தூர நோக்கு உள்ளது.
தேர்தலின்போது சுதந்திரக்கட்சியின் சார்பில் தேர்தல் பணியாற்றுவேன். ஆனால் இந்தத் தேர்தல் நடவடிக்கையானது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதை பாதித்துவிடக்கூடாது. அதற்கு இணங்கவே நான் எனது பணியினை மேற்கொள்வேன். பாராளுமன்றத் தேர்தலின் பின் ஒன்றிணைந்து நாம் தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டும். இதற்கு ஏற்றவகையிலேயே எனது செயற்பாடுகள் அமையும். ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அரைகுறை அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் பற்றி பேசுவதாக சிலர் கூறுகின்றனர். தேசிய அரசாங்கத்தினால் பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெனிவாவில் மார்ச் மாதம் வெ ளியிடப்படவிருந்த மனித உரிமை பேரவையின் அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து இந்த நிகழ்வு இடம் பெற்றிருக்கின்றது. இந்த அறிக்கை வெ ளியிடப்பட்டிருந்தால் முன்னைய தலைவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பர். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முரண்படக்கூடாது. இத்தகைய முரண்பாடுகளை தவிர்க்கவேண்டுமானால் தேசிய அரசாங்கமே தேவையாக உள்ளது.
நாட்டில் பிரதான பிரச்சினை சர்வதேச அழுத்தத்தை சந்திக்கும் பிரச்சினைகள் என்பவற்றை தீர்ப்பதற்கும் மீண்டும் யுத்தம் ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டியது அவசியம்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது புதிய அரசாங்கமானது 100 நாள் வேலைத்திட்டத்திலேயே கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைக்கு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாகும் தேசிய அரசாங்கத்திலேயே தீர்வு காணப்படும் என்று எடுத்துக்கூறியிருந்தேன். இந்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்கு வரலாம். அவர்கள் வந்து இங்கு முதலீடுகளையும் வியாபாரங்களையும் மேற்கொள்ளலாம். நாட்டில் சுதந்திரமாக அவர்கள் இருக்கலாம். புலம் பெயர்ந்த தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் நாம் மேற்கொள்வோம். அவர்கள் தமது உரிமைகளைப் பெற்று வாழ நாம் நடவடிக்கை எடுப்போம் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்போம். இவ்வாறான பிரச்சினைகளை வளரவிடக்கூடாது.