செய்திகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியில் விஷமிகளினால் திட்டமிடப்பட்ட இடையூறு

தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது திருகோணமலைப் பகுதியில் வைத்து சிலர் தாக்குத்தல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.திருகோணமலை – மடத்தடிச் சந்திப் பகுதியில் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துகொண்டிருந்தபோதே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் முல்லைத்தீவிலுள்ள இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களை குறித்த பகுதிக்கு விரையுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை இன்று நண்பகலை அண்டி முல்லைத்தீவு – உடுப்புக்குளம் பகுதி யில் தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் மதத் தலைவர்கள் இணைந்து பேரணி வரவேற்கப்பட்டு பேரணியோடு இணைந்து தொடர்ந்து முல்லைத்தீவு நகரம் நோக்கிச் செல்லவுள்ளனர்.எனவே, முல்லைத்தீவில் பேரணியோடு ஒன்றுகூடக் கூடியவர்கள் உடுப்புக்குளம் பகுதியில் இணைந்து கொள்ளுங்கள் என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.(15)