செய்திகள்

பொது வேட்பாளரிடம் 4 கோரிக்கைகளை முன்வைப்போம்: மனோ கணேசன் பேட்டி

பொது எதிரணி வேட்பாளர் ஒருவரை களம் இறக்கினால் நாம் அவருக்கு ஆதரவளிப்போம். அதற்காக நாம் நான்கு கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன்வைப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பொதுவேட்பாளர் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள், பதுளை மண்சரிவு போன்ற விடயங்கள் தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இதனை அவர் கூறியிருக்கின்றார். அவரது பேட்டியின் விபரம்:

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் நீங்கள் முக்கிய பங்காற்றிவருகின்றீர்கள். பொது வேட்பாளரைக் களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க முடியும் என நம்புகின்றீர்களா?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிரணி முன்னெடுப்புகளில், நான் ஒரு பங்கை ஆற்றுகின்றேன். அது முக்கியமான ஒரு பங்கு என நீங்கள் அனுமானிக்கின்றீர்கள். பொறுத்திருந்து பார்ப்போம். சில விஷயங்கள் பகிரங்கமாகவும், இன்னும் சில விஷயங்கள் திரைமறைவிலும் நடைபெறுகின்றன. மகிந்தவை எதிர்த்து நிற்பவர், எதிரணியின் பிரதான கட்சிகளை உள்வாங்கிய ஒரு பொது வேட்பாளராக இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க முடியும் என நம்புகின்றேன். அதனால்தான் இந்தளவு பிரயத்தனம்.

தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிப்பது ஒன்றுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதனைவிட எதிர்க்கட்சிகளிடையே கொள்கை ரீதியில் எவ்வாறான பொது இணக்கப்பாடு உள்ளது?

இது உண்மைதான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. மகிந்த அரசு எதையெல்லாம் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்று பாருங்கள். தானும், தனது அரசும் பல்வேறு அபாயக்கரமான நிலைப்பாடுகளின் பிரதிநிதி என்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். சட்டத்தை மதிக்காத ஆட்சி, அகோர ஊழல், வீண் விரயம், குடும்ப ஆதிக்கம், ஊடக ஆதிக்கம் மற்றும் அச்சறுத்தல், அரசை சார்ந்தவர்களுக்கு எதையும் செய்துவிட்டு சட்டத்தை மீறிவிட சட்டவிலக்கு, கொலைவெறியுடன் கூடிய மனித உரிமை மீறல், நீதிதுறையில் தலையீடு போன்ற பல்வேறு விடயங்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் எதிராக இந்நாட்டு வரலாற்றில் ஒருபோதும் காணக்கிடைக்காத அளவில் இன மத துவேஷம், இந்நாட்டை சிங்கள-பெளத்த குடியரசாக்கும் பெருந்திட்டம், ஆகிய முகங்களை கொண்டதுதான் மகிந்த அரசு.

ஆகவே மகிந்த அரசை வீழ்த்துவது என்பது இந்த நிலைப்பாடுகளை வீழ்த்துவது அல்லது குறைந்தபட்சம் பலவீனப்படுத்து என்பதாகும்.

எதிரணி பொது வேட்பாளர் குறித்த இந்தப் பேச்சுக்களில் எவ்வாறான இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது? அதாவது யாரை களத்தில் இறக்குவது? எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து…

எதிரணி பொது வேட்பாளர் தொடர்பாக இன்னமும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. தினசரி கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இன்னமும் முடிவு எட்டப்படாமைக்கு ஐதேகவின் உள்ளக நிலைமைகள் பிரதான காரணங்களாகும். அந்த கட்சிக்கு உள்ளே ஜனாதிபதி தேர்தல் போட்டியில் சின்னம், வேட்பாளர் ஆகியவை தொடர்பாக பொது உடன்பாடு ஏற்படவில்லை. யானை சின்னம் என்று ஒரு அணியும், பொது சின்னம் என்று ஒரு அணியும், வேட்பாளர், ரணில்தான் என்று ஒரு அணியும், கரு ஜயசூரியதான் என்று ஒரு அணியும் உள்ளன. இதுதான் உண்மை.

