செய்திகள்

பொதுத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: த.தே.ம.முன்னணி அறிவிப்பு

பொதுத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமால் தமது கட்சி தனித்தே போட்டியிடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அதேவேளையில், வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொள்கை அடிப்படையிலேயே வடமாகாண சபையின் தேர்தலை தாங்கள் புறக்கணித்ததாக கஜேந்திரன் கூறுகிறார். ஆனால், பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி கட்சிகள் இன்னாள் மற்றும் முன்னாள் அரசில் பங்காளிகளாக இருந்த காரணத்தால் அப்படியான கட்சிகளுடன் தாங்கள் கூட்டணி வைக்கவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு, வாழ்வாதார மேம்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போட்டியிடும் எனவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.