செய்திகள்

பொரளை பள்ளிவாயில் மீதான தாக்குதல் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் செயல்: டக்ளஸ்

கொழும்பு, பொரளை முஸ்லிம் பள்ளிவாயில் மீது கடந்த 30ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இச் செயலானது நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் செயலாகும். இச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த கால ஆட்சியிலும் சில பேரினவாத தீய சக்திகள் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.

தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களில், அத் தீய சக்திகள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளதையே பொரளை முஸ்லிம் பள்ளிவாயில் மீதான தாக்குதல் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமானவையல்ல. இவ்விதமான இனவாத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்காகவே நாம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

இந்நிலையில், பொரளை முஸ்லிம் பள்ளிவாயில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக, முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் சட்டரீதியில் தண்டிக்கப்படவும், இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.