செய்திகள்

பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி: 29 இல் உயர்நீதிமன்றில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீள அளிக்குமாறு உத்தரவிடும்படி கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சார்பில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

மக்கள் வாக்குகளால் வெற்றிபெற்ற சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடும்படி கோரி சரத் பொன்சேகாவின் பிரத்தியேகச் செயலாளர் சேனக டி சில்வா பெப்ரவரி 25ம் திகதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வெற்றிடமான சரத் பொன்சேகாவின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்புமாறு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடும்படி சேனக டி சில்வா தனது மனுவில் கேட்டுள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணையாளர், ஜயந்த கெட்டகொட உள்ளிட்ட எண்மர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.