Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென்னிலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் யாழ்ப்பாணத்து கள்ளு!

தென்னிலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் யாழ்ப்பாணத்து கள்ளு!

-கே.வாசு-

தமிழ் மக்களின் வாழ்வியல் என்பது தனித்துவமான அடையாளங்களையும், பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும் கொண்டமைந்தது. அவர்கள் வாழும் பிரதேசங்கள் கூட தனித்துவ தன்மைகள் கொண்டவையே. தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களது வாழ்வுடன் ஒன்றித்துப் போன சில பழக்கவழக்கள்கள், தொழில்முறைகள், இயற்கை அமைப்பு என்பன காணப்படுகின்றன. அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் அடையாளமாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் விளங்குபவை பனைமரங்களே. இன்று புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்தாலும் எல்லோர் மனங்களிலும் ‘அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்’ என்ற வார்த்தை உச்சரிப்பு அடிக்கடி வந்து செல்வதை மறுத்துவிடமுடியாது. ஏனெனில் அவை வெறும் மரங்கள் என்பவற்றுக்கு அப்பால் அவை மக்களின் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயுள்ளன. அவற்றில் இருந்து பெறும் பயன்களும் மிக அதிகமானவையே. ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இப் பனை மரங்கள் காணப்படுகின்ற போதும் வடக்கின் ஒரு அடையாளமாக இன்று வரை அது திகழ்கின்றது. அதேபோன்று தான் தென்னையும் ஒரு முக்கியமான பயிராக உள்ளது. அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வருமானத்தை ஈட்டித் தரும் பெருந்தோட்டப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்டு இன்று நாடு பூராகவும் பரவிக் காணப்படுகின்றது. தென்னை முக்கோண வலயத்திற்கு அப்பால் வடக்கிலும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாகவே உள்ளன. தென்னை, பனை ஆகிய இரண்டில் இருந்தும் பெறப்படும் பயன்கள் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகவே உள்ளது. அதன் காரணமாகவே இரு மரங்களையும் இணைத்து பேசப்படுகின்றது.

பனை மரத்தில் இருந்து பெறப்படும் வெட்டு மரம், பனம்பழம், நுங்கு, பாலை, ஓலை எனப் பலபகுதிகளும் மக்களால் பயன்பாட்டுக்காக எடுக்கப்படுகின்ற போதும் பனை மரத்தின் பாலையில் இருந்து பெறப்படும் பானம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதனை கள்ளு என அழைப்பார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பனை மரத்தில் கள்ளு பெறும் சீவல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கும் காலம் தை, மாசி, பங்குனி தான். அந்தக் காலப்பகுதியில் வடக்கில் கள்ளுக்கு செல்லும் முதியவர்கள் ‘ இனியென்ன கொடி ஏறிற்று. நமக்கு ஒரே வேட்டை தான்’ என்பார்கள்.

பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை முட்டி என அழைக்கப்படும் ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி அதனை மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும். புளிப்பு கலந்த சுவையுடன் உள்ள இந்த கள்ளு ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும். பனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.

பனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, யாழ்ப்பாணத்தின் கள்ளு என்பது தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள், சுற்றுலா பயணிக்கள் ஆகியோரால் மிகவும் விரும்பப்படுவதொன்று. கள்ளு எடுக்க ஒருவர் மரத்தில் ஏறி நிற்கின்ற போது ‘கையில் ஒரு பிளாஸ்டிக் கோப்பையுடன் அல்லது ஓலையில் பிளா செய்து கள்ளினைப் பெறுவதற்கு மரத்தடியில் குந்தி இருப்பவர்கள்’ அதிகம். ஏனெனில் தனிமரக்கள்ளுக்கு ஒரு கிராக்கி இருக்கிறது. தனிப்பனையில் கள்ளு பெற்று குடிக்கின்ற போது புளிப்பு தன்மை குறைந்து இனிப்புத் தன்மை அதிகமாக இருக்கும் என கூறுபவார்கள். அதனால் கள்ளு சீசன் காலத்தில் பனைமரங்களுக்கு கீழ் எப்பொழுதும் நடமாட்டத்தை காணக் கூடியதாகவும் இருக்கும்.

யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு, கீரிமலை, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்கள் பனைவளம் அதிகம் கொண்ட பகுதியாகவும் கள்ளுக்கு கிராக்கி கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. கள்ளு என்றதும் அனைவருக்கும் உடனடியாக ஞாபகத்திற்கு வரும் ஒரு பகுதி கீரிமலையில் உள்ள ‘கூவில்’ கிராமம். அங்கு பெறப்படும் கள்ளு தனிச்சுவை என பலரும் கூறி வருகின்றார்கள். கீரிமலை கடற்கரையின் மண் வள தன்மை காரணமாக கள்ளு அதிகம் பாணி தன்மை கொண்டது. இதன் காரமாண அதிகம் விரும்புறாங்கள். இதை விட பனை மரம் சீவுறவங்களின் திறமை இந்த கள்ளின் ருசிக்கு காரணம் என்கிறார் அப்பகுதியில் சீவல் தொழில் செய்யும் ஒருவர்.

தென்னிலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்து கள்ளினை ருசிக்காமல் போவதில்லை. தென்னிலங்கை மக்களாலும் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக யாழ்ப்பாணக் கள்ளு இருக்கிறது. எங்களுக்கு யாழ்ப்பாணத்தில் விரும்பம் இல்லாட்டிலும் யாழ்ப்பாணக் கள்ளை மறக்க முடியாது என் தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் அடிக்கடி பேசிக் கொள்வதை பலரும் அவதானித்திருப்பார்கள்.

யாழ்ப்பாணம் தவிர வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பகுதிகளிலும் பனம் கள்ளுக்கு கிராக்கி கணாப்படுகின்றது. அப்பகுதிகளிலும் சீவல் தொழில் இடம்பெற்று வருகின்றது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஓப்பீட்டு ரீதியில் பனை மரம் குறைந்த வவுனியாவில் கடந்த வருடம் 9 இலட்சம் லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் போத்தல் கள்ளு தவிர்ந்த 5 இலட்சம் லீற்றர் உடன் கள்ளு விற்பனையாகியுள்ளது என மதுவரித் திணைக்கள புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. வடக்கின் ஏனைய மாவட்டங்களில் கள்ளு விற்பனை இதை விட அதிகமாகவே உள்ளது. இத் தொழில் பல குடும்பங்களின் பிரதான ஜீபனோபாயத் தொழிலாகவும் உள்ளது. பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வந்த சீவல் தொழில் தற்போது அருகிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இத் தொழிலில் ஈடுபடுவர்களின் பிள்ளைகள் படித்து வேறு வேலைவாய்ப்புக்ளைப் பெற்று செல்வதாலும் இத்தொழிலை சாதியத்தின் அடிப்படையில் சிலர் நோக்குவதாலும் இதில் ஈடுபட பலரும் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். இது, தவிர நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பனைவளம் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. போர் நடைபெற்ற பகுதிகளுக்குள் அகப்பட்டும், இராணுவ முன்னரங்க நிலைகளின் பதுங்கு குழிகள் அமைப்பதற்காக வெட்டப்பட்டும் இம் மரங்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன. இதனால் இத்தொழில் செய்ய முடியாத நிலையிலும், இதில் இருந்து வருமானம் பெற முடியாத நிலையிலும் பல குடும்பங்கள் உள்ளன. இதனால் சீவல் தொழில் அடுத்து வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

அதிகரித்த மதுபானசாலைகளின் வருகையும், அளவுக்கு அதிகமான போதை தன்மை கொண்ட மதுபானங்களின் விற்பனையாலும் கள்ளு விற்பனை குறைவடைந்து சென்றாலும் யாழ்ப்பாணத்து கள்ளுக்கான கிராக்கி இன்றும் குறைந்து விடவில்லை என்பதே உண்மை. எதையும் அளவுடன் எடுத்தால் உடல் நலம்பெற உதவும். அளவுக்கு மீறினால் உடல் நலத்திற்கு கேடு என்பதையும் மறுத்துவிடமுடியாது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *