செய்திகள்

பொதுத் தேர்தலில் ஐ.தே.க. பெரும்பான்மை ஆசனங்கள் பெற்றாலும் தேசிய அரசே அமையும்: அஜித் பெரேரா

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடத்தப்படும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெறுவது உறுதியாகியுள்ளபோதும், பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.

நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க பெரும்பான்மையைப் பெறும் என்பது உறுதியாகியுள்ளது. அவ்வாறு பெரும்பான்மை பெற்றாலும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய சகல சட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பதே கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டுக்குப் பொருத்தமான, நல்லாட் சியைப் பலப்படுத்தும் மக்களுக்கான ஆட்சியொன்றை அமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஒரு கட்சியை வெல்ல வைப்பது மற்ற கட்சியைத் தோற்கடிப்பது ஒரு நபரை வெல்ல வைப்பது மற்றைய நபரைத் தோற்கடிப்பது போன்றவை நாட்டுக்கு அவசியமானதல்ல. நல்ல கொள்கை நல்ல வேலைத்திட்டங்களே அவசியம்.

பொதுத் தேர்தலின் பின்னர் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்போம். இது தொடர்பில் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அரசை நிர்வகிக்கும் வகையில் பாராளுமன்றம் அமையவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்துள்ளது. எனினும், முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்காக காலம் நீடிக்கப் பட்டுள்ளது.

இந்தக் காலநீடிப்பானது மேலும் பல மாதங்கள் இழுபடாமல் கூடிய விரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்ல வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லாட்சியை மதிப்பவர்களைத் வெற்றியடையச் செய்து புதியதொரு பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கூடிய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றார்.

இதுஇவ்விதமிருக்க, தேர்தல் மறுசீர மைப்புத் தொடர்பாக பேசப்பட்டுவரும் நிலையில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் யோசனைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என பிரதியமைச்சர் கூறினார். புதிய தேர்தல் மறுசீரமைப்பின் போது தேசிய பட்டியலின் மூலம் குறைந்தது நூற்றுக்கு ஐம்பது வீதம் பெண்களுக்கு இடம்ஒதுக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.