செய்திகள்

பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேறெந்த கட்சியுடனும் இணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இல்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சியாக இருப்பதற்கான தகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு என்றும் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தில் இணையாத ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து சரியான முறையில் சீர்தூக்கிப் பார்ப்பின், எதிர்க்கட்சித் தலைமைப் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்ட நான்கு கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்; தேசிய கூட்டமைப்பில் 14 பேர் உறுப்பினர்களாக உள்ளதுடன் ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 ஆசனங்களே காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்தில் இணைந்துள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும் போது, எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்குரிய தகைமை எம்மிடமே காணப்படுகின்றது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.