ஐதேகவுக்கு வெளியே சிங்கள தரப்பில் ஜேவீபீ, சரத் பொன்சேகா, சந்திரிகா அணி என்பவை உள்ளன. இப்போது ஹெல உறுமயவின் இரத்தின தேரர் அணியும் களத்தில் உள்ளது. முஸ்லிம் மக்கள் ஐதேகவுடன் இருப்பதாக, அக்கட்சி இப்போது நம்புகிறது. அதைதவிர நண்பர் அசாத் சாலியின் கட்சி உள்ளது. இதைவிர எதிரணியில் தமிழர் தரப்பில் கூட்டமைப்பும், நமது கட்சியும் உள்ளன.

பெரிய கட்சியான ஐதேகவுக்கு உள்ளே ஒரு தீர்மானத்துக்கு உடன் வருவதில் சிக்கல் இருப்பது சகஜமே. இது தொடர்பிலே ஐதேகவுக்கு உள்ளேயும், வெளியேயும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. அரச வளங்களை பயன்படுத்தி மகிந்த உத்தியோகப்பற்றற்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். இது பற்றி அலட்டிக்கொள்ள தேவையிலை. ஏனென்றால் மகிந்த அரசு பயப்படுகின்றது என்பதுதான் இதன் காரணம். வெளியே என்னத்தான் வீராப்பு பேசினாலும், சமீப காலத்தில் அரசாங்கம் முதன்முறையாக ஒரு தேர்தலை கண்டு பயப்படுகின்றதேன்றால் அது இந்த முறை, இந்த தேர்தலை கண்டுதான் பயப்படுகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், பிரதான எதிர்க்கட்சிகள் ஆட்சியை மாற்றுவது என்பதற்கு அப்பால் சிந்திப்பதாகவே தெரியவில்லையே?

“எதிரணி நோக்கம், முதலில் ஜனநாயக வெளியை ஏற்படுத்துவதும், பிறகு வரும் பாராளுமன்றத்துக்கு தேசிய இனப்பிரச்சினையை சமர்பிப்பதும்” என்றும், “முக்கிய எதிரணி புள்ளிகளுடனான என் சந்திப்புகள் ஒன்றை உணர்த்துகின்றன. பொது வேட்பாளர், தமிழர் தேசிய இனப்பிரச்சினையை அணுக போவதில்லை” என்றும், “நமது மக்களுக்கு பிழையான எதிர்பார்ப்புகளை கொடுக்க நான் தயார் இல்லை. உள்ளதை உள்ளபடி நேர்மையாக சொல்லிவிட விரும்புகிறேன்” என்றும் நான் என் டுவீடர் தளத்திலே கடந்த வாரம் சொன்னேன்.

எதிரணியிலோ, ஆளும்தரப்பிலோ பெரும்பான்மை கட்சிகள் எப்போதும் பெரும்பான்மை இனத்தை எப்படி தாஜா செய்வது என்பதை பற்றிதான் முதலில் சிந்திக்கின்றன. இதுதான் யதார்த்தம். இதை நான் மறைக்க விரும்பவில்லை. இத்தகைய சூழலில்தான் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை கட்சிகளுடன் தேவைக்கருதி இணைந்து செயல்பட்டு சுழியோட வேண்டியுள்ளது. உண்மையில், இதன்மூலம் நாம் இனரீதியான எமது சொந்த கட்சிகளை பலப்படுத்திட வேண்டிய தேவை இன்று மீண்டும், மீண்டும் உணரப்படுகின்றது.

