Search
Thursday 21 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல பில்லியன் இலாபம் உழைக்கும் நுண்நிதி (Micro Finance)  நிறுவனங்கள்; பாதிக்கப்படும் ஏழை மக்கள்

பல பில்லியன் இலாபம் உழைக்கும் நுண்நிதி (Micro Finance)  நிறுவனங்கள்; பாதிக்கப்படும் ஏழை மக்கள்

நுண்நிதி (micro finance) நிறுவனங்கள் வங்கிகளின் சேவை பரப்புக்கு அருகில் இல்லாத, வங்கிச் சேவையை இலகுவில் அடைய முடியாத ஏழை மக்களுக்கு கடன்களையும் ஆலோசனைகளையும் வழங்கி, அவர்களுக்கு இடையில் முயற்சியாண்மையை பெருக்கி, ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்காக கொண்டு ஆரம்பிக்க பட்ட நிறுவனங்கள் ஆகும்.

ஆனால் இலங்கையில் நுண்நிதி  நிறுவனங்கள் ஏழை மக்களிடம் இருந்து பில்லியன்களில் இலாபம் உழைக்கின்றன. ஏழை மக்களுக்கு கடன் வழங்கி , அவர்களின் வாழ்க்கையின் அபிவிருத்திக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய நுண்நிதி நிறுவனங்கள் எப்படி பில்லியன் கணக்கில் இலாபம் காட்டுகின்றன என்பது புதிரானது. நுண்நிதி நிறுவனங்கள் தங்களது கட்டிடங்களை பிரமாண்டமாகவும், கவர்ச்சி மிக்க பெயர் பலகைகளுடன்  தங்களது நிறுவனத்தின் விளம்பரத்தை பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்துவதற்கு பின்னால் நிறையவே ஏழை மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டு இருக்கிறது.

புத்திசாலித்தனமான சுரண்டல்.

கல்லப் ஹெல்த்வே (Gallup-Healthway) என்ற நிறுவனம் 2014ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இலங்கையில் வாழும் 84 சத வீதமான மக்கள் நிதி முகைமைத்துவம் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும், நிதி தொடர்பான பல்வேறு கஸ்டங்களை எதிர் நோக்குகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது அறிவின்மையை நுண்நிதி நிறுவனங்கள் மூலதனமாக கொண்டு இலாபம் உழைக்கும் நிலைமையே இன்று காணப்படுகிறது. நுண்நிதி (micro finance) நிறுவனங்களினால் வடிவமைக்கப்படுகின்ற நிதி வழங்கல் உபாயங்கள் காரணமாக  கடன் நிலமையானது சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் ,  பல்வேறு பகுதிகளிலும் அதிகளவான தாக்கத்தினை செலுத்துவதாக அமைகின்றது. நிதி நிறுவனங்களானது  தமக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஒர் சமச்சீர் தன்மையற்ற, சரியான தகவல்களை வழங்குவதை தவிர்ப்பதன் மூலம்  விவேகமான முறையில் மக்களை சுரண்டுவதோடு பல அனுகூலங்களையூம் பெற்றுக்கொள்கின்றன.

மனிதாபிமானம் இன்றி செயற்படும் ஊழியர்கள்.

யாழ்பாணத்தில் இருக்கின்ற நுண்நிதி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கின்ற போது . நாங்கள் கடன் வழங்குகின்ற போது வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வல்லமை கொண்டுள்ளார்களா என சந்தேகம் உள்ள பொழுதும்,  இப்பிரதேசத்தில இயங்குகின்ற ஏனைய போட்டி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாகமாகவும், நாங்கள்  மாதாந்தம் அடையவேண்டிய கடன் வழங்கல் இலக்கு பற்றிய அழுத்தம் காரணமாகவும் வறிய , திருப்பி செலுத்த ஆற்றல் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க வேண்டி உள்ளதாக குறிப்பிட்டார்.

