Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் அபார்ட்மெண்ட் வாங்க போகிறீர்களா ? உங்களின் கவனத்துக்கு

கொழும்பில் அபார்ட்மெண்ட் வாங்க போகிறீர்களா ? உங்களின் கவனத்துக்கு

சுதாகரன் பேரம்பலம்

2015 இல் ஆட்சிக்கு வந்த மைத்ரியின் நல்லாட்சிக்கான அரசாங்கம்,  தமிழ் மக்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது போலும். இவ்வளவு காலமும் திரிசங்கு நிலையில், இலங்கையில் இருப்பதா இல்லை எப்படியாவது வெளிநாட்டுக்கு போவதா என்று இருந்த பலருக்கு ஏதோ பதில் கிடைத்திருப்பதாலோ என்னவோ தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சொத்துக்களின் விலை அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து  வருகிறது.  பொருளாதாரம் ஒன்றின் மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை , எதிர்காலத்தில் வருமானம் தொடர்பில் மக்களுக்கு இருக்கின்ற உறுதியான எதிர்பார்ப்பு, வட்டி வீதம், வீட்டு கடன் வசதிகள்  என்பன சொத்துக்களுக்கான கேள்வியை தீர்மானிக்கும் சில காரணிகள். 2015 ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு அப்படியான காரணிகள் எல்லாம் கூடி வந்ததால் சந்தை நிலைமைகளில் பாரிய மாற்றம்  நிகழ்ந்திருக்கிறது என்பதுடன், என்றுமில்லாதா வகையில் சொத்துக்களை வாங்குவதற்கு அதிகரித்த போட்டி நிலவுகிறது.

அதிகரித்த போட்டி நிலைமை 

முதலாளித்துவ பெருளாதாரமே போட்டியின் அடிப்படையிலானது. அடிப்படை கல்வியில் இருந்து நாம் நுகரும் பொருட்கள் வரை ஏனையவர்களுடன்  போட்டி போட்டு அடைகின்ற நிலைமையே இந்த பொருளாதார முறையின் முக்கிய  பண்பு. அதீத இலாபமும், மற்றைய மனிதன் மீதான சுரண்டலும் இதன் விளைவுகளே. சக மனிதரோடு போட்டி போட்டு ஓடிக்கொண்டு இருக்கும் இந்த ஓடிடப்பந்தயத்தில் சில சமயங்களில் நாம் அடிப்படையையே மறந்து விடுகிறோம். வெற்றி பெற்று விட வேண்டும் என்ற ஆதிக்க வெறி பல நேரங்களில் கண்ணை மறைப்பதால் தொறுப்போவதும் நட்டமடைவதும் நாமே. 

ஒரு பக்கத்த்தில் வெள்ளவத்தை, தெஹிவளை  போன்ற  நகரங்களில் சாதாரண மக்கள் அப்பார்ட்மெண்ட் ஒன்றை சொந்தமாக்கி கொள்வதற்கான போட்டி , மறு பக்கம்  ஏராளமான கட்டிட நிர்மாண நிறுவனங்கள் போட்டி போட்டு வாடிக்கையாளருக்கு எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்ற போட்டி. அதிக போட்டி சூழலின் காரணமாகவே இதில் அதிகம் ஏமாற்றப்படுவதும் சிக்கிக்கொண்டு திண்டாடுவதும் சாதாரண மக்கள் தான். கட்டிட நிர்மாண நிறுவனங்களுக்கு இந்த துறை பற்றிய ஏற்ற இறக்கங்கள் தெரியும் என்பதோடு வாடிக்கையாளர் பெரும்பாலும் முதல் முறையாகவோ ஒரு தடவையோ தான்  அப்பார்ட்மெண்ட் ஒன்றை கொள்வனவு செய்கிறார்கள் என்ற அடிப்படையில்  அபார்ட்மெண்ட் சந்தையில் வாடிக்கையாளர்களை விட கட்டிட நிர்மாண நிறுவனங்களுக்கே வாய்ப்புக்கள் அதிகம். போட்டி தன்மையுடனும் , எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற பேராசையுடனும் வரும் சாதாரண மக்களுக்கு அதீத விலைக்கு விற்பதில் அந்த நிறுவனங்கள் எப்படியோ வெற்றி கொண்டு  விடுகின்றன. 