அதேவேளை இன்றைய யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கான முழுமையான தீர்வு திட்டத்தையும், உடன்படிக்கையும் தம் தேர்தல் அறிக்கைகளில் முன்வையுங்கள் என நான் எதிரணியிடம் கோரவில்லை. இப்படி கோரி, ஆளும்கட்சி இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரச்சாரம் செய்ய இடமளிக்க போவதில்லை. ஆனால், அதற்காக இனப்பிரச்சினையே இல்லை என்பது போல் நாடகமாடுவதை அனுமதிக்க முடியாது. தேசிய பிரச்சினை என்ற ஒன்று இந்நாட்டில் இன்றளவும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்ற உண்மையை கூட கணக்கில் எடுக்காமல், பொதுவேட்பாளர் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பது என்பதன் அடிப்படையிலே பிரதான எதிர்க்கட்சிகளிடையே குறைந்தபட்ச இணக்கப்பாடாவது இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அதிகாரத்துக்கு வரப்போகும் ஒருவர் இதனை நடைமுறைப்படுத்துவார் என நம்பமுடியுமா? அதற்கான உத்தரவாதத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?

இதுபற்றி ஆரூடம் சொல்லமுடியாது. உண்மையில் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்பது இன்று பெரும்பான்மை இன கட்சிகளின் தேவையாகதான் உள்ளது. ஆகவே உத்தரவாதத்தை வாங்க வேண்டியவர்களிடம் அவர்கள் வாங்கி கொள்ளட்டும்.

கொள்கை அடிப்படையில், ஜனநாயக மக்கள் முன்னணி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அகற்ற விரும்புகிறது. ஆனால், நமது மக்களை பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கும், நிறைவேற்று பிரதமர் முறைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது. நிறைவேற்று பிரதமர் முறைமையின் கீழும் பல்வேறு துன்பங்களை நாம் கடந்த காலங்களில் சந்தித்துள்ளோம்.

இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த கால ஜனாதிபதிகளை விட, மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரங்களை கொண்டு ஒருவித மன்னராட்சியை கொண்டு வந்துவிட்டார். இந்த ஜனாதிபதியின் கீழ்தான் இந்த முறைமை இன்று இந்நாட்டில் ஒரு மறைமுக சிங்கள பெளத்த மன்னராட்சியை ஏற்படுத்தி வருவதாக நினைக்கின்றேன்.

பொது வேட்பாளர் ஒருவர் எதிர்க்கட்சிகளின் சார்பில் களம் இறக்கப்படும் போது உங்களுடைய கட்சி சார்பில் நீங்கள் அவரிடம் முன்வைக்கப்போகும் கோரிக்கை அல்லது நிபந்தனை என்ன?

பிரதானமாக நான்கு கோரிக்கைகள்.

ஒன்று, இந்த நாட்டில் ஒரு யுத்தத்திற்கு காரணமாக அமைந்த ஒருதேசிய இனப்பிரச்சினை இன்னமும் தீராமல் இருகின்றது என்ற அடிப்படை உண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இரண்டு, இன்றைய தேர்தல்முறைமை மாற்றப்படும்போது அது சிறு கட்சிகளின், சிறுபான்மை கட்சிகளின் நியாயமான பிரதிநிதித்துவ உரிமைகளை பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது.

மூன்று, எதிர்காலத்தில் எமது ஆட்சி உருவாகும் பட்சத்தில், தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா பத்து பர்சஸ் காணி ஒதுக்கி தரப்படும் என்ற உறுதிமொழி, எதிரணி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

நான்காவது, இந்நாட்டின் சிங்கள தலைவர்களான, பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்க, பிரேமதாச, சந்திரிகா, ரணில் ஆகியோர், தமிழ் தலைவர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அவற்றின் மூலம் பல ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜே. ஆர். ஜெயவர்த்தன இந்திய அரசுடன் ஒரு உடன்படிக்கை ஆவணத்தை ஏற்படுத்தினார். இன்றைய ஜனாதிபதி சர்வ கட்சி மாநாடு நடத்தி, அதன்மூலம் ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டது. ஐநா சபையுடன் இந்த ஜனாதிபதி ஒரு கூட்டறிக்கை ஆவணத்தை ஏற்படுத்தினார். ஆகவே எதிர்கால அரசு, இந்த அனைத்து ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு தமிழ், முஸ்லிம் தலைமைகளுடன், குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்ததைகள் நடத்த வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொள்ளப்படும் நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?

தேசிய மற்றும் ஜனநாயக சாயம் பூசப்பட்ட சிங்கள பெளத்த கோரிக்கைகள்.

மலையகத்தில் பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. ஆபத்து குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும் கூட மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனத்தில் (National Building Research Organization) மண்சரிவு ஆய்வு அபாய நிர்வாக பிரிவு (Landslide Research & Risk Management Division) என்ற ஒரு அங்கம் இருக்கின்றது.

பதுளை – கொஸ்லாந்தை – மீரியபத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதால், அங்கு வாழும் மக்களை மாற்று இடங்களுக்கு இடம்பெயர செய்யுங்கள் என்ற அபாய எச்சரிக்கை அறிவித்தலை இந்த என்பிஆர்ஒ என்ற தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனம், மூன்று வருடங்களுக்கு முன்னர் 2011ம் வருடத்தில் தந்ததாக, அந்த நேரத்தில் இடர் நிவாரண அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க இப்போது சொல்கிறார். இது ஒரு அமைச்சரின் வாயில் தவறி வந்துவிட்ட ஒரு வாக்குமூலம்.

இந்த தகவலை குறிப்பிட்ட தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்தாகவும் அமைச்சர் சொல்கிறார். ஆகவே “உரிய நடவடிக்கை” எடுக்காத தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் இப்போது சொல்கிறார்.

ஆக, அபாய அறிவிப்பு வந்த போது உடனடியாக செயற்பட்டு, மாற்று குடியிருப்புகளை அமைத்து, இந்த தோட்ட மக்களை அப்புறப்படுத்தி, அபாயமில்லா இடங்களில் குடியேற்றும் எந்தவிதமான பொறுப்பும், இந்த நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு, துறை சார்ந்த அமைச்சருக்கு, இந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்து இந்த அரசுக்கு உள்ளே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு, மாவட்ட செயலகத்துக்கு, பிரதேச செயலகத்துக்கு, கிராம சேவையாளருக்கு கிடையாதா? மலையக மக்களின் அனைத்து வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் தோட்ட நிர்வாகங்கள் மாத்திரம்தான் பொறுப்பா? மலையக தோட்ட தொழிலாளர் இந்த நாட்டு தேசிய நீரோட்டத்தில் இல்லையா? இவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? என்ற கேள்விகளை நான் எழுப்புகிறேன்.

மலையகத்து மக்கள், குறிப்பாக உழைக்கும் தோட்ட தொழிலாளர், தேசிய நீரோட்டத்திலிருந்து விலத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை இந்த மண் சரிவு படம் பிடித்து காட்டுகிறது. இங்கே பரிதாபம் என்னவென்றால், இந்த கசக்கும் உண்மையை, நமது இனத்து தாய்மார்களும், இளைஞர்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாக ஒரு இருநூறு சொந்தங்கள், நூறு அடி மண்ணிலே புதைந்து, உலகத்துக்கு உணர்த்தியுள்ளார்கள்.

கூட்டமைப்புடன் பேசியுள்ளீர்களா? ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன?

