Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈழத்தமிழர் நெல்சன் சிவலிங்கம்

பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈழத்தமிழர் நெல்சன் சிவலிங்கம்

Virgin Media Business இன் பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் ஈழத் தமிழரான நெல்சன் சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். விருதுபெற்ற படத் தயாரிப்பாளரும் தொழில் முயற்சியாளருமான நெல்சன் சிவலிங்கம் Wonderush என்ற நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுபணிப்பாளருமாக பணியாற்றிவருகிறார்.

பிரித்தானியாவின் அஸ்ரன் பல்கலைக்கழகத்தில் வர்த்தக மற்றும் முகாமைத்துவ துறையில் பட்டப் படிப்பை 2011 இல் பூர்த்தி செய்த உடனேயே “ஒரு நிமிட லண்டன்” ( One Minute London) என்ற மூலம் உணவு, குடிவகைகள் மற்றும் சேவைகளை பதிவு செய்யும் காணொளியை (video) அடிப்படையாக கொண்ட இணையத்தளத்தை புதுமையான முறையில் உருவாக்கினார். இவரது இந்த தொழில்முயற்சி பிரித்தானியாவின் முதல் 100 புதிய தொழில்முயற்சி ஆரம்பிப்புக்கள் பட்டியலில் இடம் பிடித்ததுடன் வர்த்தக விருதுகளையும் பெற்றது. பிரசித்திபெற்ற Evening Standard பத்திரிகை இந்த தொழில்முயற்சியை ‘ உணவின் எதிர்காலம்’ என்று வர்ணித்து.

Nelson 1

2015 ஆம் ஆண்டு wonderush.com என்ற நிறுவனத்தை நெல்சன் ஸ்தாபித்தார். லண்டனில் ஒரு நாளில் ஒருவர் என்ன விடயங்களை செய்யலாம், பார்க்கலாம் என்பவற்றை இந்த இணையத்தளம் மிகவும் புதுமையான முறையில் குறிப்பிட்ட மாதக் கட்டணம் ஒன்றை அறவிட்டு இந்த இணையம் வழங்குகின்றது. இது ஸ்தாபிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்திலேயே அபரிமிதமான வளர்ச்சியையும் கண்டது. மிகக் குறுகியகாலத்தில் இளம் வயதில் ஒரு புதுமையான தொழில் முயற்சியாளராக வளர்ந்திருப்பதை காரணத்தில் கொண்டே நெல்சன் பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

“ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய மிக மோசமான மற்றும் மிகச் சிறந்த நிலைமைகளை நான் ஆராய்வேன். இவற்றை எடைபோட்டு பார்க்கின்றபோது, ஏற்படக்கூடிய மிகச் சிறந்த நிலை மோசமான நிலைமையினை மேவி நிற்கிறது” என்று பிரித்தனியாவின் ‘Dream Nation’ என்ற ஒரு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு சில தினங்களுக்கு முன்னர் நெல்சனை பேட்டி கண்டபோது தெரிவித்தார். அத்துடன், ‘தைரியம்: ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி’ ( Courage: the Joy of Living Dangerously) என்ற ஓஷோ (Osho) என்பவர் எழுதிய புத்தகத்தை கட்டாயமாக அனைவரும் படிக்கவேண்டும் என்று கூறுகிறார்.

இந்த புத்தகத்தில் ‘ தைரியம் என்பது அச்சம் இல்லாத ஒரு நிலை அல்ல ‘ என்று ஓஷோ கூறுகிறார். நிறைந்த அச்சங்களுடனும் சாவாலை ஏற்றுக்கொள்வதே தைரியம் என்றும், திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த அச்சங்கள் மறைந்துவிடும் என்று இந்த புத்தகத்தில் அவர் விளக்குகிறார்.

Nelson_-_Profile_2-768x544

புதிதாக தொழில்முயற்சி ஆரம்பிப்பவர்களுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள் என்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு நெல்சன் அளித்த பதில் முக்கியமானது. ” ஒரு தொழில்முயற்சியை கட்டி எழுப்புவது என்பது வெறுமனே அந்த முயற்சி பற்றிய ஆரம்ப எண்ணக்கருவுடன் முடிந்துவிடுவதில்லை. இதுபற்றி நன்றாக ஆராயவேண்டும். அனேகமானவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு எண்ணக்கருவை (தொழில்முயற்சி) சிந்தித்துவிட்டு, உடனடியாகவே அதனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அதிகம் பணம் மற்றும் வளங்களை செலவிடாமல் ஒரு வியாபாரத்தை செய்வதற்கான வலிகள் உண்டு. பணத்தை செலவிட முன்னர் உங்கள் எண்ணக்கரு சரிவருமா அதற்கான தேவை இருக்கிறதா என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்கவேண்டும் ” என்று கூறுகிறார்.

வெற்றியை அடைவதில் தாமதம் அல்லது கஷ்டங்கள் ஏற்படுகின்றபோதிலும், பற்றுறுதியுடன் செயற்படுவதும் ஆபத்தை (risk) எதிர்கொள்ளுகின்ற மனப்பாங்கும் தனது தொழில் முயற்சியில் தான் கற்றுக்கொண்ட பெறுமதியான படிப்பினை என்று கூறுகிறார் நெல்சன். ” மிகவும் அற்புதமான (தொழில்முயற்சி) எண்ணக்கருவை கொண்டிருந்து அது தொடர்பில் எதுவுமே செய்யாமல் இருப்பவர்களுக்கும் அதுதொடர்பில் ஏதாவது செய்பவர்களுக்கும் இடையில் இருக்கின்ற பெரும் இடைவெளி, ஆபத்தை எதிர்கொள்ளுவது தொடர்பிலான இந்த மனப்பாங்குதான்” என்கிறார் அவர்.

நன்றி: தமிழ் வர்த்தக தளம் (www.tamiltradepost.com)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *