செய்திகள்

பொது வேட்பாளராக கரு: முக்கிய அறிவிப்பு நாளை? சந்திரிகாவும் ஆதரவு தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல்,அறிவிக்கப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு எதிரணிக் கட்சிகளுக்கிடையே காத்திரமான இணக்கப்பாடு எட்டப்படிருக்கும் நிலையில் பொது வேட்பாளராக கருஜய சூரியவை களமிறக்க எதிரணிகள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்திருப்பதாக அறியவருகின்றது.

கடந்த இரண்டு தினங்களாக மாதுளுவாவே சோபித தேரோவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களில் 90 சதவீதமான ஆதரவு கருஜயசூரியவை களமிறக்குவதற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுவதை எதிர்பார்த்திருக்கும் எதிரணிக் கட்சிகள் அதன்பின்னர் தங்களின் முடிவை மாதுளுவாவே சோபித தேரோவின் தலைமையில் இடம்பெறவிருக்கும் கூட்டத்தில் அறிவிக்கவிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக கருஜயசூரியவை களமிறக்குவதற்கு ஜே.வி.பி. உட்பட இடதுசாரித் தரப்புகளும் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருஜயசூரிய களமிறக்கப்பட்டால் அவர் மீது அரசு புலிச்சாயம் பூசமுடியாத நிலை உருவாகுவதால் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆதரவு கருவுக்கு கிட்டும் என நம்பப்படுகின்றது.

மாதுளுவாவே சோபித தேரோ அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியே சந்தித்து இந்த முயற்சியில் வெற்றி கண்டிருப்பதாகவும், கருவை களமிறக்கும் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் பூரண இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், கட்சியின் தேசியத் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் இருப்பார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் ரணில் விக்கரமசிங்கவை போட்டியிடச் செய்வதில் மும்முரமாக இயங்கி வந்த சஜித் பிரேமதாஸ, ரணில் எடுத்திருக்கும் திடீர் முடிவால் குழப்பமடைந்துள்ளார். கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் இதற்கெதிராக மாற்று நடவடிக்கையிலிறங்க திட்டமிட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இது இவ்விதமிருக்க பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை அரசு பக்கம் இழுத்தெடுப்பதில் பகீரதப்பிரயத்தனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில சிங்கப்பூர் சென்றிருக்கும் மங்கள சமரவீர இன்று நாடு திரும்பவிருகின்றார். நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க மங்களவுடன் தொடர்பு கொண்டு அரசுடன் சேரும் எண்ணத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதையடுத்து மங்கள சமரவீர அந்த எண்ணத்தைக் கைவிட்டு கருஜயசூரியவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள மங்கள சமரவிரவுடன் பேசுவதற்கு அரச தரப்பில் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. அரச தரப்புடன் பேச அவர் விரும்பவில்லை என்ற தெரிவிக்கப்படுகிறது.

பொது வேட்பாளராக கருஜயசூரியவின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் நெருக்கடியை உருவாக்க சஜித் முனையக் கூடுமென கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. அதற்கு முகம் கொடுக்க ரணில்கரு ஆதரவு அணி தயாராகி வருவதாகவும், சிலவேளை சஜித் வெளியேரும் நிலை கூட ஏற்படலாமெனவும் நம்பகமாக தெரியவருகின்றது.

ஐ.தே.க.வில் தொடர்ந்து இருக்கவேண்டுமானால் சஜித்தை பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும், சந்திரிகா பண்டார நாயக்ககுமார துங்கவின் ஒத்துழைப்பை பெறவேண்டும் என்பன போன்ற ஐந்து நிபந்தனைகளை மங்கள சமரவீர ஏற்கனவே, முன்வைத்துள்ளார் அந்த பிரயத்தனமும் சாதகமாகக்கூடிய நிலை உருவாவதால் மங்கள சமரவீர அரசு பக்கம் போகமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

நாளை திங்கட்கிழமை மாதுளுவாவே சோபித தேரோவினால் கூட்டப்படும் ஊடக மாநாட்டின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா, தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத்சாலி உட்பட எதிரணி கட்சிகளும், இடதுசாரி கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைவர் திபா சம்பந்தனை நேற்று இரவு சந்தித்த மனோகணேசன் எதிர்க் கட்சிகள் மத்தியில் திடம்பெற்றுள்ள பேச்சுக்கள் பற்றி விளக்கினார்.