கூட்டமைப்பு தலைவருடன் நான் கலந்துரையாடி வருகிறேன். சம்பந்தன் அவர்கள் யதார்த்தவாதி. கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலில் கூட்டமைப்பு பெரும் எடுப்புடன் பிரச்சாரம் செய்யும் என எனக்கு தோன்றவில்லை. எதிரணி மேடைகளில் தோன்றி, ஆளும் தரப்புக்கு, யானை-புலிகூட்டணி என்று பேச சந்தர்ப்பம் தந்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் புதிய ஒரு ஆட்சி வந்தாலும் கூட, உடனடியாக வட-கிழக்கிலே பாலும், தேனும் ஓட போவதில்லை என்பதை அவருக்கு அனுபவம் உணர்த்தியுள்ளது. இந்த கருத்தை நானும் பகிர்ந்து கொண்டேன். ஆக, சர்வதேச, உள்ளூர் நிலைமைகளை கவனத்தில் கொண்டு, கூட்டமைப்பு அமைதியாக காய் நகர்த்தும் என்று தோன்றுகிறது.

இன்றைய தேசிய அரசியல் பரப்பில் உங்கள் கட்சியின் பாத்திரம் என்ன?

அதை வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும்.

சிங்கள மக்களை எண்ணிக்கையிலே பெரும்பான்மையாக கொண்ட இந்த நாட்டிலே, தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் கணக்கில் எடுக்கப்படாமல் ஒதுக்கப்படுகின்றன. இந்த போக்கை எதிர்த்து நின்று, வடக்கு, கிழக்கு, மலையக, மேற்கு திசைகளில் பரந்து வாழும் நமது இனத்தின் அபிலாசைகளை தேசிய அவதானத்திற்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்தையும் நான் தினந்தோறும் செய்கிறேன். அதற்கு முதலில் தமிழ் மொழியறிந்த நமது மக்கள் மத்தியில் நாட்டில் தொடர்ச்சியாக எழுகின்ற ஒவ்வொரு பிரச்சினைகள் தொடர்பாகவும், தெளிவான கருத்தோட்டம் உருவாக வேண்டும். அதற்கு நீங்கள் உதவிட வேண்டும்.

அறைக்குள் இருந்தபடி, நான் ஏதோ அறிக்கை அரசியல் செய்வதாகவும், பிரயோஜனமற்ற வீர வசனம் பேசுவதாகவும் சொல்லி, என்னை சிறுமைபடுத்தி காட்ட சிலர் விரும்புகின்றார்கள். அதேவேளை, “மனோ கணேசனை தனித்த ஒரு கட்சியின் தலைவராகவோ, மேல் மற்றும் மலையக மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதியாகவோ மட்டும் சொல்லிவிட முடியாது” என்று புதிய தலைமுறை ஆய்வாளர் பிரவீன் புருஜோத்தமன் தங்கமயில் சொல்கிறார்.

நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியில் எங்கள் கருத்தோட்ட வீச்சு இருக்கின்றது என்பதைத்தான் அவர் சொல்கிறார் என்று நான் நம்புகின்றேன். புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களும், இன்று நாங்கள் என்ன சொல்கின்றோம் என்பதை காசு கொடுத்து வாங்கி படிக்கின்றார்கள். இந்த கருத்தோட்ட வீச்சை நான் விலை கொடுத்து “கோஸ்ட்” எழுத்தாளரை கொண்டு எழுதுவிக்கவில்லை அல்லது விலை கொடுத்து பிரசுரிக்கவும் அல்லது ஒளியொலி பரப்பவும் இல்லை. அப்படி விலை கொடுத்து வாங்கும் அதிகார அந்தஸ்த்தும் என்னிடம் இல்லை. நமது ஊடகர்கள் தம்மை விலை பேசி விற்கும் வியாபாரிகளும் இல்லை. இங்கே கருத்தின் காத்திரமும், ஆளுமையும்தான் முக்கியம். இந்த உண்மை, சிலருக்கு புரிவதில்லை.

தேசிய அரசியல் பரப்பில், எனது கட்சியின் பாத்திரம் தொடரவேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்கான புதிய இளைஞர் நாற்று மேடையை நான் என் கட்சியில் இன்று உருவாக்கியுள்ளேன். என் தனிப்பட்ட பாத்திரம் எவரும் எதிர்பாராத வேளையில் முடிவுக்கு வரும்.