காரணம் இல்லாமலே அதிகரிக்கும் விலை 

அப்பார்ட்மெண்ட்களின் விலை வானை முட்டும் அளவுக்கு கூடி இருக்கிறது. இவ்வளவு  விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக தான் தான் இருக்கிறார்கள். ஆனால் எந்த அடிப்படையில் விலை மட்டங்கள் கூடுகிறது என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. வெளிநாட்டு பண புரள்வு மிக முக்கியமான காரணமாக ஒரு பக்கம் இருந்தாலும், கொழும்பில் தொழில் புரியும், வியாபாரம் செய்யும்  மக்களுக்கும் வாங்க கூடியதாக இருப்பதும், எவ்வளவு தூரம்  விலை அதிகரிப்புடன் கூடியதான இந்த நிலைமை நிலைத்திருக்கும் என்பதும் சந்தேகமே. எந்த விலைக்கும் துரத்தி வாங்கும் நிலைமை ஏதோ ஒரு புள்ளியில் முடிவுக்கு வர வேண்டும். இதே நிலைமையில் தொடர்ந்தால் விலை கூடிய அப்பார்ட்மெண்ட்கள் தேக்கமடைந்து நிற்க, மும்பை போன்ற நகரங்களில் உள்ளது போன்று இருப்பது முப்பது மாடிகளை கொண்ட உயர்ந்த கட்டடங்கள் சாதாரண விலைக்கு கிடைக்க கூடிய  மாற்றம் ஏற்படலாம் 

large36போலி வாக்குறுதிகள் 

கடந்த சில வருடங்களுக்கு (2012-2014) முன் கல்கிஸ்ஸை போன்ற இடங்களில் அப்பார்ட்மெண்ட்களை கட்டிய நிறுவனங்கள், இன்னும் சில மாதங்களில்  கடற்கரை வீதி (Marine Drive) மொறட்டுவை வரை விஸ்தரிக்கப்பட  போகின்றது. நீங்கள் சில நிமிடங்களில் சென்று விடலாம் என்று கூறியே தமது அபார்ட்மெண்ட்களை விற்று விட்டார்கள். ஆனால் இன்று அலுவலக நேரத்தில் வெள்ளவத்தையில் இருந்து கல்கிசை செல்வதற்கு ஒரு மணித்தியாலத்துக்கும் மேலே செல்வதுடன் கடற்கரை வீதி (Marine Drive) இன்னும் தெஹிவளையை கூட சரியான வகையில் அண்மிக்கவில்லை. மேலே சொன்னது வாடிக்கையாளர் நம்பும் பொய்களில் ஒரு உதாரணம் மட்டுமே. 

தவிரவும் கட்டுமான நிறுவனங்கள் ஒரு வருடத்தில் கட்டிட வேலைகள் முடிந்துவிடும் , இந்த திகதியில் குடிபுக முடியும் என்று வாக்குறுதி தந்து தான் பணம் வாங்குகின்றன. ஆனால் பெரும்பாலான நிறுவனங்களில் கொடுத்த வாக்குறுதியை மதிப்பதில்லை என்று  கூறும் பலர் , அவர்களுடன் தாமதத்துக்கான காரணம் கேட்டால் சரியா பதில் தருவதில்லை என்றும், விரும்பினால் உங்கள் பணத்தை திருப்பி தருகிறோம், நிறைய பேர் தங்களிடம் வாங்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். முதலில் பணம் கட்டியவர்களுக்கு வட்டியில்லாமல் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, வேறு ஒருவருக்கு அதிகரித்த விலையில் விற்க கூடிய வாய்ப்பு கட்டுமான நிறுவனத்துக்கு நிறுவனத்துக்கு இருப்பதால் அவர்களின் கை எப்போதுமே ஓங்கி இருப்பதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.  

உறுதி பத்திரங்களை இல்லை 

வெள்ளவத்தை , தெஹிவளை பிரதேசங்களில் கட்டபட்ட   பெருந்தொகையான அப்பார்ட்மெண்ட்களுக்கு உறுதிபத்திரங்கள் கட்டிட நிர்மாண நிறுவனங்களால் கொடுக்கப்படவில்லை. சரியான புள்ளிவிபரங்கள் இல்லை என்றாலும் 30-40% வீடுகளுக்கு உறுதிகள் இல்லை என்றே கூறுகிறார்கள் அப்பார்ட்மெண்ட்களை வாங்கி விற்பதில் உதவும் தரகர்கள். எத்தனையோ கம்பெனிகள் சரியான வகையில் உறுதிகளை கொடுக்காமல் வங்குரோத்து அடைந்து விட்டதாகவும், நாட்டினை விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் , எமக்கு அந்த உறுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை என்று கூறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இப்படி எத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இன்று பலர் முன் அறிமுகம் இல்லாத , கட்டிட நிர்மாண கம்பெனியின் உரிமையாளர் யார் என்றே தெரியாத, அனுபவம் இல்லாத கட்டிட நிர்மாண கம்பெனிகளுக்கு பணத்தை கட்டி ஏமாந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  

வாங்குவதில்  மட்டுமல்ல விற்பதிலும் சிக்கல்.

