செய்திகள்

பொன்சேகா வாக்குரிமையைப் பெறுவாரா? எம்.பி.யாவதில் சட்டச்சிக்கல்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளதால் அவருக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வாக்குரிமை பதியும் காலத்தில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

சரத்பொன்சேகாவின் வாக்குரிமையை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்ததாகவும் அதில் எந்தவித சட்டச்சிக்கலும் கிடையாதென அறிந்து கொண்டதாக தெரிவித்த தேர்தல் ஆணையாளர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து அதனை சரத் பொன்சேகாவுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்து ஜனநாயகக் கட்சி எம்.பி. ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்த கடிதம் தொடர்பில் சட்டவல்லுனர்களுடன் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இழந்த வாக்குரிமையைப் பெற்றுக்கொடுப்பது ஒருவிடயம். பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொடுப்பது வேறு விடயம். இரண்டுக்குமிடையில் சட்ட விதிமுறைகள் உள்ளன.

முதலாவது விடயம் ஜனாதிபதியின் மன்னிப்புடன் முடிவுக்கு வந்து விட்டது. சரத் பொன்சேகா இப்போது பிரஜாவுரிமை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு வாக்குரிமையை வழங்க முடியும்.
இரண்டாவது விடயம் தேர்தலோடு தொடர்புபட்டது. அதில் சட்டச்சிக்கல்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம், வேறு சட்டவல்லுனர்களிடமும் ஆலோசனை கோரியுள்ளேன். அது குறித்து பின்னர் அறிவிப்போம் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.