செய்திகள்

பொதுத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன்: பின்னர் கூட்டு என்கிறார் பொன்சேகா

ஜூன் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தலின் பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குரிமை உட்பட மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் பறிக்கப்பட்ட அனைத்து இராணுவப் பட்டங்களையும் மீளப் பெற்றுக்கொண்ட பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 98,800 க்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தனக்கு அங்கீகாரம் வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டிய பொன்சேகா, அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆட்சியிலிருந்த ஊழல்மிகு அரசாங்கம் தனது வாக்குகளை திருடியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் தற்போது தனக்கு வழங்கி வருகின்ற ஆதரவை அவதானிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இரட்டிப்பான வாக்குகளை பெற்று வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ஆட்சியை அமைத்துக்கொள்வது தொடர்பில் மற்றைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.