பத்து வாடிக்கையாளர்களை எடுத்து கொண்டால் ஒருவர் மட்டுமே தாங்கள் வாங்கிய கடனை, வட்டியுடன்  திருப்பி செலுத்துவதற்கான வல்லமையை கொண்டிருக்கின்றார்கள் எனவும்  ஏனைய  வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு அதிகளவாக கஸ்டப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிடடார்.  தான் அந்த தொழிலில் இருந்து விலகுவதற்கு பிரதான காரணம், தனது மனசாட்சிக்கு ஏற்ப  செயற்படமுடியவில்லை என்று கூறிய அவர், கடன் கொடுப்பதற்காகவும், நிதி நிறுவனங்களின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவும்  மக்களை கஸ்டப்படுத்தி துன்பத்துக்கு ஆளாக்கின்ற துர்பாக்கியமான நிலமை ஏற்பட்டதாகவும் கூறினார். ஊர் மக்களை தரக்குறைவாக நடத்த நேர்ந்தாலும், மக்கள் தனது நடவடிக்கைகள்  மூலம் கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்ந்ததால் மன அழுத்தத்தில் விலகியதாகவும் கூறினார்.

ஏழை மக்களை சுரண்டும் முதலாளி வர்க்கம்

Microfinanceஇலங்கை நுண்நிதி நிறுவனங்களின் கழகம் (Micro- finance Association Sri Lanka) வெளியிட்ட தகவல்களுக்கு அமைவாக, இத்தகைய நிதி நிறுவனங்களில் 90 வீதமான பெண்களே வாடிக்கையாளர்களாகவும் கடனாளிகளாகவும்  இருக்கின்றார்கள். நுண்நிதி நிறுவணங்களில் கிட்டத்தட்ட 77 நிறுவனங்கள் இந்த அமைப்பில் பதிவு  செய்யப்பட்ட நிறுவனங்களாக காணப்படுவதோடு 26 நிறுவனங்கள் மட்டுமே தங்களது தரவுகளை வழங்கி உள்ளன. இந்த 26  நிறுவனங்கள் மட்டும்  7.4 பில்லியன் ரூபாய்களை கடனாக வழங்கியுள்ளன. தரவுகளை தராத நிறுவனங்களை கணக்கிட்டு பார்க்கும்  போது பல பில்லியன் ரூபாய் தொகையை வாடிக்ககையாளர்களுக்கு வழங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில நிறுவனங்கள் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் மேலதிகமாக இலாபம் பெற்றுள்ளன. இத்தகைய நுண்நிதி நிறுவனங்கள் சரியான முறையில் தங்களது செயற்பாடுகளை புதிய தொழில் முயற்சிகளுக்காகவும்,  உற்பத்தியை தூண்டும்  வகையிலும்,  வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்திலும் செயற்பட்டால் இத்தகைய நிதி நிறுவனங்கள் பல பில்லியன் ரூபாய்களை வருமானமாக பெறுவது அசாத்தியமான ஒன்றாகவே காணப்படும். ஏழை மக்களின் நாளாந்த உழைப்பினை சுரண்டுவதில் இந்த நிறுவனங்கள் நிறையவே வெற்றி பெற்று  இருக்கின்றன.

ஏழை பெண்களே நுண்நிதி நிறுவனங்களின் பிரதான குறி 

குறைந்த வருமானம் பெறுகின்ற பெண்கள் நிதி முகாமைத்துவம் சார்ந்த அறிவு குறைவு , நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பில் போதுமான விழிப்புணர்வு  இல்லை. அதன் காரணமாக கடனை திருப்பி செலுத்துகின்ற போது பெரும் சங்கடங்களையும் இடர்பாடுகளையம் எதிர்நோக்குகின்றார்கள்.நுண்நிதி நிறுவனங்களானது தங்களது இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக வறுமையை ஒழிப்பதற்கான ஒரு ஊடகமாக தங்களை மக்களிடம் அறிமுகம் செய்கின்றனர். (வறுமையை ஒழிப்பதற்காக அவர்கள் செயற்படுகின்ற விதம் தொடர்பில் குறைந்தளவான சான்றுகளே கிடைக்கப்பெற்றுள்ளன). சிறு எண்ணிக்கையிலான பெண்களே தாங்கள் பெற்ற கடன்களை வியாபார முயற்சிகளில் முதலீடு செய்கின்றார்கள், ஏனையவர்கள் நுகர்வு தேவைகளுக்காகவே தாங்கள் பெற்ற கடன்களை பாவிக்கின்றார்கள்.

குறைந்தளவு வருமானத்தை பெறும்  கல்வியறிவற்ற ஏழைப் பெண்களிடம் இலகுவாக கடன்களை அதிகளவான வட்டி வீதங்களில் வழங்குகின்றார்கள். இத்தகைய பெண்களிடம் இருந்து குறைந்தளவான வட்டி வீதத்தினை இந்த  நுண் நிதி நீறுவணங்கள் அறவிடலாம் ஆயினும், இந்த நிதி நிறுவணங்கள் நாளாந்த, வாராந்த  அடிப்படையில் இந்த ஏழை பெண்களிடம் இருந்து மிகக்கூடுதலான வட்டியை பெற்றக்கொள்கின்றன உதாரணமாக  25,000 ரூபாயை கடனாக வழங்கும் இந்த நிறுவனங்கள், வட்டியும் முதலுமாக வாராந்தம்  1,000 ரூபா வீதம் 10 மாதங்களுக்கு 40,000 ரூபாயை அரவிடுகிறது. இது கடனாக பெற்ற தொகையில் வருடத்துக்கு 72% வட்டி  வீதமாகும்.

இந்த ஏழை பெண்கள் தாங்கள் பெற்ற கடன்களை வேறு தேவைகளுக்ககாக பயண்படுத்திய பின்னர் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வராந்த அடிப்படையில் கடன்களை அறவிடுவதற்காக வீடுகளுக்கு வரும் போது தங்களது கடன்களை அடைப்பதற்காக தங்களது தங்க நகைகளை ஈடு வைத்து அதன் மூலம் கடன்களை அடைத்து கொள்கின்றார்கள். கடந்த காலங்களில் இலங்கை பெண்களிடம் நிறையவே சேமிப்புக்கள் தங்க நகைகளாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறி, தங்கம்  கடன்களுக்கான அடகு வைக்கப்பட்டு, தங்களுக்குள் எவ்வளவு கடன் இருக்கிறது என்றே பேசிக்கொள்கிறார்கள்.

நுண்நிதி நிறுவணங்களின் மீது போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லாமை

இலங்கையின் நுண்நிதி நிறுவனங்களின் முறைகேடான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உடனடியான நடவடிக்களை எடுப்பது மட்டுமல்லால் அதனை ஓழுங்குபடுத்தி மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் செயற்படுத்த வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் பின்வரும் முறை கேடான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

• வீடு வீடாக சென்று கடன்களை மட்டும் முதன்மைப்படுத்தி சந்தைப்படுத்தல்

• வாடிக்கையாளர்களாக வரும் பெண்களையே, கடன்களை சந்தைப்படுத்த நிர்பந்தித்தல் (எந்த வித கொடுப்பனவோ, சம்பளமோ இல்லாமல்)

• ஒழுங்குபடுத்தபடாத உயர் வட்டி வீதம்

• சந்தைப்படுத்தும் முகவர்களிடம் உறுதிப்படுத்துவதற்கு போதுமான ஆவணங்கள் இல்லாமை.

• மக்களுக்கு புரிந்துகொளள் முடியாத சிக்கலான விளம்பர தன்மை காரணமாகவும்  கடன்களை பெறுகின்றவர்களுக்கு சரியான பதிலளிக்ககூடிய சரியாக பயிற்றப்படாத நுண் நிதி பற்றிய அடிப்படை தெரியாத  உத்தியோகத்தர்கள்

• பிரச்சினைகள் மற்றும் தவறுகள் ஏற்படுகின்ற போது இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்வதற்கு சரியான வழி தெரியாது இருக்கின்றமை மற்றும் பெரும்பாலான மக்களுக்கு இது பற்றி முறையிடுவதற்கு தமக்க உரிமை இருக்கின்றது என்பது தொடர்பாக அறிவூட்டல் இடம்பெறுவதில்லை.

• குழு கடன் திட்டங்களில், ஒரு சிலர்  கட்டணங்களை செலுத்த தவறுகின்ற சந்தர்பங்களில் குழுவாக சேமிக்கின்றவர்கள் தங்களது சேமிப்புக்களை இழக்கின்ற நிலைமை

• ஓவ்வொரு மாதமும் கட்டணங்களை அறவிடுவதற்காக உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கே வருதல்.

அதிகப்படியான மற்றும்  போலியான  சந்தைப்படுத்தல்

நுண்நிதி நிறுவணங்கள் பொதுவாக தங்களின் சேவைகளை  மேலதிகமாக சந்தைப்படுத்தி தனது ஆக்கிரமிப்பை நிலைப்படுத்தியுள்ளன . இந்த நுண்நிதி நிறுவனங்களில் வேலை செய்யூம் பெண்கள் தங்களது அயலவர்களை கடண்களை பெறுதற்காக சிபரிசு செய்து அழைத்து வருகின்ற போது அவர்களுக்கு இலகுவாக இந்த கடண்கனை பெற்றுக்கொள்வதற்கான வாய்புக்கள் கானப்படுகின்றன.

சில நிறுவனங்கள்  வாடிக்கையாளர்களுக்கு தேவை ஏற்படாத போதும் வற்புறுத்தி கடன்களை கொடுக்க முயற்றசிக்கின்றனர். நிதி நிறுவனங்களில் தொழில் ரீதியற்ற வியாபார நடவடிக்கைகள் பொதுவான ஒரு விடயமாக காணப்படுகின்றது. ஆனால் அது நுண்நிதி

நிறுவனங்களில் பொறுத்தவரையில் ஒரு மட்டுப்படுத்தபடாத விடயமாகவே காணப்படுகின்றது.

நிதி பாவணையாளர்களை பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள்.

இலங்கையின் நுண்நிதி துறைகளில் பின்பற்றப்படுகின்ற நடைமுறைகள் சிக்கலானதும், இலகுவில் விளங்கிகொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. நிதி துறை தொடர்பான அறிவு  முக்கியமானதாக கருதப்படுகின்ற அதேவேளை,  நிதி நிறுவனங்களில் துஸ்பிரயோகம் மற்றும் தவறான வழிநடத்தல் என்பன தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது  மிகவும் முக்கியமானதாகும். இந்த நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக மக்களின் கடன் சுமை அதிகரிக்கபடுகின்ற அதே வேளை நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பாதுகாக்க கூடிய போதுமான சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்தாததன்  காரணமாக மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள். ஒரு சமச்சீரான தகவல்களை வழங்குவதற்கும் நிதி நிறுவனங்களையும் மக்களையும் இணைத்து ஒரு ஒழங்கான நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சரியான சட்ட வரையரைகளை அமுல் படுத்துவதுடன் அவை சரியான முறையிலும் பின்பற்றப்படுதல் வேண்டும்.

இலங்கையின் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய,  பாவனையாளர்களின் பொதுவான பாதுகாப்பதற்கு ( consumer protection) சட்டங்கள்  இருக்கின்றது. அரசாங்கமானது கிராமபுறங்களுக்கு நிதியை திருப்பி அவர்களுக்கு அதிகளவான கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதே தவிர,  இந்த பாவனையாளர் சட்டங்களை அமுல்படுத்துவதிலும் பாவனையாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கு அதிகளவான அக்கறை செலுத்துவதை நாம் காணக்கூடியதாக இல்லை.

இத்தகைய மோசடி செய்யும் நோக்குடன் செயற்படும்  நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து நாட்டின் பிரஜைகளை பாதுகாப்பது என்பது  முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விடயமாகும். இன்றைய கால கட்டத்தில் மேலதிகமாக  மக்களுக்கு கடன்களை கொடுக்கின்ற நடவடிக்கைளை தவிர்த்து, இத்தகைய நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக சரியான சட்டங்கள் அமுல்படுத்தபடுவது மிகவும்  முக்கிமான  விடயமாக இருக்கின்றது. இலாப நோக்கில்  செய்யப்படுகின்ற வியாபாரமும் சமூக ரீதியாக செய்யப்படும வியாபாரமும் இரண்டு வித்தியாசமான நோக்கங்களை கொண்டு காணப்படுகின்றது. இலாப நோக்கில்  செய்யப்படுகின்ற வியாபாரங்கள் எவ்வித சட்ட ஏற்பாடுகளும் அற்ற விதத்திலும் சமூகத்தில் பாதிக்கப்படுகின்ற மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் இன்றி இலாப நோக்கத்தினை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன. உண்மையாகவே இத்தகைய நுண்நிதி நிறுவனங்கள் இலாப நோக்கு இல்லாமல் சமூக நோக்கில ஏழை மக்களின் வாழ்க்ககை தரத்தினை மேம்படுத்துவதற்கான அக்கறை கொண்ட நிறுவனங்களாக இருந்தால்.  நிதியியல் தொடர்பான கல்வியை மக்கள மத்தியில் முன்னெடுத்து சென்று விழிப்புணர்வூ ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலமாக சுரண்டல் நிதி கம்பனிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதுடன் ஒரு நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *