ஆய்வு (Research) மற்றும் வெளியாட்களிடம் பணிகளை ஒப்படைக்கும் (Outsourcing) தொழில்முயற்சிகளில் வட மாகாண பெண்கள் மத்தியில் ஊக்கமும் ஆர்வமும் ஏற்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன், யுத்தத்துக்கு பின்னரான தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தனியார் துறையின் நிலையான அபிவிருத்தி மற்றும் முதலீட்டு மேம்பாடு ஆகியவற்றில் தான் பற்றுறுதியுடன் இருப்பதாக கூறியிருக்கிறார்.
NORO Solutions Research and Outsourcing நிறுவனத்தின் முதலாவது ஆண்டு வர்த்தக நிறைவு நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் நடைபெற்றபோது வழங்கியிருந்த செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் நீதியரசர் விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்துகொள்ள இருந்தபோதிலும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது உரையை அவரது மூலோபாய ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் வாசித்தார்.
ஆய்வு மற்றும் பணிகளை வெளியக நிறுவனங்களுக்கு வழங்கும் தொழில்துறையில் NORO Solutions மிகவும் குறுகிய காலத்தில் ஆற்றியிருக்கும் பணிகள் மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் முன்னுதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்த விக்னேஸ்வரன் NORO Solutions நிறுவனத்தின் தனித்துவம் மிக்க சேவைகள் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹட்டன் நஷனல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் சுந்தரேஸ்வரன், யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன தலைவரும் IIS நிறுவன இஸ்தாபகருமான விக்னேஷ் மற்றும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
NORO Solutions நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஆற்றிவரும் சேவை மிகவும் துணிச்சல் மிக்கதும், முன்னுதாரணமானதும் தனிச்சிறப்பு மிக்கதும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.