தமிழர்களால் வாங்கப்படும் அப்பார்ட்மெண்ட்கள் முக்கால்வாசி உடன் காசுக்கே வாங்கும் நிலைமை இருப்பதாக கூறும் வாங்கியாளர் ஒருவர், வாங்கும் போது அவசரத்தில் மக்கள் வாங்குவதாகவும் விற்க எத்தனிக்கையில் தான் அதில் இருக்கும் சிக்கல்கள் வெளிச்சத்துக்கு வருவதாக கூறினார்.சில  அபார்ட்மெண்ட்களுக்கு உறுதி இருந்தாலும், இரண்டு அறைகள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று அறைகளை கட்டியும், சரியான சதுர அளவில் இல்லாமலும் கட்டி,  கட்டிட நிர்மாண கம்பெனிகள் இலாபம் பார்த்துள்ளதால் அதனை விற்க முடியாது இருப்பதாகவும்  கூறினார்.  

இன்றைய நிலைமை என்ன?

சொத்துக்களுக்கான கேள்வி ஒரு சுழற்சியின் (Cycle)அடிப்படையிலானது. ஒவ்வொரு மூன்று நான்கு வருடங்களுக்கும் ஒரு சுழற்சி நடந்துகொண்டு இருக்கிறது. இப்போது நாம் அந்த சுழற்சியின் ஏற்றத்தில் ( Peak ) இருக்கிறோம். ஒவ்வொரு சுழற்சியின் போதும் பிரபல்யம் பெற்ற பல கட்டுமான நிறுவங்கள் காணாமல் கூட போயிருக்கின்றன . புதிய பல நிறுவனங்களும், பழைய நிறுவனங்கள் புதிய பெயரிலும் (வரி சலுகைகளுக்காக ) சந்தைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்குரோத்து அடையும் நிறுவனங்களுக்கு பணத்தை கட்டி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.   சுழற்சியின் ஏற்றத்தில் ( Peak )  இருக்கும் இன்றைய சூழலில் , ஏராளமான விளம்பரங்களையும், கட்டிட நிர்மாண கம்பெனிகள் வாடிக்கையாளர்களை அடைவதற்கு போட்டி போடுவதையும் பார்க்கும் போது.  கேள்வியை (demand)  விட அதிகப்படியான  வழங்கல் (supply) இருக்கும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலைமை இன்னுமொரு சுழற்சியின் இறக்கத்துக்கான ஆரம்பம் என்பதும், அப்பார்ட்மெண்ட்களை விற்க முடியாமல் சில நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் என்பதும், இந்த நிலைமையில் நுழைவது உறுதி இல்லாத வீடுகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பதும்  அப்பார்ட்மெண்ட்களை வாங்க உள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும். 

எச்சரிக்கையுடன் செயற்படவும்

அருகில் இருக்கும் விளம்பரம், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையினால் (Condominium Management Authority) வாடிக்கையாளர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட விளம்பரம். முறைகேடான கட்டிட நிர்மாண நிறுவனங்கள் பற்றி   அவர்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும். அப்பார்ட்மெண்ட்களை பதிவு செய்வதற்காக பணத்தினை கட்டும் முன்னர், ஆதனத்தின் உரிமையாளர் (title /ownership), ஆதனத்தின் உறுதிப்பத்திரம் (deeds), பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் உரிமத்தை உறுதிப்படுத்தும் பத்திரங்கள் (Ownership Certificate ), கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையினால் (Condominium Management Authority) வழங்கப்படட அனுமதி பத்திரம்,நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கும் கட்டிட மாதிரிக்காக (Building Plan )  தகவல்களை சரிபார்த்து அதன் பிரதிகளை பெற்றுக்கொள்ளும் படியும்  படியும் அதில் கூறப்பட்டுள்ளது. 

அதிகமாக பணம் புரளும்  கட்டுமான  துறையில் ஏமாறுவதற்கு, ஏமாற்றுவதக்குமான வாய்ப்புக்கள் அதிகம் , போட்டி போட்டு கொண்டு கண் மூடி தனமாக முடிவுகளை எடுக்காமல் , கட்டுமான  நிறுவனங்கள் சொல்லும் ஏராளமான விற்பனை தந்திரங்களில் சிக்கி தவிக்காமல், சரியான பூரணமான தகவல்களில் அடிப்படையில் , பலரிடம் விசாரித்து அறிந்து தெளிவான முடிவுகளை எடுப்பது இழப்புக்களை தவிர்க்கலாம்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *